• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

ஜாக் ஃபெயின்ட்: லடாக் முதல் குமரி வரை 74 நாளில் 3,876 கிமீ ஓடி சாதித்த அல்ட்ராமராத்தான் வீரர்

Byadmin

Dec 21, 2025


காணொளிக் குறிப்பு, மூளைக் கட்டியுடன் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலான தூரத்தை ஓடியே கடந்த அல்ட்ராமாரத்தான் வீரர்

காணொளி: மூளை புற்றுநோய் பாதிப்புடன் லடாக் முதல் குமரி வரை 74 நாளில் 3,876 கிமீ ஓடி சாதித்த வீரர்

32 வயதான பிரிட்டிஷ் அல்ட்ராமாரத்தான் வீரர் ஜாக் ஃபெயின்ட், இந்தியாவின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3,876 கிலோ மீட்டர் தூரத்தை 74 நாட்களில் ஓடிக் கடந்துள்ளார்.

2019இல் ஜாக்கிற்கு ‘ஒலிகோடென்ட்ரோகிளியோமா’ (Oligodendroglioma) எனப்படும் குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவர் 40 வயதுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய ஜாக் ஃபெயின்ட், “மூளைக் கட்டி கண்டறியப்படுவதற்கு முன்பு, நான் மிகவும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தேன். நன்றாக சாப்பிட்டேன், குடித்தேன், புகைப்பிடித்தேன், எந்த விதமான உடற்பயிற்சி முறைகளையும் பின்பற்றவில்லை, உடல் எடை அதிகமாக இருந்தது, நான் எதைச் சாப்பிடுகிறேன் என்பதில் எந்தக் கவனமும் இல்லை. என்னுடைய நிலை பற்றி தெரிந்தபிறகு, ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேன். தென் அமெரிக்காவில் ஆறு மாதங்களும், இந்தியாவில் நான்கு மாதங்களும் கழித்தேன்.” என்றார்.

“இந்தியாவில் கழித்த அந்த நான்கு மாதங்கள் எனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.” என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

ஜாக்கின் 74 நாள் இந்திய ஓட்டம் என்பது அவரது தனிப்பட்ட இலக்கு மட்டுமல்ல, மூளைக் கட்டி மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்குமான ஒரு வழியாகவும் இருந்தது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது மூளைக் கட்டியைத் தான் கையாண்டு வருவதாக ஜாக் கூறுகிறார் – ஆனால் இந்த முறை அனைவருக்கும் ஏற்றது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நவம்பர் 12-ஆம் தேதி கன்னியாகுமரியில் ஜாக் தனது ஓட்டத்தை நிறைவு செய்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin