தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார்.
தன்னைப் பெற்ற தாயாக இருக்கலாம் என்று நினைத்த பெண்ணை கடைசியில் கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது தெரிந்தே இருந்தது.
ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.
“தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினார், கூச்சலிட்டார். என்னுடன் பேச எதுவும் இல்லை” என்று அவர் பேசியதை நினைவுகூர்ந்தார் தமுனா. அந்த பெண்ணின் பதிலால் வருத்தமடைந்ததை விட, தான் வியப்படைந்ததாக என கூறினார் தமுனா.
“நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். ஆனால் அவருடைய எதிர்வினை என்னால் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது” என்கிறார் 40 வயதான தமுனா.
ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயை தொலைபேசியில் அழைத்தபோது, அவரது தாய் தன்னை விரும்பவில்லை என்பது தமுனாவுக்குத் தெரிந்து விட்டது.
ஆனால் தமுனா தனது முயற்சியைக் கைவிடவில்லை. தன்னைத் தத்துக்கொடுத்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள விரும்பினார்.
மேலும் முக்கியமாக, தனது தாய்க்கு மட்டுமே தெரிந்த தன் தந்தையின் பெயரை அறிய விரும்பினார்.
பெற்றோரை அறிந்துகொள்ளும் தமுனாவின் தேடல் 2016-ல் தொடங்கியது. தன்னை வளர்த்த தாய் மறைந்த பிறகு, அவரது வீட்டை ஒரு முறை சுத்தப்படுத்திய போது, தனது பெயரில் இருந்த பிறப்புச் சான்றிதழைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதில் தனது பிறந்த தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட பிறகு, தான் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமுனாவிற்கு ஏற்பட்டது.
சில தேடல்களை மேற்கொண்ட பிறகு, தன்னை பெற்றெடுத்தவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, “வெட்ஸெப் (Vedzeb)” (“நான் தேடிக்கொண்டிருக்கிறேன்”) என்ற பேஸ்புக் குழுவை தொடங்கினார்.
தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, அவர் ஜார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதித்து வந்த குழந்தை கடத்தல்களை வெளிக்கொண்டுவந்தார்.
பல ஆண்டுகளாக, பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பொய் சொல்லப்பட்டு, அந்த கைக்குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன என்பது அதில் தெரியவந்தது.
தமுனா ஒரு பத்திரிகையாளர். அவரது செயலால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் அதுவரை, அவரால் தனது சொந்த பிறப்பின் மர்மத்தை தீர்க்க முடியவில்லை. மேலும் தானும் அவ்வாறு திருடப்பட்ட குழந்தையோ என்று அவர் வியந்தார்.
திருப்புமுனையாக அமைந்த ஃபேஸ்புக் செய்தி
ஒரு கோடை நாளில் பேஸ்புக் குழுவின் மூலம் கிடைத்த ஒரு தகவல், தமுனாவின் தேடலில் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த செய்தி ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. 1984 செப்டம்பரில் தபலீசியில், தான் கருவுற்றதை மறைத்து, குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே பொது வெளியில், தான் பிறந்த நேரம் என தமுனா பகிர்ந்திருந்த நேரத்தை ஒட்டியே அதுவும் இருந்தது.
தகவலை அனுப்பிய அந்த நபர், தான் அறிந்த அந்த பெண்தான் தமுனாவின் தாய் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். மிக முக்கியமாக, தமுனாவின் தாய் என நம்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரையும் கூறினார்.
உறுதி செய்த டிஎன்ஏ பரிசோதனை
தமுனா உடனடியாக இணையதள பக்கங்களில் அந்தப் பெண்ணைத் தேடினார். ஆனால் அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், ‘அவரை யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அந்தப் பதிவைப் பார்த்த ஒரு பெண் விரைவில் பதிலளித்தார்.
கருவுற்றதை மறைத்த அந்தப் பெண் தனது சொந்த அத்தை என்றும், அந்த பதிவை நீக்குமாறும் தமுனாவிடம் அவர் கூறினார். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில்தான் தனது தாயை தொலைபேசியில் அழைத்திருந்தார் தமுனா.
ஒரு வாரம் கழித்து, டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வந்தன.
தமுனாவும் பேஸ்புக்கில் தொடர்புகொண்ட அந்தப் பெண்ணும் உண்மையில் உறவினர்கள் என்பதைக் கண்டறிந்தனர். இதை ஆதாரமாக வைத்து , உண்மையை ஒப்புக்கொள்ளவும், தன் தந்தையின் பெயரை கூறும்படியும், தமுனா தன்னை பெற்ற தாயை சம்மதிக்க வைத்தார்.
தந்தையுடன் இணைந்த தமுனா
பின்னர் ‘குர்கன் கொரவா’ என்பவரே தனது தந்தை என்பதை தமுனா கண்டறிந்தார்.
“இந்த சம்பவம் நடந்த முதல் இரண்டு மாதங்கள் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.” என்கிறார் தமுனா.
குர்கனின் பெயரைத் தெரிந்து கொண்டவுடன், தமுனா அவரை பேஸ்புக் மூலம் விரைவிலேயே கண்டுபிடித்தார்.
தமுனாவின் சமூக வலைதளப் பதிவுகளை குர்கன் பின்தொடர்ந்து வந்ததும் பின்னர் தெரியவந்தது.
குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் தமுனாவின் பணி ஜார்ஜியா நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்தது.
”அவர், என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் மூன்று வருடங்களாக இருந்திருக்கிறார்” என்று ஆச்சரியமாக கூறுகிறார் தமுனா.
“என்னைப் பெற்ற தாய் கருவுற்றிருந்தது கூட அவருக்குத் தெரியாது” என்று கூறிய தமுனா, “அவருக்கு இது மிகவும் வியப்பாக இருந்தது” என்றார்.
தபலீசியில் அவர் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 160 மைல் தொலைவில் மேற்கு ஜார்ஜியாவில் உள்ள அவரது சொந்த ஊரான ஜுக்டிடியில், அவர்கள் விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் .
குர்கனுக்கு தற்போது 72 வயதாகிறது. அவரும் தமுனாவும் பார்த்த கணத்தில், இருவரும் ஆர தழுவிக்கொண்டு, பின்பு ஒருவரை ஒருவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டார்கள்.
“எனக்கு பல கலவையான உணர்வுகள் எழுந்தன. என்னிடம் பல கேள்விகள் இருந்தன. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தோம்” என்கிறார் தமுனா.
அவர்கள் பேசத் தொடங்கியதும். அவர்களிடம் பல பொதுவான விருப்பங்கள் இருப்பதை அறிந்து வியந்தனர்.
குர்கன் ஒரு அறியப்பட்ட நடன கலைஞராக இருந்தார். தமுனாவின் மகள்களுக்கும் – அதாவது குர்கனின் பேத்திகளுக்கும் – நடனத்தில் ஆர்வம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.
“அவர்கள் இருவருமே நடனத்தில் ஆர்வம் கொண்டவர்கள், எனது கணவரும்தான்,” என்று கூறுகிறார் தமுனா.
குர்கன் தனது முழுக் குடும்பத்தையும், தமுனாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு அழைத்திருந்தார் – சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் மாமாக்கள் அத்தைகள் என பெரிய குடும்பத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.
தமுனாவும் அவரது தந்தையும் மிகவும் ஒத்திருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். “அவரின் எல்லா பிள்ளைகளிலும் நானே தந்தையை அதிகமாக பிரதிபலிக்கிறேன்,” என்கிறார் தமுனா.
அவர்கள் ஒரு மாலை முழுவதும், கதைகளை பேசியபடி, பாரம்பரிய ஜியார்ஜிய பண்டங்களை உண்டபடி கழித்தனர்.
தன் தந்தையை சந்தித்த பின்னரும், வேறு ஒரு கேள்வி தமுனாவை உறுத்திக் கொண்டிருந்தது – வேறு பல ஜியார்ஜிய குழந்தைகளைப் போல அவரும் தன்னை பெற்ற தாயிடமிருந்து திருடப்பட்டு விற்கப்பட்டாரா? என்பதே அது.
அவரை தத்தெடுத்த பெற்றோர் இப்பொழுது இல்லை, அவர்களிடம் கேட்க வழி இல்லை.
திருடப்பட்ட குழந்தையா?
அக்டோபரில் அவரை பெற்ற தாயிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு போலந்து தொலைக்காட்சி நிறுவனம் தமுனா பற்றிய ஆவணப்படம் பதிவு செய்தபோது, அவரை தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
அவரது தாய், தமுனாவை தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டார்.
அப்போது தான் திருடப்பட்ட குழந்தை அல்ல என்பதை தமுனா அறிந்துகொண்டாளர். மாறாக, அவரது தாய் அவரை கைவிட்டதுடன், அந்த பிறப்பையே 40 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தார்.
தமுனாவின் தாயும், தந்தையும் சிறு சந்திப்புக்கு பின்னர் எவ்வித நீடித்த உறவிலும் இல்லை.
கருவுற்றதலை அவமானமாக உணர்ந்த தாய், அதனை மறைக்கத் தீர்மானித்தார். 1984 செப்டம்பரில் அவர் தபலீசிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகச் சொல்லி, அங்கே தன் மகளை பெற்றெடுத்தார். தமுனாவின் தத்தெடுப்பிற்கு ஏற்பாடு ஆகும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
தமுனாவின் தாய், தான் ஒரு திருடப்பட்ட குழந்தை என்று வெளி உலகுக்கு பொய் சொல்லும் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நீ திருடப்பட்ட பிள்ளை என்று சொல்லவில்லை என்றால், நமக்கு இடையில் எந்த உறவும் கிடையாது” – என அவர் கூறியதாக தமுனா கூறினார். ஆனால் தமுனா அப்படி பொய் சொல்ல ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் தமுனாவின் தாய் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படியும் இனிமேல் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
“நான் மீண்டும் இவை எல்லாவற்றையும் செய்வேனா என்று கேட்டால், கண்டிப்பாக செய்வேன், நான் எனது புதிய குடும்பம் குறித்து நிறைய கண்டுபிடித்துள்ளேன்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு