• Sun. Mar 15th, 2026

24×7 Live News

Apdin News

ஜாவா லேனின் சம்பியன் கனவை கலைத்து பெலிக்கன்ஸை சம்பியனாக்கியது சொலிட்

Byadmin

Mar 15, 2026


கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியில் 28ஆவது நிமிடத்திலிருந்து பத்து விரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட அநுராதபுரம் சொலிட் கழகம், ஜாவா லேன் கழகத்தின் சம்பியன் கனவை கலைத்து குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்தை சம்பியனாக்கியது.

சொலிட் கழகத்துக்கும் ஜாவா லேன் கழகத்துக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதன் காரணமாக ஜாவா லேன் கழகம் உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.

போட்டியின் 28ஆவது நிமிடத்தில் சொலிட் கழக வீரர் மென்சா ப்றின்ஸ் விதி முறைகளை கடுமையாக மீறியதால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

இதனை அடுத்து சொலிட் கழகம் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எனினும் ஜாவா லேன் கழகத்துக்கு ஈடுகொடுத்து சொலிட் கழகம் விளையாடியது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளையின் பின்னர் 56ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற 30 யார் தூர ப்றீ கிக் மூலம் மொஹமத் அஸாத் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

ஆனால் ஜாவா லேன் கழகத்தினால் நீண்ட நேரம் முன்னிலையில் இருக்க முடியவில்லை.

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் சொலிட் அணித் தலைவர் எஸ். ஞானரூபன் இடதுபுறத்திலிருந்து மிகவும் இலாவகமாக பரிமாறிய பந்தை ஹென்றி சிபேஸே தனது தலையால் முட்டி அருமையான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போட முயற்சித்தன. ஆனால் கடைசிவரை அது கைகூடவில்லை.
இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னரே சம்பயின் பட்டத்தை உறுதிசெய்துகொண்டது.


சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக பிறமாவட்ட அணி ஒன்று சம்பியனாகியது. 2022இல் மாத்தறை சிட்டி சம்பியனாகி இருந்தது.

ஜாவா லேன் கழகத்திற்கு இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அக் கழகம் மீண்டும் உப சம்பியனானது.
செரெண்டிப் கழகம் 3ஆம் இடத்தையும் சொலிட் கழகம் 4ஆம் இடத்தையும் பெற்றன.

By admin