பட மூலாதாரம், Getty Images
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்பை செப்டெம்பர் 4ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இதில் ஜவுளித்துறையில் 54 விதமான வரியினங்கள் மாற்றப்பட்டுள்ளதால், உள்நாட்டு விற்பனையும், அதன் தொடர்ச்சியாக உற்பத்தியும் அதிகரிக்குமென்று ஜவுளித்துறையினர் இதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
செயற்கை நுால் போன்றவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதற்கு ஆடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்த போதும், அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இது ஈடுசெய்யாது என்கின்றனர்.
அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசிடம் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜவுளித்துறைக்கு 54 விதமான வரி விகிதங்கள் மாற்றம்!
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஜவுளி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழக ஜவுளித்துறைக்கு, குறிப்பாக திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு இந்த வரிச்சீரமைப்பு எந்தளவுக்கு பலன் தருமென்ற எதிர்பார்ப்பு, தொழில்துறையினரைக் கடந்து மற்றவர்களிடமும் எழுந்துள்ளது.
”ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, 54 விதமான வரியினங்கள் மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக செயற்கை நுாலிழை நுால், துணிகள் மற்றும் ஃபைபர் உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்றிருந்த ஜிஎஸ்டி வரி, 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
இது பருத்தி அல்லாத செயற்கை நுாலிழை நுால் சார்ந்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பெருமளவில் ஊக்குவிக்கும்.” என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியாளரும், தொழில்துறை எழுத்தாளருமான குமார் துரைசாமி.
பட மூலாதாரம், Getty Images
இந்த அறிவிப்பில் உள்ளீட்டு வரிகளை திரும்பப் பெறுவது தொடர்பான நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை களைவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் ஜவுளித்துறையினர் வரவேற்கின்றனர்.
இதுபற்றி விளக்கும் குமார் துரைசாமி, ”உள்ளீட்டு வரிகளை திரும்பப் பெறும் நடைமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால், உற்பத்திச் சங்கிலியில் ஒவ்வொரு நிலையிலும் செலுத்திய வரிகளை ஏற்றுமதிக்கு பிறகு 90 சதவீதம் திரும்பப்பெறமுடியும். முன்பு இது 60–70 சதவீதமாக இருந்ததையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, பேக்கேஜிங் துறைக்கும், கெமிக்கல் துறைக்கும் அறிவிக்கப்பட்டுள்ள சீரமைப்பும் ஜவுளித்துறைக்கு உதவுவதாகவுள்ளது.” என்கிறார்.
இதுவரை சின்னச்சின்ன பொருட்கள் வாங்கியதற்குமான ஜிஎஸ்டி வரியை, திரும்பப் பெற முடியாத நிலை இருந்ததாகக் கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், தற்போதைய அறிவிப்பில் இவையனைத்தையும் திரும்பப் பெற முடியுமென்பதை ஒரு நல்ல நடவடிக்கையாகப் பார்க்கிறோம் என்கிறார்.
”உற்பத்தியில் பல கட்டங்களில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டப்பட்ட திரள்வரி, இனிமேல் சமன்பாட்டுக்கு வந்துவிடும். இதனால் தொழில் முதலீடும், அதன் தொடர்ச்சியாக பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆடை உற்பத்தித்துறையில் வெவ்வேறு வரியினங்களில் 12 சதவீதமாக இருந்ததை, 5 சதவீதமாகக் குறைத்து இருப்பதை வரவேற்கிறோம். குறிப்பாக செயற்கை நுாலிழை நுால் (MMF-Man Made Fibre) மீதான வரியை குறைக்க வேண்டுமென்ற எங்களின் 2 ஆண்டு கால கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதும் ஆயத்த ஆடைத்துறைக்கு தெம்பளிப்பதாகவுள்ளது.” என்கிறார் கே.எம்.சுப்பிரமணியம்.
தற்போது இந்தியாவிலிருந்து பருத்தி ஆடை ஏற்றுமதியே அதிகளவில் நடந்து வருகிறது. தற்போது எம்எம்எஃப் எனப்படும் செயற்கை நுாலிழை நுால் மீதான வரிக்குறைப்பால் அதன் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜவுளித்துறையினர் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் வரிச்சீர்திருத்தத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது இந்திய ஜவுளித்தொழில்துறையினர் கூட்டமைப்பு.
பிபிசி தமிழிடம் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், ”பெரும்பான்மையான ஜவுளி உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த ஜிஎஸ்டி விதித்திருப்பதாலும், வரி மாறுபாட்டை நீக்குவது மற்றும் எளிதாக்கும் நடைமுறைகளாலும் ஒட்டுமொத்த நுகர்வு அதிகரிக்கும். அது தொழில்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கு உதவும்.” என்கிறார்.
மேலும் தொடர்ந்த அவர், ”அனைத்து ஏற்றுமதி சந்தைகளிலும், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பருத்தி ஆடைகள் பங்களிப்பு 10–12 சதவீதம் என்ற அளவில் இருப்பினும், எம்எம்எஃப் ஆடைகளில் வெறும் 2–3 சதவீதம் மட்டுமே உள்ளது. மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள இந்த துறையில் வரி சீர்திருத்தம் செய்யப்படுவதால், இந்திய சிந்தெடிக் ஆடைத்துறையின் போட்டித்திறன் பெரிதும் அதிகரிக்கும்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இனி ஆடைகள் விலை குறையுமா?
ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இந்த ஜிஎஸ்டி வரிச்சீரமைப்பு ஈடு செய்யாது என்பதே ஜவுளித்துறையின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கூறும் ஒருமித்த கருத்தாகவுள்ளது. அதையும் இதையும் எந்த வகையிலும் ஒப்பிடவே இயலாது என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம். இதே கருத்தையே வெளிப்படுத்தினார் கரூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன்.
”இது முழுக்க முழுக்க அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வரிச்சீரமைப்புதான். ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாங்கள் செலுத்தும் ஜிஎஸ்டியை திரும்பப் பெறமுடியும். முன்பு 1000 ரூபாய்க்கு மேலிருந்த ஆடை ரகங்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கே இதனால் பெரும்பலன்.” என்கிறார் ராஜா சண்முகம்.
”வரி 7 சதவீதம் குறைவதால் வாடிக்கையாளர் வாங்குவது அதிகரிக்கும். ஒட்டுமொத்தமான வரிக்குறைப்பு, நாடு முழுவதும் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான உந்துசக்தியாக இருக்குமென்று நம்புகிறோம். ஆனால் ஏற்றுமதியாளர்களை விட உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியாளர்களுக்கே இது உத்வேகமளிக்கும். அவர்கள் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பாக இருக்கும்.” என்கிறார் அவர்.
வாடிக்கையாளர் வாங்கும் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படுவதால், வாடிக்கையாளர் வாங்குவது அதிகரிக்கும் என்பதை பல்வேறு அமைப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தை இரண்டையும் செய்யும் நிறுவனங்களால், ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பை உள்நாட்டு சந்தையில் ஓரளவுக்கு ஈடு செய்யலாம் என்பது இவர்களில் சிலரின் நம்பிக்கையாகவுள்ளது.
இதைப்பற்றி இன்னும் விளக்கிய குமார் துரைசாமி, ”உள்நாட்டு ஜவுளி விற்பனையில் 2500 ரூபாய்க்கு மேலாக உள்ள ரகங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என்பதும், அதற்கு கீழுள்ள ரகங்களுக்கு 5 சதவீதம் என்பதும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பலனளிக்கும். இந்தியாவில் குறைந்த மற்றும் மிதமான வருவாய் ஈட்டும் தரப்பினர் அதிகமென்பதால், உள்நாட்டு விற்பனையை அதிகரிக்க இது வழி வகுக்கும்.” என்றார்.
ஜிஎஸ்டி வரிச்சீரமைப்பை ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு (AEPC) வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசின் சீர்திருத்த முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும் தொழில்துறையின் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துமென்று இவ்வமைப்பின் துணைத்தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
”இந்த சீர்திருத்தங்கள் நிச்சயமாக இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வழியை உருவாக்கும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும். உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும், மேலும் மேக் இன் இந்தியா என்ற தேசிய தொலைநோக்கு பார்வையை முன்னேற்றும். அதே வேளையில் ஜவுளி மற்றும் ஆடைத்துறை புதிய உயரங்களை எட்ட உதவும்.” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு: ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை என்ன?
ஆனால் இந்த வரிச்சீரமைப்பு அறிவிப்பு வெளியாவதற்கு, முந்தைய நாளே சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு (AEPC) நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியால் ஏற்படும் சமீபத்திய சவால்களை நிவர்த்தி செய்ய உடனடி நிதி நிவாரண நடவடிக்கைகளைக் கோரும் ஒரு மனுவையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.
அதில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ், அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத ஏற்றுமதி ஊக்கத்தொகையை வழங்கும் எஃப்எம்எஸ் சந்தைத் திட்டத்தை (FMS-Focus Market Scheme) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகவுள்ளது.
ஜவுளித்துறையில் நமது போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வட்டி விகிதம் மிக அதிகமென்று கூறியுள்ள அந்த மனு, ஜவுளித்துறையை மீட்டெடுக்க வட்டி சமநிலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் ஏற்றுமதிக்குப் பிந்தைய கடன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதிக்காகப் பெறப்பட்டுள்ள அனைத்துக் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு, 2 ஆண்டு அவகாசம் அல்லது பிரச்னை தீர்க்கப்படும்வரை கூடுதல் அவகாசம் வேண்டுமென்றும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி ஆடைகள் மீதான பரஸ்பர மற்றும் அபராத வரியிலிருந்து முழு விலக்களிக்க அமெரிக்க அரசிடம் மிக உறுதியாகப் பேச வேண்டுமென்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறையினரின் கவலைகள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு நிர்வாகிகள், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரிச்சீரமைப்பு அறிவிப்பின் தொடர்ச்சியாக, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
வரிச்சீரமைப்பை தொழில் அமைப்பினர் பலரும் வரவேற்று வரும் நிலையில், இதனால் மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வரிக்குறைப்பால் ஏற்படும் இழப்பு, விற்பனை மற்றும் வரி வருவாய் அதிகரிப்பால் ஈடு செய்யப்படும் என்கிறார் மூத்த பட்டயக் கணக்காளரும், பொருளாதார ஆலோசகருமான ஜி.கார்த்திகேயன்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜி.கார்த்திகேயன், ”வரிக்குறைப்பால் விலை குறையும் என்பதால் நுகர்வு அதிகமாகும். பொருளாதாரச் சுழற்சி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்; நாட்டின் பொருளாதாரம் உயரும். மாநில அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த பொருள் விற்பனையும், அதன் மதிப்பும் கூடும் என்பதால் மாநில அரசின் வரி வருவாய் அதிகரிக்கும்.” என்றார்.
”இதில் சில பாதகங்கள் இருக்கலாம். ஆனால் மாநில அரசுக்கான இழப்பீட்டை மத்திய அரசு ஏதாவது ஒரு விதத்தில் சரி செய்யும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மாற்றாக உள்நாட்டு சந்தையை மேம்படுத்த இது உதவும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தால் மக்களும், உற்பத்தியாளர்களும் உளவியல்ரீதியாக துவண்டிருந்தனர். இந்த வரிச்சீரமைப்பு அந்த நிலையை மாற்றி எல்லோரிடமும் ஒரு விதமான தெம்பைத் தருமென்றே நம்புகிறேன்.” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.