ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது.
”இந்த தளங்களில் இருந்த, கப்பல்கள் மீது தாக்கக்கூடிய இரானிய க்ரூஸ் ஏவுகணைகள் இந்த நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரிய ஆபத்தாக இருந்தன,” என அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது.
உலகின் 20% எண்ணெய் கப்பல்கள் செல்லும் இந்த நீரிணையை இரான் வெற்றிகரமாக மூடியது கடல் போக்குவரத்தை பாதித்ததோடு உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பிலும் பங்கு வகித்துள்ளது.
இந்த பெரிய குண்டுகள், கடந்த ஆண்டு இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்திய “பங்கர் பஸ்டர்” குண்டுகளைப் போன்றதே.
மற்ற குண்டுகளைப் போல் அல்லாமல், பங்கர் பஸ்டர் குண்டுகள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி வெடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள், கனமாக மற்றும் வலுவான இரும்பால் மூடப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், USAF
படக்குறிப்பு, ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும்
இரான் நிலத்தடியில் ஆயுதங்களை வைத்திருப்பதாக நினைக்கும் அமெரிக்கா
இரான் அதன் பெரும்பாலான ஆயுதங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறது என அமெரிக்கா நம்புவதற்கான மற்றுமொரு உதாரணம், இந்த 2270 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதாக வரும் செய்தி.
இரானிய ஏவுகணை தளங்கள் மீது எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) குறிப்பிடவில்லை.
ஆனால் இந்த அம்சங்களுடன் பொருந்திப் போகும் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஜிபியு – 28 லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் புதிய ஜிபியு-72 மேம்படுத்தப்பட்ட 5கே ஊடுருவும் குண்டு. இந்த இரண்டாவது வகை குண்டை பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பே அதிகம்.
2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது.
இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, “கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.” என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது
‘இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரான் ஆயுதங்கள்’
ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. ஆனால் இரானின் ஆயுதங்கள் தற்போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
நேற்று, இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது. இவை பல வெடி மருந்துகளைக் கொண்ட பகுதிகளைச் சுமந்து செல்லக்கூடியது என அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் உள்ள காணொளிகள், இரானால் க்ளஸ்டர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை வலுவாக சுட்டிக்காட்டுகின்றன.