புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13-ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்த உத்தரவின் விவரம்: “நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உருவாகி வரும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
கடுமையான மருத்துவ அல்லது அவசர கால சூழ்நிலைகளைத் தவிர, மறு உத்தரவு வரும் வரை எந்த விடுப்பும் அனுமதிக்கப்படாது. முன்னர் அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து ஊழியர்களும் வரும் 13-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோடை விடுமுறையின் முதல் பாதி நாட்கள் உடன் அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. அனைத்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களும் வரும் 13-ம் தேதிக்கு முன்பாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் மே 17-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட கோடை விடுமுறையின் இரண்டாம் பாதி ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய அவசர நிலையின்போது முழுமையான செயல்பாட்டுத் தயார் நிலை மற்றும் தடையற்ற சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர்: இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அறிவுறுத்தல்களின்படி, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜிப்மர் நிறுவனத்தின் அனைத்து மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களும் இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் உடனடி பணியமர்த்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். முழு ஒத்துழைப்பும் தர வேண்டும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.