இணையத்தைக் கலக்கும் ஜிப்லி – இதை உருவாக்கியவர் பழைய வீடியோவில் கூறியது என்ன?
கடந்த சில நாட்களாக நீங்கள் சமூக ஊடகங்களில், நூற்றுக்கணக்கான கார்ட்டூன் படங்களை பார்த்திருப்பீர்கள்.
சமூக ஊடக பயனர்கள், தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாட்பாட்களைக் கொண்டு இது போன்ற கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
இது சமூக ஊடகங்களில் ‘ஜிப்லி ஆர்ட்’ என்ற பெயரில் டிரெண்டாக மாறியது.
ஜிப்லி என்றால் என்ன? இதனை உருவாக்கியவர் யார்? இது ஏன் திடீரென இணையத்தில் பிரபலமானது?
1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் ஜப்பான் நாட்டில் ‘ஸ்டுடியோ ஜிப்லி’ என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை ‘ஜிப்லி’ படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலையில், சாட் ஜிபிடி சாட்பாட்டில் புதிதாக ஒரு அப்டேட் (gpt-4o) கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை அனிமேஷன் பாணியில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
தனிநபர் சமூக ஊடக பயனர்களைத் தாண்டி, எடப்பாடி பழனிசாமி முதல் சச்சின் டெண்டுல்கர் வரையிலான பிரபலங்களும் தங்களது ஜிப்லி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஸ்டூடியோ ஜிப்லி’ நிறுவனத்தின் நிறுவனரான ஹயாவ் மியாசாகியின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலானது.
அதில், “மனிதர்களின் உண்மையான உணர்வுகளை செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ள முடியாது. இந்த தொழில்நுட்பத்தை என்னுடைய பணியில் ஒருபோதும் நான் பயன்படுத்த விரும்பமாட்டேன். அது மனித வாழ்க்கைக்கே அவமானமானது”, என்று கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு