0
நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் கடந்த பொங்கல் திருநாள் அன்று பட மாளிகையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று வருகிறது.
இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் சென்னையில் இப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர். இதில் இந்திய தேசிய துணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி நடிகர் ஜீவா பேசுகையில், ” இந்த திரைப்படத்தை சின்ன பட்ஜட் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய பட்ஜட் படம். இதனை ரசிகர்கள் பட மாளிகையில் பார்த்து ரசித்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால்.. கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் நல்ல நினைவுகளாக பதிவாகி இருக்கிறது. தமிழில் நிறைய வெற்றி பெற்ற படங்களில் நடித்திருந்தாலும்.. இது போன்றதொரு பிரம்மாண்ட வெற்றி படத்தை எமக்கு வழங்கிய இயக்குநர் நிதேஷுக்கும், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோருக்கும், இணைந்து பணியாற்றிய சக நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.