பட மூலாதாரம், Getty Images
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஹைதராபாத், காஷ்மீர், ஜூனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
ஜூனாகத் என்பது கிர்னார் மலைகளின் காடுகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சமாஸ்தானமாகும்.
அந்தக் காடு சிங்கங்களுக்காகப் பிரபலமானது.
ஜூனாகத்தின் ஆட்சியாளராக நவாப் முகமது மஹாபத் கான் இருந்தார். அங்கே வாழ்ந்த மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.
ஜூனாகத் மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்டிருந்தது. நான்காவது பக்கத்தில் நீண்ட கடற்கரை இருந்தது.
அதன் முக்கிய துறைமுகமான வேராவல், அப்போதைய பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியிலிருந்து 325 மைல்கள் தொலைவில் இருந்தது.
ஜூனாகத் நவாப் நாய்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரிடம் சுமார் இரண்டாயிரம் நாய்கள் இருந்தன.
பட மூலாதாரம், Getty Images
“அவரின் நாய்கள் மின்சாரம், தொலைபேசி வசதிகளுடன் கூடிய சிறப்பு வீடுகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பராமரிக்க தனி ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். நாய்களை அடக்கம் செய்ய, பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட கல்லறையும் இருந்தது” என டொமினிக் லாபியர் மற்றும் லாரி காலின்ஸ் தங்களின் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நவாப் சாஹேப் நாய்களுக்கு திருமணங்களையும் செய்து வைத்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கது லாப்ரடார் இன நாய்களான ரோஷனாரா மற்றும் பாபியின் திருமணம்.
“இந்தியாவின் பெரும்பாலான அரசர்களும் பிரமுகர்களும் இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் இர்வினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை” என்று லாபியர் மற்றும் காலின்ஸ் பதிவு செய்துள்ளனர்.
“நாய்களின் ஊர்வலம் நவாப் அவர்களின் பாதுகாப்பு படையினரால் முன்னின்று நடத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் நின்று இந்த அரிய காட்சியைப் பார்த்தனர். ஊர்வலத்துக்குப் பிறகு, நவாப் பிரமாண்ட விருந்தை ஏற்பாடு செய்தார். ஜூனாகத் முழுவதும் மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.”
நவாப் தனது ஆட்சியில் ஆசிய சிங்கங்களை அழிவிலிருந்து காப்பாற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆங்கிலேயர்கள் அவற்றை வேட்டையாடுவதையும் தடை செய்தார். கிர் பசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
பட மூலாதாரம், Vikas Publishing House
பாகிஸ்தானுடன் இணைய விரும்புவதாக ஜூனாகத் நவாப் அறிவிப்பு
சோம்நாத் கோயில் ஜூனாகத் எல்லைக்குள் இருந்தது. அதன் தலைநகரான கிர்னாரில், ஒரு மலை உச்சியில் அமைந்திருந்த அற்புதமான பளிங்குக் கல்லில் கட்டப்பட்ட ஒரு சமணக் கோயில் இருந்தது. இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சோம்நாத் மற்றும் கிர்னார் கோயில்களை தரிசிக்க வந்தனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், ஜூனாகத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நவாப் மஹாபத் கான் ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்தார்.
அவர் அங்கு இருந்தபோது, அப்போதைய திவான் அப்துல் காதிர் முகமது உசேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சர் ஷாநவாஸ் பூட்டோ புதிய திவானாக நியமிக்கப்பட்டார்.
ஷாநவாஸ் பூட்டோ சிந்துப் பிராந்திய முஸ்லிம் லீக்கின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். முகமது அலி ஜின்னாவுடன் அவருக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது.
சுவாரஸ்யமாக, திவான் ஷாநவாஸ் பூட்டோவின் மகன் சுல்பிகர் அலி பூட்டோ பின்னர் பாகிஸ்தானின் பிரதமரானார்.
“ஐரோப்பாவில் இருந்து நவாப் திரும்பிய பிறகு, இந்தியாவுடன் இணைய வேண்டாம் என்று அவரிடம் திவான் வலியுறுத்தினார். ஆகஸ்ட் 14 -ஆம் தேதி, அதிகாரப் பரிமாற்ற நாள் வந்தபோது, ஜூனாகத் பாகிஸ்தானுடன் இணைய முடிவு செய்திருப்பதாக நவாப் அறிவித்தார்,” என ராமச்சந்திர குஹா தனது ‘காந்திக்குப் பிறகு இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“சட்டப்படி நவாப் அதைச் செய்ய உரிமையுடையவராக இருந்தாலும், நிலவியல் ரீதியாக அதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனெனில் ஜூனாகத், பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதன் மக்கள் தொகையில் 82 சதவீதம் இந்துக்கள் என்பதால், அது ஜின்னாவின் ‘இரு தேசக் கோட்பாட்டிற்கும்’ முரணானதாக இருந்தது.” என்று குஹா எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், AUTO ARCHIVES OF PAKISTAN
இந்தியத் தலைமை வருத்தம்
முன்னதாக டெல்லியில், நவாநகரின் ஜாம் சாஹேப்பும் திரங்காத்ராவின் மகாராஜாவும், சர்தார் படேலுக்கு நெருக்கமான வி.பி. மேனனிடம் ஜூனாகத் நவாப்பின் நோக்கங்கள் குறித்து எச்சரித்திருந்தனர்.
ஆகஸ்ட் 12, 1947 வரை, ஜூனாகத் இந்தியாவுடன் இணைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அப்போது சர் ஷாநவாஸ் பூட்டோ, ‘இந்த விவகாரம் இன்னும் பரிசீலனையில் உள்ளது’ என்று ஒரு செய்தியை மட்டுமே அனுப்பினார்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி, ஜூனாகத்தில் வாழ்ந்த இந்துக்கள், இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கோரி நவாப்பிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.
ஆனால், கத்தியவார் வரலாற்று ரீதியாக சிந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு சிந்து மாகாணம் பாகிஸ்தானுக்குச் செல்லும் என்றும் ஷாநவாஸ் பூட்டோ வாதிட்டார்.
நாராயணி பாசு தனது ‘விபி மேனன், தி அன்சங் ஆர்கிடெக்ட் ஆஃப் மாடர்ன் இந்தியா’ என்ற புத்தகத்தில், “ஜூனாகத்தின் நோக்கங்களைப் பற்றிய தகவலை வி.பி. மேனன் செய்தித்தாள்கள் மூலம் அறிந்தார். ஜூனாகத் பாகிஸ்தானுடன் இணைந்தால், கத்தியவார் பகுதியிலுள்ள மற்ற சமஸ்தானங்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் என்று அவர் எண்ணினார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அதே சமயம் ஹைதராபாத்தில் காசிம் ரிஸ்வி, ‘ஜூனாகத் போன்ற சிறிய சமஸ்தானத்தை கூட சர்தார் படேல் கையாள முடியவில்லை. அப்படியிருக்கையில் அவர் ஹைதராபாத் பற்றி ஏன் இவ்வளவு பேசுகிறார்?’ என்று வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருந்தார்”.
வி.பி. மேனனின் செயலாளர் சி.ஜி. தேசாய், இந்திய அரசாங்கம் ஜூனாகத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதினார்.
அப்பகுதிக்கான அனைத்து உணவு விநியோகங்களையும் நிறுத்தி, ஜூனாகத் மீது அழுத்தம் கொடுக்க இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியை ராஜ்கோட்டுக்கு அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார்.
“தேசாயின் அடுத்த திட்டம், ஜூனாகத்தின் கீழ் உள்ள சிறிய மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களை இந்தியாவுடன் இணைய ஊக்குவிப்பது. இதனால், அங்குள்ள மக்களை பாதுகாக்கும் பெயரில், இந்தியா அந்தப் பகுதியில் தலையீடு செய்ய ஒரு நியாயமான காரணம் உருவாகும்,” என்று நாராயணி பாசு பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Simon & Schuster
ஜூனாகத் இணைப்புக்கு பாகிஸ்தான் ஒப்புதல்
வி.பி. மேனன் இந்தத் திட்டத்தை சர்தார் படேலிடம் எடுத்துச் சென்றார். படேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டார்.
ராஜ்கோட்டுக்கு ஒரு படை அனுப்பப்பட்டது. ஜூனாகத்துக்கு நிலக்கரி மற்றும் பெட்ரோல் விநியோகத்தை நிறுத்த ரயில்வேக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
அதேசமயம், பாகிஸ்தானுடனான ஜூனாகத்தின் தகவல் பரிமாற்றங்களை தகவல் தொடர்புத்துறை இடைமறித்து பதிவு செய்யத் தொடங்கியது.
“இந்தியா அல்லது பாகிஸ்தானில் எதனை வேண்டுமானாலும் தேர்வு செய்ய ஜூனாகத்துக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் இங்கே மக்களின் விருப்பமே தீர்மானிக்கும், ஆட்சியாளரின் விருப்பமல்ல,” என்று பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுக்கு நேரு ஒரு தந்தி அனுப்பினார்.
இதற்கிடையில், ஜூனாகத் திவான் ஷாநவாஸ் பூட்டோ, ‘ஓநாய்களிடமிருந்து’ தன்னை காப்பாற்றுமாறு, ஜின்னாவுக்கு பலமுறை தந்தி அனுப்பிக் கொண்டிருந்தார். (ஜின்னா பேப்பர்ஸ், பக். 264-266)
சில வாரங்கள் பாகிஸ்தான் இதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் இருந்தது. ஆனால் செப்டம்பர் 13-ஆம் தேதி, ஜூனாகத்தை பாகிஸ்தானுடன் இணைக்கும் யோசனையை அது ஏற்றுக்கொண்டது.
“ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் பேரம் பேசுவதற்காக அவர் இதைப் பயன்படுத்த நினைத்ததாகத் தெரிகிறது. காஷ்மீரும் ஆகஸ்ட் 15 வரை எந்த நாட்டுடனும் இணையவில்லை. அங்கு ஆட்சியாளர் இந்துவாக இருந்தார், ஆனால் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள். ஜூனாகத்தில் நிலைமை அதற்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது,” என ராமச்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Gujarat Tourism
மேனனைச் சந்திக்க நவாப் மறுப்பு
ஜூனாகத் பாகிஸ்தானுடன் இணைவது குறித்து இந்தியத் தலைவர்கள் மிகவும் கோபமடைந்தனர்.
“மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய காவல் படை ஜூனாகத்தின் தெற்கே உள்ள பாபரியாவாட் மற்றும் பில்காவுக்கு அனுப்பப்பட்டது. வேராவல் மற்றும் கேஷோட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படையின் தலையிடுவதற்கான வாய்ப்புகளை அகற்ற இது அவசியம் என்று நினைத்தனர்.” என நாராயணி பாசு குறிப்பிட்டுள்ளார்.
“விமான நிலையம் இருந்த கேஷோட் மற்றும் துறைமுகம் இருந்த வேராவலை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஜூனாகத்தை ராணுவத்தால் சுற்றி வளைக்கும் உத்தி பயனுள்ளதாக இருந்தது. படைகள் அனுப்பப்பட்டதால் பூட்டோ மிகவும் பதற்றமடைந்தார். இதனால், அவர் லியாகத் அலிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த மிக முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் காப்பாற்ற முன்வரவில்லை என்றால், சூழல் ஆபத்தானதாக மாறிவிடும்’ எனக் கூறினார்.
வி.பி. மேனன் செப்டம்பர் 18-ஆம் தேதி ஜூனாகத்தை அடைந்தார்.
வி.பி. மேனன் தனது ‘இன்டெகிரேஷன் ஆப்ஃ இந்தியா’ என்ற புத்தகத்தில், “நவாப் உடல்நிலை சரியில்லை என்று கூறி என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். பட்டத்து இளவரசரும் கூட கிரிக்கெட் போட்டியில் மிகவும் மும்முரமாக இருந்ததால் என்னைச் சந்திக்க அவர்களுக்கு நேரமில்லை.” என்பதை குறிப்பிட்டுள்ளார்.
“நான் திவான் ஷாநவாஸ் பூட்டோவைச் சந்திக்க வேண்டியிருந்தது. குஜராத்தி பத்திரிகைகளின் மோசமான கருத்துகளால் ஜூனாகத் மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்டதாக அவர் என்னிடம் புகார் கூறினார்.”
பட மூலாதாரம், Simon & Schuster
பம்பாயில் ஒரு ‘இணை அரசாங்கம்’ அமைக்கப்பட்டது
சில நாட்களுக்குப் பிறகு நவாப் தனது படைகளை அண்டை சமஸ்தானங்களைக் கட்டுப்படுத்த அனுப்பிய போது நெருக்கடி அதிகரித்தது.
சர்தார் படேலின் வாழ்க்கை வரலாற்றான ‘தி மேன் ஹூ சேவ்ட் இந்தியா’-வில் ஹிந்தோல் சென்குப்தா பின்வருமாறு கூறுகிறார் , “சர்தார், ஜூனாகத் படைகளை பாபரியாவாடுக்கு அனுப்புவதும், அங்கிருந்து அவர்களைத் திரும்பப் பெற மறுப்பதும் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும், அதற்கு பலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்றும் கருதினார்.”
இதற்கிடையில், பம்பாயில், மகாத்மா காந்தியின் மருமகன் சமல்தாஸ் காந்தியின் தலைமையில், நவாப் தனது குடிமக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறி, ஜூனாகத்தின் ஒரு இணையான அல்லது ‘தற்காலிக அரசாங்கம்’ அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், டெல்லி திரும்பிய பிறகு, வி.பி. மேனன் 1947 செப்டம்பர் 2-ஆம் தேதி டெல்லியில் பிரிட்டிஷ் துணை தூதர் அலெக்சாண்டர் சைமனை சந்தித்து, “இந்திய அரசாங்கம் ஜூனாகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க ஒருபோதும் அனுமதிக்காது. இந்த பிரச்னையில் ஜூனாகத் மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்யும்,” என்று கூறினார்.
இந்த உரையாடலை தனது அரசாங்கத்திற்குத் தெரிவித்த சைமன், மேனனின் நடத்தை அவர் பொய் சொல்வதைப் போல இல்லை என்று கூறினார்.
ஜூனாகத்தில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு திறன் இல்லை என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் ராப் லாக்ஹார்ட் நம்பினார்.
வி.பி. மேனன், தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்து, ஜூனாகத்தின் அண்டைய சமஸ்தானங்கள் அதற்கு எதிராக தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஜூனாகத் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் சர்தார் படேல் முடிவு செய்தார்.
ஜூனாகத் பாகிஸ்தானுடன் சேர அனுமதிக்கப்பட்டால், ஹைதராபாத்தும் விரைவில் அதைப் பின்பற்றும் என்று சர்தார் கருதினார்.
இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்திற்குப் பதிலாக “ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்” ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று நிஜாம் ஏற்கனவே கோரியிருந்தார்.
எதிர்கால ராணுவ உத்தி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஜூனாகத்தின் அண்டைய சமஸ்தானங்களான சர்தார்கர் மற்றும் பன்ட்வா ஆகிய இரண்டும் இந்தியாவுடன் இணைந்ததாக வி.பி. மேனன் அறிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கராச்சி சென்ற நவாப்
ஜூனாகத்தின் நவாப் மஹாபத் கான் பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவு செய்த போது, அங்கு வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு குழப்பம் ஏற்பட்டது.
“தனது கடைசி நாட்களில் முடிவெடுக்க முடியாத தன்மையால் இழிசொல்லுக்கு ஆளான நவாப், பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவு செய்தார். அவசரமாக ஒரு சிறப்பு கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று நாராயணி பாசு குறிப்பிட்டுள்ளார்.
“அரசு கருவூலத்திலிருந்து பணம் மற்றும் நகைகள், அவருக்குப் பிடித்த நாய்கள் மற்றும் அவரது மனைவிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானம் புறப்படுவதற்கு முன்பு, அவரது மனைவிகளில் ஒருவர் தனது குழந்தையை தற்செயலாக அரண்மனையில் விட்டுவிட்டதாக கூறினார். நவாப் அவரை இறக்கிவிட்டு கராச்சிக்குச் சென்றார்.”
நவாபின் விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது, அவருக்கு பாரம்பரிய மரியாதையுடன் வரவேற்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் தனது ‘தி பீப்பிள் நெக்ஸ்ட் டோர்’ என்ற புத்தகத்தில், “விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன், அவரது நாய்கள் நவாப்புக்கு முன்பே கீழே குதித்து விமானத்தின் சக்கரங்கள் மற்றும் படிக்கட்டுகளில் சிறுநீர் கழிக்கத் தொடங்கியதை விழாவில் இருந்த மக்கள் பின்னர் நினைவு கூர்ந்தனர்.” என பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், சமல்தாஸ் காந்தியின் “தற்காலிக அரசாங்கம்” ஜூனாகத்தின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியிருந்தது.
உதவியற்ற நிலையில், ஷாநவாஸ் பூட்டோ இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி, “மோதலை தடுக்கவும், உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கவும் ஜூனாகத்தின் நிர்வாகத்தை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஜூனாகத் நிர்வாகத்தை என்எம் புச் ஏற்றுக்கொண்டார்
பூட்டோவின் கடிதத்தைப் பெற்ற உடனேயே, ராஜ்கோட்டின் அப்போதைய பிராந்திய ஆணையரான என்.எம். புச் தொலைபேசியில் வி.பி. மேனனை தொடர்பு கொண்டார். அப்போது நேரம் நள்ளிரவை கடந்துவிட்டிருந்தது.
“அப்போது விழித்திருந்த வி.பி.மேனன், நேருவின் இல்லத்தில் அமர்ந்திருந்தார். பூட்டோவின் கடிதத்தை அவருக்கு புச் வாசித்துக் காட்டினார். ஏற்கனவே சமல்தாஸ் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், பூட்டோவின் வாய்ப்பை ஏற்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறினார்” என்று நாராயணி பாசு பதிவு செய்துள்ளார்.
“இதைக் கேட்டதும் நேரு மகிழ்ச்சியடைந்தார். அவரும் மேனனும் சேர்ந்து, ஜூனாகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிக்கு ஒரு கடிதம் எழுதினர் “
“இந்திய அரசாங்கம் பூட்டோவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அதை இந்தியாவுடன் இணைப்பதற்கு முன்பு ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் ஜூனாகத் மக்களின் கருத்தை அறிய விரும்புகிறது,” என்று அவர் எழுதினார்.
வி.பி. மேனன் உடனடியாக சர்தார் படேலின் வீட்டிற்குச் சென்று அவரை எழுப்பினார்.
அவர் படேலிடம், லியாகத் அலிக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தின் வரைவை காட்டியபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முன்மொழிவை படேல் எதிர்த்தார்.
“ஜூனாகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை. நவாப் ஏற்கனவே தப்பிவிட்டார். ஜூனாகத்தில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். திவானால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மிக முக்கியமாக, அவரே இந்திய அரசாங்கத்தை தலையிடுமாறு வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்”என்றும் படேல் கூறினார்.
ஆனால் பொது வாக்கெடுப்புக் படேலை விபி மேனன் சமாதானப்படுத்தினார்.
நவம்பர் 9-ஆம் தேதி மதியம், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த புச் மற்றும் பிரிகேடியர் குருதயாள் சிங் ஆகியோர் ஜூனாகத் சென்றடைந்தனர். ஜூனாகத் படைகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு, இந்திய அரசாங்கத்தின் சார்பாக ஜூனாகத் நிர்வாகத்தை புச் ஏற்றுக்கொண்டார். ஷாநவாஸ் பூட்டோவும் முந்தைய நாள் ஜூனாகத்திலிருந்து கராச்சிக்குச் சென்றுவிட்டார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, சர்தார் படேல் ஜூனாகத் சென்றார். அங்கு பஹாவுதீன் கல்லூரி மைதானத்தில் உள்ளூர் மக்களிடையே அவர் உரையாற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
ஜூனாகத்தில் பொது வாக்கெடுப்பு
ஜூனாகத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படாததால் மவுண்ட் பேட்டன் வருத்தமடைந்தார்.
“மவுண்ட் பேட்டனை திருப்திப்படுத்தவும், அதன் சட்டபூர்வ தன்மையை நிலைநாட்டவும் ஜூனாகத்தில் ஒரு வாக்கெடுப்பை இந்தியா நடத்தியது. பிப்ரவரி 20, 1948 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 91 பேர் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தனர்,” என்று ராமச்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளார்.
லண்டனின் டெய்லி டெலிகிராஃப் மற்றும் சண்டே டைம்ஸ் ஆகியவை வாக்கெடுப்பு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.
மங்ரோல், மனாவதர், பாபரியாவாட், சர்தார்கர் மற்றும் பந்த்வா ஆகிய இடங்களிலும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த செயல்முறை முடிந்ததும், ஜூனாகத், இந்தியாவின் எந்த மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
வி.பி. மேனன் அதை சவுராஷ்டிராவுடன் இணைக்கப் பரிந்துரைத்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, பிப்ரவரி 20, 1949 அன்று, ஜூனாகத் சவுராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு