• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

ஜூனில் வெளியாகும் அதர்வா முரளியின் ‘டி என் ஏ’

Byadmin

May 7, 2025


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அவருடைய பிறந்த நாளான இன்று படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டி என் ஏ ‘எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், கருணாகரன் , ரமேஷ் திலக்,  பாலாஜி சக்திவேல்,  சேத்தன்,  ரித்விகா, விஜி சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா, ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லராக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டில் ‘நிறங்கள் மூன்று ‘என்ற திரைப்படம் மட்டுமே வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை என்பதும் தற்போது இவர் ‘ தணல்’, ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin