படக்குறிப்பு, ஃபைட்டோசார் எனப்படும் இந்த புதை படிவம், 1.5 முதல் 2 மீட்டர் நீளமுடையது.கட்டுரை தகவல்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில், ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த அரிய முதலை போன்ற ஓர் இனத்தின் புதை படிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஃபைட்டோசார் (Phytosaur) எனப்படும் இந்த புதைபடிமம், 1.5 முதல் 2 மீட்டர் நீளமுடையது. இது 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள மெகா கிராமத்தில் கிடைத்துள்ளது. இம்மாநிலத்தின் நீர்வளத்துறையில் வேலைபார்க்கும் மூத்த நீர் புவியியலாளர் டாக்டர் நாராயண்தாஸ் இன்கியா மற்றும் அவரது குழுவினர் இதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த இடத்தில் மேலும் நிறைய புதைபடிமங்கள் இருக்கின்றன. அது பரிணாம வரலாறு குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்களை அளிக்கக்கூடியதாக இருக்கும் என இன்கியா பிபிசியிடம் தகவல் தெரிவித்தார்.
மேலும் இது புதைபடிமத்துக்கான முக்கிய சுலா தலமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஃபைட்டோசார் என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம் என்கிறார் புவியியலாளர் சிபி ராஜேந்திரன். இதுதான் பின்னர் முதலையாக பரிணாமம் அடைந்ததாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த வாரம் குளத்துக்காக குழி தோண்டியபோது கிராம மக்கள் இந்த எச்சங்களை கண்டறிந்துள்ளனர்.
நிலத்தில் பெரிய எலும்புக்கூடு போன்ற ஒன்றை கவனித்த ஒருவர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார்.
இந்த தளத்தை தோண்டியபோது, அது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒன்றின் புதை படிவ முட்டைபோல காட்சியளித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஃபைட்டோசார் என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம்.
“பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றங்கரையோரமாக நடுத்தர அளவிலான ஃபைட்டோசார் வாழ்ந்துவந்ததையும், அது மீன்களை தின்று உயிர் வாழ்ந்ததையும் இந்த புதைபடிமங்கள் உணர்த்துகின்றன” என இந்த ஆராச்சிக்கு தலைமை தாங்கும் மூத்த பாழியலாளரர் (palaeontologist – பாழடைந்த உயிரின எச்சங்கள் குறித்து ஆய்வு செய்பவர்) விஎஸ் பரிஹார் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
“இது மிகவும் அரிய வகை உயிரினத்தின் புதைபடிமமாக இருக்கக்கூடும், ஏனென்றால் இதுவரை உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இந்த ஃபைட்டோசாரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என ராஜேந்திரன் கூறுகிறார்.
இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும், ஆச்சரியமூட்டக் கூடியதாக இல்லை. ஏனெனில், அந்தப் பகுதியில் ஒருபுறம் நதியும், மறுபுறம் கடலும் இருந்ததாக நம்பப்படுகிறது.
“ஜெய்சால்மர், லத்தி ஃபார்மேஷ்ன் என்ற ஒரு புவியியல் அமைப்பின் ஒரு பகுதி ஆகும். ஜூராசிக் காலத்தில் டைனோசர்கள் உலா வந்த இடங்களில் ஒன்று.” என்கிறார் இன்கியா.
2023ஆம் ஆண்டு ஜெய்சால்மரின் டைனோசரின் முட்டை என நம்பப்படும் ஒரு புதைபடிவ முட்டையை கண்டுபிடித்தார் இன்கியா.
2018ஆம் ஆண்டில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இங்கிருந்த பழமையான எச்சங்களை கண்டுபிடித்தனர். இது இதுவரை இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான தாவர உண்ணி டைனோசரின் எச்சங்கள் என உறுதி செய்யப்பட்டது.