ஐரோப்பியர்கள், 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரை உலகிலேயே மிகவும் ‘அசிங்கமான பெண்’ என்று அழைத்திருக்கின்றனர். அவர் முகத்தில் இருந்த அளவுக்கு அதிகமான ரோமங்களும், அவர் தாடை அமைப்பும்தான் அதற்குக் காரணம்.
அவரின் பெயர் ஜூலியா பஸ்த்ரானா. மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடிப் பெண்ணான ஜூலியா, அரிய மரபு நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு முகம் முழுவதும் ரோமங்கள் அதிகமாக இருந்தன.
அவருடைய உருவ அமைப்பை காட்சிப் பொருளாக மாற்றிய அவருடைய கணவர், ஜூலியாவை உலகெங்கும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் சென்று பொது மக்களின் பார்வைக்கு வைத்து அதில் வருவாய் ஈட்டினார்.
ஜூலியா 1860இல் உயிரிழந்த பிறகு அவரது உடலைப் பதப்படுத்தி, அவருடைய கணவர் பல்வேறு நாடுகளுக்குப் பல ஆண்டுகளாக கண்காட்சிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த நீண்ட நெடிய பயணம் நார்வேயில் முடிவுக்கு வந்தது.
அவர் இறந்து 153 ஆண்டுகள் கழித்து, ஜூலியாவின் உடல் அவருடைய பூர்வீகமான மெக்சிகோவில் 2013ஆம் ஆண்டு புதைக்கப்பட்டது.
ஜூலியாவுக்கு ஏற்பட்ட அந்த நோய் என்ன?
ஜூலியா 1834ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஹைபெர்டிரைகோஸிஸ் (hypertrichosis) என்ற நோய் இருந்தது. இந்த மரபணு சார்ந்த நோய் காரணமாக அவர் வழக்கத்திற்கு மாறாக அதிக ரோமங்களை உடலில் கொண்டிருந்தார். அவரது தாடை அமைப்பும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
அவர் இந்த உருவத்தைக் கொண்டிருந்த காரணத்தால் அவரைப் பலரும் குரங்குப் பெண் என்றும் கரடிப் பெண் என்றும் அழைத்தனர். 1850களில் அவர் பொழுதுபோக்கு கலைஞரான தியோடோர் லாண்டை நேரில் சந்தித்தார். அமெரிக்கரான அவரை ஜூலியா திருமணம் செய்துகொண்டார்.
அவருடைய உருவ அமைப்பை ஒரு பகடையாகப் பயன்படுத்திய அவருடைய கணவர், ஜூலியாவை ஐரோப்பாவிற்கு காட்சிப் பொருளாக அழைத்துச் சென்றார்.
அங்கு கண்காட்சியில் வைக்கப்பட்ட ஜூலியா பார்வையாளர்கள் மத்தியில் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்விக்கும் பணியை மேற்கொண்டார்.
கடந்த 1860ஆம் ஆண்டு கருவுற்றிருந்த ஜூலியா ஒரு மகனுக்குத் தாயானார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரசவத்தின்போது அவர் உயிரிழக்க நேரிட்டது. ரஷ்யாவின் மாஸ்கோவில் அவர் உயிரிழந்து சில நாட்களிலேயே, தாயைப் போன்றே ஹைபெர்டிரைகோஸிஸ் நோயால் அவதியுற்ற அவரது மகனும் மரணமடைந்தார்.
மனைவியின் இறந்த உடலோடு பயணங்களை மேற்கொண்ட தியோடோர்
மரணத்தோடு ஜூலியாவின் மோசமான நாட்கள் முடிவுக்கு வந்துவிடவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு, தியோடோர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். தன்னுடைய பயணத்தின்போது ஜூலியாவின் உடலையும் அவர் எடுத்துச் சென்றார்.
இறந்துபோன ஜூலியாவின் உடலையும், அவரது மகனின் உடலையும் பதப்படுத்திய தியோடோர், அந்த உடல்களைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்று பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.
அவர்களுடைய உடல்கள் கண்காட்சிப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து அவர்களின் உடல்கள் நார்வேக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே தாய் மற்றும் மகனின் உடல்கள் புதைக்கப்பட்டன.
ஆனால் 1976ஆம் ஆண்டு அவர்களின் உடல்கள் திருடப்பட்டு, குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டது. பிறகு அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினர் ஓஸ்லோ பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
அவருடைய பிறந்த நாடான மெக்சிகோவில் ஜூலியாவின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டைச் சேர்ந்த கலைஞர் லாரா ஆண்டர்சன் பார்படா ஒரு பரப்புரையை மேற்கொண்டார்.
கடந்த 2005ம் ஆண்டு, நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “ஜூலியாவின் கதை வரலாற்றிலும், உலக மக்களின் ஞாபகத்திலும் இடம்பெற வேண்டும். அவருக்கான மரியாதையை அவர் திரும்பப் பெற வேண்டும்,” என்று லாரா ஆண்டர்சன் கூறினார்.
மெக்சிகோவில் இறுதி மரியாதை
ஜூலியாவின் உடல் பிறகு நார்வேவில் இருந்து மெக்சிகோவுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கே அவருடைய உடலுக்கு சினலோவா டி லேவா என்ற நகரத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலியில் பங்கேற்கப் பல்வேறு இடங்களில் இருந்து சினலோவாவுக்கு வந்தனர்.
“ஜூலியா மனித வரலாற்றில் மோசமான கொடுமைகளுக்கு ஆளானார். ஆனால் அவர் பெருமையுடன் அவருடைய வாழ்வை வாழ்ந்தார்,” என்று இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சினலோவாவின் ஆளுநர் மரியோ லோபஸ் கூறினார்.
ஒரு தனிமனிதரின் கையில் மற்றொரு நபர் வியாபாரப் பொருளாக மாறக் கூடாது என்று அந்த நிகழ்வில் பங்கேற்ற பாதிரியார் ஜெம் ரேயெஸ் ரேடன் தெரிவித்தார்.