பட மூலாதாரம், Getty Images
” மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது.”
இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய சொற்கள் இவை.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை விவரிக்க இதைவிட சிறந்த சொற்கள் இருக்க முடியாது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த அற்புதமான சதமும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீருடன் நிறைந்த 89 ரன்களும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
அமன்ஜோத் வெற்றிகரமான ஷாட்டை அடித்ததும், ஜெமிமா ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தார். அதே நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, தன்னைச் சுற்றியிருந்த வீராங்கனைகளை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்கினார்.
ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின.
அவர்களின் கூட்டணி, பல சாதனைகளை முறியடித்து, இந்தியாவை மூன்றாவது முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.
அதுவும், முந்தைய 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவர்கள் சாதனை படைத்தனர்.
இந்தப் போட்டியிலும், ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் இணைந்து விளையாடத் தொடங்கும் வரை ஆஸ்திரேலியா தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அகாடமியில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 339 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இது மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த ஸ்கோராகக் கருதப்படுகிறது.
பின்னர் ஆஸ்திரேலியா இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவை 9.2 ஓவர்களில் 59 ரன்களுக்கு வெளியேற்றியது. அதனால், ஒரு கட்டத்தில் இந்தியா போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியதாகவே தோன்றியது.
மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யப்போவது குறித்து தெரியாது- ஜெமிமா
பட மூலாதாரம், Getty Images
அப்போது தான் போட்டியின் சூழலே மாறத் தொடங்கியது.
ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் தொடர்ந்து வேகமாக ரன்கள் குவித்து, ரன் விகிதத்தின் அழுத்தத்தை சமாளித்தனர்.
கடினமான சூழ்நிலையிலும், ஜெமிமா 56 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டியதும், இன்னும் வேகமாக விளையாடத் தொடங்கினார்.
சதம் அடிக்க முடியாவிட்டாலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தனர். இது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் சிறந்த மூன்றாவது விக்கெட் கூட்டணியாக அமைந்தது.
ஜெமிமா மிகுந்த மன உறுதியுடன் களத்தில் நின்றதால், போட்டிக்குப் பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவரைப் பற்றி பெருமையாகப் பேசியார்.
“ஜெமிமா முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டது போல இருந்தது. நாங்கள் இருவரும் பேட்டிங் செய்தபோது, ஒருவரையொருவர் ஊக்குவித்தோம். ஜெமிமா அழுத்தத்தை அதிகரிக்க விடாமல், என்னை எளிமையாக விளையாடச் செய்தார். அவருடன் பேட்டிங் செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர், தான் ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் தொடர்ந்து ரன்கள் எடுக்கத் தூண்டினார். எல்லா பாராட்டுக்களும் அவருக்கே சொந்தம்”என போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.
இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய ஜெமிமாவுக்கு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டியது குறித்த தகவல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் கிடைத்தது.
“நான் சாதாரணமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மூன்றாவது இடத்துக்கும் அனுப்பப்படுவேன். இந்த முறை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்”என போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
“நான் அணி வெற்றி பெற உதவ விரும்பினேன்”
ஆனால் ஜெமிமா களமிறங்கிய தருணத்திலிருந்தே, இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் கொண்டு செல்லாமல் பெவிலியனுக்குத் திரும்பமாட்டேன் என்ற உறுதியுடன் விளையாடியதை போல தோன்றியது.
அதனால்தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி போன்ற பெரிய மேடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்த பிறகும் அவர் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. இந்தியா வெற்றியடையும் வரை காத்திருந்தார்.
போட்டி முடிந்ததும் அவர் ஆட்ட நாயகர் பட்டத்தைப் பெற்றபோது, 127 ரன்கள் கொண்ட அவரது அற்புத இன்னிங்ஸின் கதையைச் சொல்ல எந்த வார்த்தைகளும் தேவைப்படவில்லை. அவர் சிந்திய கண்ணீரே அந்தக் கதையைச் சொன்னது.
“நான் ஒரே ஒரு விஷயத்தை தான் நினைத்தேன். அணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். இன்று அது எனது 50 அல்லது 100 ரன்களைப் பற்றியது அல்ல. இந்தியா வெற்றி பெறுவதே முக்கியம்”என்று ஜெமிமா கூறினார்.
இந்த வெற்றியின் அடித்தளம் என, ஹர்மன்ப்ரீத் கவுருடன் இருந்த தனது கூட்டணியை அவர் விவரித்தார்.
“கடைசி வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் கிரீஸுக்கு வந்ததும், நாங்கள் நல்ல கூட்டணியை உருவாக்குவது பற்றிப் பேசினோம். தொடர்ந்து ரன்கள் எடுக்க முடிவு செய்தோம்,” என்று ஜெமிமா கூறினார்.
ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் கூட்டணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு அணி நாக்அவுட் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டுவதில் வெற்றி பெற்றது.
பட மூலாதாரம், Getty Images
ஜெமிமாவின் கடினமான பயணம்
உலகக் கோப்பையின் அரையிறுதிக்குச் செல்வது எவ்வளவு கடினமான பயணமாக இருந்தது என்பதை ஜெமிமா போட்டிக்குப் பிறகு பகிர்ந்தார்.
“கடந்த நான்கு மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் நான் என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாங்கள் முக்கியமான தருணங்களில் வெற்றியை இழந்துவிட்டதால், இந்த முறை அணியை வெற்றியடையச் செய்வதே என் ஒரே இலக்கு”என அவர் கூறினார்.
58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமிமா, அவற்றில் மூன்று சதங்களை அடித்துள்ளார், மேலும் அந்த மூன்று சதங்களும் இந்த ஆண்டில் அவர் பெற்ற வெற்றிகள்.
அதே நேரத்தில், 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதில் ஏற்பட்ட தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
“கடந்த முறை நான் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த முறை நான் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்தேன்,” என்று ஜெமிமா கூறினார்.
“ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதேன். மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் இருந்தேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு சவால் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது”என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சிரமங்களை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர்
பட மூலாதாரம், Getty Images
ஜெமிமாவைப் போலவே, ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இந்த உலகக் கோப்பை ஒரு கடினமான பயணமாக இருந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது.
ஒரு கட்டத்தில், இந்தியா அரையிறுதிக்கு செல்ல முடியாது என தோன்றியது. ஆனால் ஆறாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஹர்மன்ப்ரீத் கவுரின் அணி வலுவாக மீண்டு வந்தது. அத்துடன், இந்த முறை வரலாற்றை உருவாக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியது.
அரையிறுதிக்கு முன் சிறந்த ஃபார்மில் விளையாடி வந்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ஏற்பட்ட காயம், இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பையின் போது ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி, அணியின் பீல்டிங் குறைபாடுகள், எதிர்பார்த்த ரன்கள் கிடைக்காதது போன்றவை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஆனால் இந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒரு இன்னிங்ஸிலேயே அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பதிலளித்ததாகத் தோன்றியது.
இப்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையிலான இந்திய அணி, நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
