பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியாளராக வேண்டும் என்ற கனவுடன் ஜேஇஇ (JEE) தேர்வுக்குத் தயாராகின்றனர், அந்த தேர்வை எழுதுகின்றனர்.
ஆனால், ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு இடையே என்ன வித்தியாசம் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
எந்த தேர்வெழுதினால் எங்கு சேர முடியும் என்பது குறித்தும் தேர்வுக்கு தயாராவதற்கான சரியான முறை என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
ஜேஇஇ ஒரு சாதாரண தேர்வு அல்ல என்றும் கடுமையான போட்டி நிலவக் கூடியது என்று கூறும் நிபுணர்கள், சரியான தகவல்கள் மற்றும் திட்டமிடுதலை கொண்டிருப்பது முக்கியம் என்றும் கூறுகின்றனர்.
ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இரண்டுக்கும் இடையேயான வித்தியாசங்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஜேஇஇ என்பது இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் மிகப்பெரிய நுழைவுத்தேர்வாகும், இது ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் என இரு கட்டங்களாக நடைபெறும். அதன் நோக்கங்கள், அமைப்பு மற்றும் எவ்வளவு கடினமானது என்பது இரு தேர்வுகளுக்கும் வித்தியாசப்படும்.
ஜேஇஇ மெயின் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது, அதேசமயம் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.
ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கிவரும் ACE4 எனும் நிறுவனத்தின் இணை நிறுவனர் கணேஷ் பாண்டே கூறுகையில், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுக்கான சோதனை தேர்வே ஜேஇஇ மெயின் தேர்வு என்று குறிப்பிட்டார். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு மூலம் நாட்டிலுள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
ஜேஇஇ மெயின் தேர்வு மூலம் நாட்டின் 31 என்ஐடி, 26 ஐஐடி, சுமார் 26 அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல அரசு அல்லது தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகள் நடத்தப்படுகின்றன.
கிட்டத்தட்ட 14 லட்சம் மாணவர்கள் 2026ம் ஆண்டு நடக்கும் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்க முடியும் என்கிறார் கணேஷ் பாண்டே.
பட மூலாதாரம், Getty Images
எத்தனை முறை இந்த தேர்வை எழுத முடியும்?
ஜேஇஇ மெயின்: மொத்தமாக மூன்று முறை எழுதலாம். 12-ஆம் வகுப்பு படிக்கும் போதும் அடுத்துவரும் 2 ஆண்டுகளிலும் எழுத முடியும்.
ஜேஇஇ அட்வான்ஸ்ட்: இருமுறை மட்டுமே எழுத முடியும். 12-ஆம் வகுப்பு படிக்கும்போதும் அதற்கடுத்த ஆண்டிலும் எழுதலாம்.
தகுதிகள் என்ன?
ஜேஇஇ தேர்வெழுத 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 12-ஆம் வகுப்பில் குறைந்தது 75% மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும், அல்லது தேர்வில் முதல் 20 சதவிகிதத்தினருக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினர் குறைந்தது 65% மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும்.
கணேஷ் பாண்டே கூறுகையில், “சதவிகித விதிமுறைக்கான காரணம் என்னவென்றால், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் முதல் மாணவர் 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்ற மாணவர்கள் அனைவரும் அவருக்குப் பின்னால் இருக்கிறார்கள். ஆனால், அந்த மாணவர்களில் முதல் 20 சதவிகித இடங்களுக்குள் வரும் மாணவர்கள் JEE மெயின் தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர்.” என்றார்.
தேர்வு முறை என்ன?
ஜேஇஇ மெயின்
- மூன்று மணிநேர கணினி அடிப்படையிலான தேர்வு
- இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றுக்கு சமமான மதிப்பு (weightage) வழங்கப்படும்.
- கொடுக்கப்பட்டிருக்கும் சில தெரிவுகளிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்க வேண்டும் (Multiple Choice Questions – MCQs) மற்றும் எண் மதிப்பின் (numerical value) அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்படும்.
- தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் எண் மதிப்பின் அடிப்படையிலான கேள்விகளுக்கு வழங்கப்படாது.
ஜேஇஇ அட்வான்ஸ்ட்
- இரண்டு தாள்களை எழுத வேண்டும் (தாள் 1 மற்றும் தாள் 2), ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று மணிநேரம் வழங்கப்படும்.
- கொடுக்கப்பட்டிருக்கும் சில தெரிவுகளிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுப்பது (MCQ) மற்றும் எண் மதிப்பின் அடிப்படையிலான கேள்விகள் மற்றும் சரியானவற்றை பொருத்துதல் தொடர்பான கேள்விகள் (Matrix-match type) கேட்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
இதில் கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பெண்கள் ஆகியவை ஒவ்வோர் ஆண்டும் வேறுபடும்.
இரண்டு தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களிலிருந்தே பெரும்பான்மையாக உள்ளடக்கியிருக்கும்.
இந்த தேர்வுகள் எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதுதான் ஒரே வித்தியாசம். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வின் கேள்விகள் ஆழமானதாக இருக்கும்.
ஜேஇஇ மெயின் ஆண்டுக்கு இருமுறை நடக்கும். அதாவது ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும். மாணவர்கள் இருமுறையும் தேர்வெழுதலாம், இரு தேர்வுகளில் எது அதிக மதிப்பெண்ணோ அதன் அடிப்படையில் மாணவர்களின் தர வரிசை அமையும். ஏப்ரல் தேர்வுக்கு பின்பாகவே மாணவர்களின் தர வரிசை நிர்ணயிக்கப்படும்.
எப்படி தயாராக வேண்டும்?
ஜேஇஇ தேர்வு பலமுறை எழுதக்கூடிய நுழைவுத் தேர்வு அல்ல. அதற்கு கட்டுப்பாடு உள்ளது. எனவே, தங்களின் முதல் முயற்சியிலேயே நல்ல ரேங்க் எடுக்க வேண்டிய அழுத்தத்தில் மாணவர்கள் இருக்கின்றனர்.
ஐஐடி பிஹெச்யூவில் (BHU) கணினி அறிவியல் படித்து வரும் தன்மய் அகர்வால், இந்தாண்டு தன்னுடைய முதல் முயற்சியிலேயே இத்தேர்வில் வெற்றி பெற்றார், அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் முதல் 1,000 மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
மாதிரி தேர்வுகள் எழுதி அதனை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்பதே தனது உத்தியாக இருந்தது என்று கூறுகிறார் அவர்.
அவர் கூறுகையில், “இன்னும் மெயின் தேர்வுக்கு ஒரு மாதம் உள்ளது. இதற்கு தயாராகும் மாணவர்கள் நவம்பர் மாதத்திற்குள்ளேயே தங்கள் பாடத்திட்டங்களை முடித்திருக்க வேண்டும். இப்போது மீண்டும் பாடத்திட்டங்களை படித்துப் பார்க்க வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது மட்டுமே போதுமானது அல்ல. ஒவ்வொரு பாடத்திலும் உங்களிடம் உள்ள குறைகள், பலவீனங்களை ஆய்வு செய்து அதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், எத்தனை மாதிரி தேர்வுகள் எழுதினாலும் வீண் தான்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
நேர மேலாண்மை குறித்து பேசிய அவர், “நாள் முழுவதும் படிக்க வேண்டும் என அர்த்தமில்லை. மாறாக, இடைவேளை எடுத்து படிக்க வேண்டும். ஒரு வேலையை (task) எடுத்துக்கொண்டு அதை எவ்வளவு நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். முந்தைய ஆண்டுகளின் மெயின் தேர்வு கேள்வித்தாள்களை வைத்துக்கொண்டு, தேர்வு நேரத்திற்குள் அதை முடிக்கிறோமோ என்பதை பார்க்க வேண்டும்.” என்றார்.
ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப அவர்களுக்கான உத்தி மாறுபடும் என்றும், அது தேர்வு நாளன்று பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும் என, கணேஷ் பாண்டே அறிவுறுத்துகிறார்.
அவர் கூறுகையில், “பல மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருக்கும். நமக்கு எல்லாம் தெரியுமா, எல்லாவற்றையும் படித்துவிட்டோமா, எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறோமா என சந்தேகப்படுவார்கள். மாதிரி தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் என்ன செய்வது என நினைப்பார்கள்.” என்றார்.
அவரை பொறுத்தவரை, “இந்த கேள்விகளுக்கு நிச்சயமான பதில் இல்லை. போதுமான அளவில் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் பதில்.” என்றார்.

அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
2025-ஆம் ஆண்டில் மட்டும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை 54,378 பேர் எழுதினர். எனினும், அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் 18,160 இடங்கள் மட்டுமே உள்ளன.
அப்படியான சூழலில், அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையே இருக்கும்.
இந்த மாணவர்களுகு என்ன வாய்ப்புகள் உள்ளன என கணேஷ் பாண்டேவிடம் கேள்வியெழுப்பினோம்.
அவர் கூறுகையில், “இத்தகைய மாணவர்களுக்கு அவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை பொறுத்து, என்ஐடி, ஐஐஐடி, ஜிஐஎஃப்டி (GIFT), டிடியூ (DTU), என்எஸ்யூடி (NSUT) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன. அல்லது, ஆய்வுத்துறையில் கால் பதிக்க விரும்புபவர்கள் ஐஐஎஸ்இஆர் (IISER), என்ஐஎஸ்இஆர் (NISER) போன்றவற்றில் இணையலாம்.” என தெரிவித்தார்.
சிறந்த துறை அல்லது ஒரு முன்னணி ஐஐடி-யைத் தேடி பல மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் துறப்பதால், இடம் கிடைக்காத மாணவர்களுக்கு ஐஐடி-களிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று அவர் கூறுகிறார். எனினும், இது கவுன்சிலிங் நடைமுறை முடிந்த பிறகே சாத்தியமாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு