கிரீஸிலிருந்து ஜேர்மனி நோக்கிப் பயணித்த பயணிகள் விமானமொன்றிலிருந்து கடத்தல் எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான இரு போர் விமானங்கள் அவசரமாகப் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
எனினும், குறித்த விமானம் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து (காக்பிட்) விமானக் கடத்தலைக் குறிக்கும் ‘7500’ என்ற அவசர குறியீடு திடீரெனப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட ஜேர்மன் விமானப்படை, நிலைமையைக் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு அதிநவீன போர் விமானங்களை வானில் பறக்கவிட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் திட்டமிட்டபடி ஜேர்மனியின் நியூரம்பேர்க் நகரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் காணப்பட்ட தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறான தவறான கடத்தல் குறியீடு அனுப்பப்பட்டதாக விமான நிறுவனம் பின்னர் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தின் போது எந்தவோர் உண்மையான அவசர நிலையும் ஏற்படவில்லை எனவும், பயணிகளுக்கோ, விமானப் பணியாளர்களுக்கோ அல்லது விமானத்துக்கோ எந்தவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை எனவும் விமான நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
The post ஜேர்மனியில் விமானக் கடத்தல் எச்சரிக்கை குறியீட்டால் பரபரப்பு: அவசரமாகப் பறந்த போர் விமானங்கள்! appeared first on Vanakkam London.