
“2018-ஆம் ஆண்டில் டெல்லியில், அந்த மனுவாதிகள் எங்களின் அரசியலமைப்பை எரித்தனர். அந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணின் வீட்டில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் வேலையை செய்து வந்தேன்.
அப்போது அந்த பெண், ‘உங்களின் அரசியலமைப்புச் சட்டம் டெல்லியில் எரிக்கப்பட்டது’ என்றார். எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. நான் ஆத்திரமடைந்தேன். நான் அவரிடம், ‘உங்களின் கணவர் ஒரு அரசு அதிகாரி, அவர் மனுஸ்மிரிதியால் வாழ்கிறாரா அல்லது அரசியலைமைப்புச் சட்டத்தால் வாழ்கிறாரா’ எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து வந்தேன்,”
2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள மனு சிலை மீது கருப்பு சாயம் பூசிய காந்தபாய் அஹிரே உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்து கூறிய வரிகள் இவை.
காந்தபாய் மற்றும் அவரின் தோழி ஷிலாபாய் பவார் இணைந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் பிறகு இருவரும் 6 நாட்கள் ஜெய்பூரில் போலிஸ் காவலிலும் 18 நாட்கள் சிறையிலும் கழித்தனர். பிபிசி மராத்தியிடம் பேசிய காந்தபாய் அந்த முழு சம்பவத்தை விவரித்தார்.
இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக டெல்லியில் ஒரு அமைப்பு அரசியலமைப்பின் நகலை எரித்தது. ஆசாத் சேனா என்கிற அமைப்பு இந்தச் செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதன் பிறகு அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாடு முழுவதும் இருந்து எதிர்வினை வந்தது.
மனுவின் சிலை மீது ஏன் கருப்பு சாயத்தை பூச வேண்டும்?
“பல தலைவர்களும் பாபாசாகேப் அம்பேத்கர் டிசம்பர் 25-ஆம் தேதி மனுஸ்மிரிதியை எரித்தார் எனக் கூறுகின்றனர். ஆனால் ஜெய்பூரில் உள்ள உயர்நீதிமன்ற கிளை முன்பு மனுவின் சிலை இருப்பது எனக்கு தெரியவந்தது. அங்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். இந்த விவகாரம் பற்றி நன்கு யோசித்த பிறகு வீட்டில் யாரிடமும் கூறாமல் எனது தோழி ஷிலாபாய் உடன் ஜெய்பூருக்குச் சென்றேன்,” என்கிறார் காந்தபாய்.
ஊதுபத்தி தொழில் செய்து வாழ்ந்து வந்த காந்தபாய்க்கு ஜெய்பூர் பயணம் எளிதானதாக அமையவில்லை. ஹிலாபாய் கரும்பு வெட்டும் வேலைக்காக 6 மாதங்கள் கர்நாடகாவிற்குச் சென்றுவிடுவார். மீதமுள்ள நாட்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவார்.
“கிளம்புவதற்கு முன்பாக நான் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கி வைத்திருந்தேன்,” எனக் குறிப்பிடுகிறார் காந்தபாய்.
பட மூலாதாரம், SK
சத்திரபதி சம்பாஜி நகரில் இருந்து ஜெய்பூர் சென்ற பயணத்தை விவரித்துப் பேசிய காந்தபாய், “நான் ரயில் நிலையம் சென்று விசாரித்தபோது ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கிருந்து ஜெய்பூருக்கு ரயில் செல்வதை அறிந்து கொண்டேன். சனிக்கிழமை புறப்பட்டு திங்கட்கிழமை ஜெய்பூரை அடைந்தோம். அங்கு இறங்கி நீதிமன்றம் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்றோம்.” என்றார்.
மனு சிலை மீது கருப்பு சாயம் பூச வேண்டும் என்கிற எண்ணம் வந்த பின்னணியை விவரித்துப் பேசிய காந்தபாய், “மனுஸ்மிரிதி பெண்களுக்கு விரோதமானது. நாங்கள் மனு சிலையை உடைக்க திட்டமிட்டோம், ஆனால் அது நடக்கவில்லை. கருப்பு சாயம் பூசிய பிறகு நாங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். ‘அரசியலமைப்பு வாழ்க’ என முழங்கினோம். பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் ஓடிவந்தார்கள். மனுவாதிகள் எங்களைத் தாக்கினார்கள்,” என்கிறார் காந்தபாய்.
‘நாடு அரசியலமைப்பால் இயங்குகிறது, மனுஸ்மிரிதியால் அல்ல”
மனு சிலையை சேதப்படுத்தியதற்குப் பிறகான நிகழ்வுகளை விவரித்த காந்தபாய், “போலிஸ் வாகனத்தில் நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்து எங்களை காவல்நிலையல் அழைத்துச் சென்றார்கள். நாங்கள் அம்பேத்கரியவாதிகள் எனக் கூறினோம். காவல்துறையினர் எங்களை அடித்தார்கள். 6 நாட்கள் போலிஸ் காவலிலும் 18 நாட்கள் சிறையிலும் இருந்தோம்.” என்றார்.
“சிறையில் எங்களை தரை மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வைத்தார்கள். நாங்கள் அங்கு இருந்தவரை இந்த வேலைகளைச் செய்ய வைத்தார்கள்.” என்றார் காந்தபாய்.
பட மூலாதாரம், Shrikant Bangale
“நாங்கள் காவல்துறை மற்றும் சிறையைக் கண்டு பயப்படவில்லை. சிறையில் நாங்கள் இருந்தபோது, “பரவாயில்லை, மனு உயிரிழந்துவிட்டது, அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதைத் தான் பேசினோம். எங்களின் வீட்டைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. நாங்கள் மீண்டும் ஜெய்பூர் வந்து அந்த சிலையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைப்போம். ஒரு சாதாரண மனிதராக நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இந்த பெண்கள் விரோத சிலையுடன் தேவை இல்லை எனக் கூறுவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த நாடு மனுஸ்மிரிதியால் இயங்கவில்லை, அரசியலமைப்பால் தான் இந்த நாடு இயங்குகிறது. இந்த சிலைக்கு என்ன தேவை உள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜெய்பூர் சிறையில் இருந்து வெளியே வந்தது எப்படி?
அவர்கள் சிறையில் இருந்தபோது பல வழக்கறிஞர்களும் காந்தபாய் மற்றும் ஷிலாபாய் சார்பாக வாதாட முன்வந்தனர். ஆனால் பல நாட்களாக இருவரும் யாருக்கும் சம்மதம் தெரிவிக்காமலே இருந்து வந்தனர்.
“ஜெய்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபுலால் பைர்வா தான் ஒரு அம்பேத்கரியவாதி என்றும் ஜெய் பீமின் ஆதரவாளர் என்றும் கூறியபோது அவரை நம்பினோம். அவர் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த அனுமதித்தோம். அவர் வாதாடிய பிறகு எங்களுக்குப் பிணை கிடைத்தது,” என்று தெரிவித்தார் காந்தபாய்.
சிறையில் இருந்த வெளியே வந்த பிறகும் வீடு திரும்ப இருவரிடமும் பணம் இல்லை.

ஜெய்பூரில் இருந்து அவர்களின் ஊருக்கு வர ரயில் இல்லாததால் இருவரும் அஜ்மெர் சென்றனர். எங்களிடம் டிக்கெட் பெறுவதற்கு கூட காசு இல்லை. மிகவும் பசியில் இருந்தோம். அஜ்மெரில் 8 நாட்கள் தங்கி தோட்ட வேலை மற்றும் உணவகத்தில் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் வேலை பார்த்து இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். ஆனால் அவர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை.
“நாங்கள் மனு சிலை மீது கருப்பு சாயம் பூசிய காணொளி வைரலானதால் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் என் குடும்பத்தினர் வீட்டை காலி செய்யுமாறு கூறினார். ‘ஏன் வீட்டை காலி செய்ய வைக்கிறீர்கள்? என அவரிடம் கேட்டபோது நீங்கள் மிகவும் ஆபத்தான பெண் என பதிலளித்தார். நான் அவரிடம் உங்களுக்கு மனுஸ்மிரிதி புரியுமா? அரசியலமைப்புச் சட்டம் புரியுமா? எனக் கேட்டேன். அதன் பிறகு கைரானாவில் சில நாட்கள் தங்கினேன். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சில நாட்கள் தங்கினேன். உறவினர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கினேன்.” என்றார் காந்தபாய்.
“படித்த பெண்கள் சிலைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும்”
இந்தச் சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தற்போதும் ஜெய்பூரில் உள்ள அந்தச் சிலையால் தான் ஆத்திரமடைவதாகக் கூறுகிறார் காந்தபாய். “ஒரு கிராமப் பெண்ணாக இருந்துகொண்டு இதை நாங்கள் செய்தோம். தற்போது அனைத்து படித்த பெண்களும் சிலைக்கு எதிராக இதைச் செய்ய வேண்டும். அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.” என்றார் காந்தபாய்.
“அரசியலமைப்பால் அனைவரும் பயனடைகின்றனர். அரசியலமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். அரசியலமைப்பால் தான் நாம் வாழ்கிறோம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஆடாக வாழ்வதை விட ஒரு நாளாவது புலியாக வாழ வேண்டும் என பாபாசாகேப் கூறியுள்ளார்,” என்றார் அவர்.
ஷிலாபாய் தற்போது கரும்பு வேலைக்காக கர்நாடகாவிற்குச் சென்றுள்ளதால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் ஷிலாபாய் விருப்பப்பட்டு தான் இதைச் செய்ததாகக் கூறுகிறார் காந்தபாய்.
பட மூலாதாரம், Shrikant Bangale
அம்பேத்கர் ஏன் மனுஸ்மிரிதியை எரித்தார்?
1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி மகத் என்கிற இடத்தில் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் மனுஸ்மிரிதியை எரித்தார்.
அம்பேத்கர் பற்றிய புத்தகத்தின் ஆசிரியரும் பந்தார்கார் ஓரியன்டல் இன்ஸ்டிடியூடின் முன்னாள் துணை தலைவருமான முனைவர் ஹரி நார்கே பிபிசி மராத்தியிடம் கூறுகையில், “அம்பேத்கரின் நண்பரும் சமஸ்கிருத அறிஞருமான நீல்காந்த் சஹாஸ்ராபுத்தே மனுஸ்மிரிதியை எரிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அம்பேத்கர் அதற்கு ஒப்புதல் வழங்கினார்.” என்றார்.
“மனு நான்கு சாதிகளை புகழ்கிறது. நான்கு சாதிகளை தூய்மையாக வைக்க வேண்டும் என மனு கூறுகிறது. இது தான் சாதி அமைப்பிற்கு எழுச்சியை கொடுத்தது. மனு தான் சாதி அமைப்பை உருவாக்கியது எனக் கூற முடியாது என்றாலும் அதற்கான விதை மனுவால் விதைக்கப்பட்டது,” என அம்பேத்கர் தனது இந்து மதத்தின் தத்துவம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அம்பேத்கர் தனது ‘சூத்திரர்கள் யார்’ மற்றும் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ ஆகிய புத்தகங்கள் தான் ஏன் மனுஸ்மிரிதியை எதிர்க்கிறேன் என்பதை விளக்கியுள்ளார்.
இந்தச் சாதிகளை பல்லடுக்கு கட்டடம் எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் இதில் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்வதற்கு படிகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நான்கு வர்ணங்களை உருவாக்கியதில் மனு வேலைப் பிரிவுகளை உருவாக்கவில்லை, தொழிலாளர்கள் பிரிவை உருவாக்கியது,” என்று தெரிவித்தார் அம்பேத்கர்.
வில்லியம் ஜோன்ஸ் என்பவர் மனுஸ்மிரிதியை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.
“மனுஸ்மிரிதிக்கு சவால்விட்ட முதல் நபர் மகாத்மா ஜோதிபா பூலே தான். சமூகத்தில் விவசாய தொழிலாளர்கள், குறு விவசாயிகள், பின் தங்கியவர்கள் மற்றும் தலித்துகளின் நிலையைப் பார்த்த அவர் மனுஸ்மிரிதியை விமர்சித்தார்,” என ராஜிவ் லோசன் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஜெய்பூரில் உயர் நீதிமன்ற கிளை முன்பாக மனு சிலை எப்போது வந்தது?
ஜெய்பூரில் உயர் நீதிமன்ற கிளை வருவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு ஜோத்பூரில் இருந்தது. ராஜஸ்தானின் இந்தப் பகுதியில் நீதிமன்றத்தின் அமர்வை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெய்பூரில் நீதிமன்ற கிளை அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நாராயன் பரேட் தெரிவித்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் இயக்க செயற்பாட்டாளர் பி.எல்.மித்ரோத் பிபிசியிடம் பேசுகையில், “நீதிமன்ற வளாகம் முன்பு உள்ள மனு சிலை 1989-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்டபோதும் ராஜஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்றன. உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அப்போதைய பார் கவுன்சில் தலைவரிடம் வளாகத்தை அழகுபடுத்த அனுமதி கேட்டனர். அழகுபடுத்தல் என்கிற் பெயரில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது. அப்போது வழக்கறிஞர்களில் உயர் சாதியினரின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. சட்டத்தை முதலில் எழுதியது மனு தான் எனக் கூறி இந்த சிலை நிறுவப்பட்டது.” என்று தெரிவித்தார்.
“1989-இல் ஜோத்பூரில் உயர் நீதிமன்றத்தின் கூட்டம் நடத்தப்பட்டு 48 மணி நேரத்திற்குள் அந்தச் சிலை அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த சிலை இன்றும் அங்கு உள்ளது. பாபா ஆதவ் மற்றும் கன்ஷிராம் போன்ற பலரும் இதற்கு எதிராக போராடி உள்ளனர்,” என மித்ரோத் தெரிவித்தார்.
மனு மற்றும் மனுஸ்மிரிதியை ஆதரிப்பவர்கள் யார்?
மனு என்பது துக்காராம் மற்றும் தின்யானேஷ்வர் ஆகியோருக்கும் முந்தையது என்கிறார் வலதுசாரி செயற்பாட்டாளர் சம்பாஜி பிதே. அப்போதைய உரையில், உலகத்தின் நலனுக்கான மனு இந்தப் புத்தகத்தை எழுதியதாக பிதே தெரிவித்திருந்தார்.
மனு மிகப்பெரிய சட்ட நிபுணர், அதனால் தான் அவரின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வெளியே நிறுவப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பும் மனுஸ்மிரிதியை ஆதரிக்கிறது. “மனுஸ்மிரிதி எரிக்கப்பட வேண்டுமா இல்லை படிக்கப்பட வேண்டுமா” என்கிற புத்தகத்தை சனாதன் சன்ஸ்தா தயாரித்துள்ளது. மனுஸ்மிரிதியில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி தான் அரசியல் அமைப்பு இருப்பதாக சனாதன் சன்ஸ்தா தெரிவிக்கிறது.
ஜெர்மன் தத்துவவியலாளரான நீட்ஸே மீது மனுஸ்மிரிதி மிகப்பெரிய தாக்கம் செலுத்தியது என்றும் மனுஸ்மிரிதியில் சாதி என்கிற குறிப்பு இல்லை என்றும் அந்த அமைப்பும் கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு