0
ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, அவர் நேற்று ஜோர்டான் சென்றடைந்தார். அம்மாநாட்டின் விமான நிலையத்தில், ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து, அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அவரது அரச அரண்மனையில் சந்தித்து முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த நிலையில், இன்று ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா, பிரதமர் மோடியை ஒரு அருங்காட்சியகத்திற்குக் காரில் அழைத்துச் சென்றார்.
பிரதமர் மோடியும் ஜோர்டான் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, எத்தியோப்பியாவுக்குப் புறப்பட்டபோதும், விமான நிலையம் வரை காரை தானே ஓட்டி வந்து பட்டத்து இளவரசர் அவரை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு, இந்தியா–ஜோர்டான் உறவுகளின் நெருக்கத்தைக் காட்டும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.