படக்குறிப்பு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகலை முன்னிறுத்தி சென்னை எழும்பூரில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்டுரை தகவல்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
‘எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். தேர்தலுக்கு முன்பிருந்தே எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தங்கள் கட்சி எதிர்த்து வருவதாக, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் அமைச்சருமான ராஜ்மோகன் பேசினார்.
‘கொளத்தூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தோற்பார்’ என முன்கூட்டியே தான் எச்சரித்ததாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். ‘ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பங்கேற்காதது ஏற்புடையதல்ல’ என பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
‘இந்தியா’ கூட்டணியின் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்காதது ஏன்?
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சியினரான காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, இ.கம்யூனிஸ்ட் கட்சி, மா.கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. மேலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளாரும் அமைச்சருமான ராஜ்மோகன் கலந்துகொண்டு கட்சி சார்பான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். ஆனால், த.வெ.க கொடியைப் பரவலாக பார்க்க முடியவில்லை.
கூட்டம் முடியும் நேரத்தில் ஒரே ஒரு தொண்டர் மட்டும் சில கொடிகளோடு மேடை ஏறினார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சாலையின் ஓரத்தில் ஓரிரு இடங்களில் த.வெ.க கொடிகள் நடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
‘எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச மறுப்பது ஏன்?’ என்ற கேள்வியை தி.மு.க முன்வைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
‘த.வெ.க எப்போதும் எதிர்க்கும்’ – அமைச்சர் ராஜ்மோகன்
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் என்பது இந்தியாவின் மீது திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், “எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என்பதே எங்களிடம் இல்லை” எனப் பேசினார்.
“தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பிருந்தே எஸ்.ஐ.ஆரை எதிர்த்து வருகிறோம். பிகாரில் எஸ்.ஐ.ஆர் திணிக்கப்பட்டபோதே எதிர்த்தோம். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தோம். ‘இது ஜனநாயகத்துக்கு விரோதமானது’ என்பதைப் பேசி வருகிறோம்” என ராஜ்மோகன் தெரிவித்தார்.
“வாக்குரிமை என்பது மக்களின் வாழ்வுரிமை” எனக் கூறிய அவர், “எஸ்.ஐ.ஆரில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். பெண்கள், இளைஞர்கள், எளிய மக்கள் என முதல்முறை வாக்காளர்களை திட்டமிட்டு நீக்கியுள்ளனர். இவர்கள் நீக்கப்படாமல் இருந்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்” என்கிறார்.
“மக்களின் உரிமைக்காக எழுகின்ற ஒற்றுமை தொடர வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். இதனை த.வெ.க எப்போதும் எதிர்க்கும்” எனவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசும்போது, “த.வெ.க வருகையால் தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி பலம் பெற்றுள்ளது” எனப் பேசினார்.
டெல்லியில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் போராடி வந்த நிலையில் தற்போது மாநில அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அனைவரும் இணைந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
‘தொகுதி மாறி நிற்குமாறு ஸ்டாலினிடம் கூறினேன்’ – திருமாவளவன்
படக்குறிப்பு, “கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது சிரமம் எனத் தனக்குக் கிடைத்த தகவலை சேகர்பாபுவிடம் தெரிவித்ததாகக் கூறிய திருமாவளவன், “இதை ஸ்டாலினிடம் தெரிவித்து, தொகுதி மாறி நிற்குமாறு கூறினேன்.” என தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் மிகப் பெரிய அளவில் “வாக்குத் திருட்டு” நடந்துள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தொல்.திருமாவளவன், “கேரளத்தில் பினராயி விஜயன் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இவற்றை பார்க்கும்போது தன்னியல்பாக தோற்றதாகக் கூற முடியவில்லை” என்கிறார்.
” கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது சிரமம் எனத் தனக்குக் கிடைத்த தகவலை சேகர்பாபுவிடம் தெரிவித்ததாகக் கூறிய அவர், “இதை ஸ்டாலினிடம் தெரிவித்து, தொகுதி மாறி நிற்குமாறு கூறினேன். ஆனால், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. பிஎல்ஏ (வாக்குச்சாவடி முகவர்) போட்டு சரிசெய்துவிட்டதாகக் கூறினார்” என திருமாவளவன் பேசினார்.
“இதனைக் குற்றம்சாட்டும் நோக்கில் சொல்லவில்லை” எனப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனை ஆய்வு செய்ய வேண்டும். இது குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான சதி. இப்படி இருந்தால் ஜனநாயகத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
‘தி.மு.கவுக்கு உடன்பாடு உள்ளது’ – பெ.சண்முகம்
படக்குறிப்பு, “இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் முரண்பாடு உள்ளது” என சண்முகம் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியை முன்னெடுத்த தி.மு.க தற்போது போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
“இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் முரண்பாடு உள்ளது” எனக் கூறுகிறார்.
“கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடனும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடனும் எங்களுக்கு முரண்பாடு உள்ளது” எனக் கூறிய அவர், “ஆனால், கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். அந்தவகையில் தி.மு.கவும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
‘தி.மு.க அமைதி காப்பது ஆபத்தானது’ – வன்னி அரசு
படக்குறிப்பு, “தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக, ‘இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து தி.மு.க செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட விருப்பம் இல்லாவிட்டால் தனித்து போராட்டம் நடத்தலாம்” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய வி.சி.க துணைப் பொதுச் செயலாளரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, “வடக்கு ஆதிக்கம் செலுத்தும்போது தெற்கு போராட வேண்டும் என்பது தி.மு.கவின் கருத்தாக உள்ளது. தற்போது வடக்கு போராடும்போது தி.மு.க அமைதி காப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது” என்கிறார்.
“தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக, ‘இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து தி.மு.க செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட விருப்பம் இல்லாவிட்டால் தனித்து போராட்டம் நடத்தலாம்” என அவர் குறிப்பிட்டார்.
“ஆனால், தி.மு.க நிற்பது எந்தப் பக்கம் என்பது தான் எங்கள் கேள்வி. தமிழ்நாட்டில் கட்டமைப்பு ரீதியாக பலமாக உள்ள ஒரு கட்சி, அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு அமைதி காப்பது பா.ஜ.கவுக்குத் தான் வலிமை சேர்க்கும்” என்கிறார் அமைச்சர் வன்னி அரசு.
தி.மு.க விமர்சனம் – மாணிக்கம் தாகூர் பதில்
படக்குறிப்பு, காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாக்கூர் எம்.பி
எஸ்.ஐ.ஆர் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தி.மு.கவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
‘தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை ஸ்லீப்பர் செல்கள்’ எனவும் தி.மு.க விமர்சனம் செய்திருந்தது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“என் மீது இவ்வளவு கோபப்பட வேண்டியதில்லை. வெறுப்பு அரசியலைத் தோற்கடிப்பதற்கு வாருங்கள் எனக் கூறுகிறோம். அவர்கள் வர மறுக்கின்றனர். அவர்களுக்கு யார் மீது புதிதாக காதல் வந்துள்ளது எனத் தெரியவில்லை” எனக் கூறுகிறார்.
த.வெ.க முதல்முறையாக பங்கேற்றது குறித்துக் கேட்டபோது, “த.வெ.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பங்கேற்றார். தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட்டனர். இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசுவது நியாயம் இல்லை” என்றார்.
“இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக உள்ளதால் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதே கருத்தில் தி.மு.கவும் உள்ளது” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“ஆனால், ‘இந்தியா’ கூட்டணியுடன் மேடையைப் பகிர்வதற்கு தி.மு.க தயாராக இல்லை. இந்தக் கூட்டணியில் த.வெ.க இடம்பெற்றிருப்பது தான் முக்கியமான காரணம்” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘கூட்டணியில் இல்லை என்பதால் பங்கேற்கவில்லை’ – தி.மு.க
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தி.மு.க செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க இல்லை என்பதால் தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை” என்கிறார்.
“தி.மு.க கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரை அங்கம் வகித்துவிட்டு காங்கிரஸ் விலகிச் சென்றது. ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் த.வெ.க கூட்டணியில் இருப்போம்’ எனக் கூறிவிட்டனர். அப்படியிருக்கும்போது இந்தியா கூட்டணியில் தி.மு.க எப்படி அங்கம் வகிக்க முடியும்?” என அவர் கேள்வியெழுப்பினார்.
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தி.மு.க தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன், “நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்ப உள்ளோம். இவர்களுடன் போராட்டக் களத்தில் நிற்பது குறித்து பேசி முடிவெடுப்போம்” என்று மட்டும் பதில் அளித்தார்.
பாஜக கூறியது என்ன?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவரது எக்ஸ் பதிவில், போலி வாக்காளர்களைக் கண்டறிந்து, ஜனநாயக நடைமுறையை முறைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்ப்பது கூட்டணி விசுவாசத்துக்காகச் செய்யப்படும் ‘அரசியல் பிழை’ ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்டுள்ள கையாலாகாத்தனத்தை மறைக்கவே காங்கிரஸ் கட்சி இ.வி.எம் (வாக்குப்பதிவு இயந்திரங்கள்) மற்றும் எஸ்.ஐ.ஆர் மீது பழிபோட்டு வருவதாகவும், போதிய ஆதாரங்களின்றியே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.
“எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு பதவிக்கு வந்தவர்கள் “சட்டவிரோதக் குடியிருப்பாளர்கள்” (Illegal Occupants) என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.