0
இன்றைய காலையில்
வானிலே மீண்டும் சூரியன்
கைகளைக் கூப்பி
’ஞாயிறு போற்றுதும்…
ஞாயிறு போற்றுதும்…’
இளங்கோவின் ஆத்மாவாய்
இதயம் உரத்துப்பாடும்
காலையிலே தினமும்
குளித்த கையொடு
கிணற்றடியில் அம்மா நிகழ்த்திய
சூரிய வழிபாடும்
தைப்பொங்கல் படையல் வேளை
’சிவசூரியாய நம …
சிவசூரியாய நம … ’
இது அப்பு பாடும் பாடல் என்று
அம்மா பாட , நாங்கள் சேர்ந்து பாடிய
ஆராதனையும்
இன்று நெஞ்சிலே
விஸ்வரூபதரிசனமாகும்
இயற்கையோடு இசைந்த
பண்பாட்டு வாழ்வின் மேன்மை
’டிட்வா ’அனர்த்த இருண்மை தந்த
ஞானத்தால் உணரப்படும்
ஞாயிறு போற்றுதும்…
ஞாயிறு போற்றுதும்…
– என்.சண்முகலிங்கன்