• Sun. Dec 22nd, 2024

24×7 Live News

Apdin News

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முதல் ‘நீரா’ பானம் திட்டம் வரை: பாமகவின் உழவர் பேரியக்க மாநாட்டு தீர்மானங்கள் | Tungsten mining project should be withdrawn: Resolution passed at PMK Farmers Movement Conference

Byadmin

Dec 21, 2024


திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருவண்ணாமலையில் இன்று (டிச.21) நடைபெற்ற பாமக-வின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி உழவர் மாநில மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை வகித்தார். மாவட்ட பாமக செயலாளர்கள் அ.கணேஷ்குமார், ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி வரவேற்றார்.

பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு), எஸ்.பி.வெங்கடேஸ்வரன்(தருமபுரி), ச.சிவக்குமார்(மயிலம்), எஸ்.சதாசிவம்(மேட்டூர்) ஆகியோர் 45 தீர்மானங்களை வாசித்தனர். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்று, விவசாயிகளின் கரவொலி எழுப்பியதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக உழவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், தீர்வுகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். விளை பொருட்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பாசனத் திட்டங்களை செயல்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம். வேளாண் நிதிநிலை அறிக்கையை பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும். இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நீர்நிலைகளை தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும். ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். வேளாண் விளை பொருள் கொள்முதல் வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். விளை பொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும். பேரிடரில் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தனிக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

மேகேதாட்டு அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது. காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலிமையான காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். காவிரி – கோதாவரி, காவிரி – குண்டாறு, தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் நீரை திறக்க வேண்டும். வீராணம் ஏரியின் கொள்ளளவை 2 டிஎம்சியாக உயர்த்த வேண்டும். மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நந்தன் கால்வாய் திட்டம், தென்பெண்ணையாறு – துரிஞ்சலாறு இணைப்பை செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் 25 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். தமிழகத்தில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் திட்டம் மற்றும் சென்னை அருகே அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவுப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை வேளாண் பணிகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

‘நீரா’ பானத்தை வணிக அடிப்படையில் விற்பனை செய்ய திட்டம் வகுக்க வேண்டும். நியாய விலை கடைகளில் நாட்டு சர்க்கரை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஒரு கரும்பை ரூ.60 என்ற விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். திருமண்டங்குடி கால்ஸ் சர்க்கரை ஆலை, போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு இரங்கல் தெரிவிப்பது” உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக கவுரவத் தலைவர் கோ.க.மணி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் கவிஞர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



By admin