0
டப்ளினில் (Dublin) புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஹோட்டலுக்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், ஐரிஷ் பொலிஸார் மீது பட்டாசுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம், செவ்வாய்க்கிழமை மாலை சிட்டிவெஸ்ட் ஹோட்டலுக்கு (Citywest Hotel) வெளியே நடைபெற்றது. சம்பவத்தின் போது, ஒரு வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
வன்முறை வெடித்தபோது, அயர்லாந்தின் காவல் படையான அன் கர்தா சியோச்சானாவின் (An Garda Síochána) கிட்டத்தட்ட 300 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு பெரிய கூட்டம் ஹோட்டலுக்கு வெளியே கூடியது. போராட்டக்காரர்கள் ஐரிஷ் கொடிகளைக் காண்பித்து முழக்கமிட்டனர்.
பொது ஒழுங்கு அதிகாரிகள் கவசங்களுடனும், சில குதிரைப்படையினருடனும், போராட்டக்காரர்களை பின்னுக்குத் தள்ளினர். கூட்டத்தில் இருந்த சிலர் கற்கள் மற்றும் பிற பொருட்களை பொலிஸார் மீது வீசினர். பொலிஸார், போராட்டக்காரர்கள் ஹோட்டலுக்குள் செல்வதைத் தடுத்தனர்.
சம்பவ இடத்தில் ஒரு பொலிஸ் ஹெலிகாப்டர் மேலே வட்டமிட்டதுடன், நீர்த் தெளிப்பானும் (water cannon) பயன்படுத்தப்பட்டது.
வன்முறையில் ஈடுபட்ட பலரின் முகங்கள் மூடப்பட்டிருந்தன, ஆனால் குற்றவாளிகளைக் கண்டறிவதாக பொலிஸார் உறுதி அளித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் பாலியல் பலாத்கார புகார் ஒன்று எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஹோட்டலுக்கு வெளியே இது இரண்டாவது இரவாக நடந்த போராட்டமாகும். இந்த ஹோட்டல் சர்வதேசப் பாதுகாப்பை நாடுபவர்களுக்கான அரச தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்று அயர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஜிம் ஓ’கல்லகன் (Jim O’Callaghan) தெரிவித்தார். மேலும், அந்தப் பகுதியில் பொதுப் பாதுகாப்பிற்கு தற்போது அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.