ஹீரோ மற்றும் ஒரு குழந்தை கதாபாத்திரத்துக்கு இடையேயான உணர்ச்சிமிக்க கதைக்களம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
என்னதான் இது பழைய கதையாக இருந்தாலும், புதிதாக ரசிக்க வைக்கும்படி ஏதாவது ஒரு விஷயம் படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தெலுங்கு திரைப்படமான டாக்கு மகாராஜில், பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா இதே போன்ற ஒரு பழைய கதைக்களத்தில்தான் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை பாபி கொல்லி என்பவர் இயக்கியுள்ளார்.
நல்ல திரைக்கதை, வசனம், சண்டைக்காட்சிகள் என புதிதான ஏதாவது ஒரு விஷயம் டாக்கு மகாராஜ் திரைப்படத்தில் இருக்கிறதா? இந்த படம் எப்படி இருக்கிறது?
கதை என்ன?
இந்த கதை 1996-ஆம் ஆண்டு மதனப்பள்ளியில் ஒரு தேயிலை தோட்டத்தில் தொடங்குகிறது. அதன் உரிமையாளராக கிருஷ்ணமூர்த்தி இருக்கிறார். அவரது பேத்தி விபத்தில் சிக்கியதை அறிந்த ஹீரோ, அந்த வீட்டில் டிரைவர் பணியில் சேர்கிறார். அவர் குழந்தையை பத்திரமாக பாதுகாக்கிறார்.
அந்த டிரைவர் வேறு யாரும் இல்லை மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாக்கு மகாராஜ் ஆவர். அவர் போபாலில் இருந்து திகார் சிறைக்கு செல்லும் போது இந்த குழந்தையால் மதனப்பள்ளிக்கு வந்தார். அவரை போலீஸ் அதிகாரி ஸ்டீபன் தேடி வருகிறார்.
ஹீரோவுக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? டாக்கு மகாராஜ் உண்மையில் யார்? வில்லன் தாக்கூர் (பாபி தியோல்) உடன் என்ன பிரச்னை? இதுவே படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி மிகவும் கணிக்கக்கூடியதாக மிகவும் மெதுவாக நகர்கிறது. அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் எல்லா படத்தைப் போல டெம்ப்லேட் முடிவாக இருக்கிறது.
இரண்டாம் பாதியும் அதே விறுவிறுப்புடன் இருந்தால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ஆனால் இயக்குநர் இரண்டாம் பாதியை சரியாக கையாளவில்லை.
முதல்பாதியில் எத்தனை திருப்பங்கள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் அந்த முடிச்சுகளை அவிழ்த்துவிட்டு கதையை முழுதாக சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டாம் பாதியில் பெரும்பாலும் ஹீரோவின் பிளாஷ்பேக் காட்சிகளே இருக்கின்றன. அந்த இடத்தில்தான் இயக்குனர் பாபி தடுமாறியிருக்கிறார். புதிய விஷயங்களை முயற்சிக்காமல் பழைய பாணியிலே படத்தை எடுத்துள்ளார்.
குழந்தைக்காக உள்ளூர் எம்.எல்.ஏ (ரவிகிஷன்) கும்பலுடன் சண்டையிட்ட ஹீரோவின் நோக்கம் வேறு. இடைவேளையில் முக்கிய வில்லன் தாக்கூர் நுழைவதால் கதை வேறு பாதையில் செல்கின்றது.
முதல்பாதியில் பாலகிருஷ்ணா மிகவும் ஸ்டையிலாக நடித்துள்ளார். அவருக்கு குறைவான வசனங்கள் இருந்தாலும், மிகவும் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார்.
இந்த படத்தில் டிரைவர் நானாஜி, இன்ஜினியர் சீதாராம், டாக்கு மகாராஜ் என மூன்று வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். இது அவரது சினிமா வாழ்க்கையில் புதிய முயற்சியாக இருக்கிறது.
மிகவும் சுலபமான ஒரு கதைகளத்தை இயக்குநர் சோதப்பியுள்ளார்.
டாக்குவின் கதையை பார்க்கும்போது ரசிகர்களுக்கு விக்ரம், ஜெயிலர், பாகுபலி போன்ற திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். மக்கள் பிரச்னைகள் என்று வரும்போது நமது நினைவுக்கு உடனடியாக வருவது சுரங்கம் அல்லது தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதுதான்.
இதைத்தாண்டி புதிய கருத்துகள் படங்களில் கூறப்படுவதில்லை. இந்த படமும் அதே போன்ற பழைய பிரச்னைகளை பற்றியே பேசுகிறது. இந்த பழைய பிரச்னையை கூட இந்த படத்தில் புது விதமாக சொல்லப்படவில்லை.
சுரங்கங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் KGF படத்தில் பேசப்பட்டிருக்கும். பாகுபலியில் பிரபாஸ் கதாப்பாத்திரத்தை பார்த்ததும் பொதுமக்கள் மண்டியிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். இந்த படத்திலும் அதே போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
இது போன்ற காட்சிகளையும், சுமாரான இரண்டாம் பாதியையும் பொறுத்துக்கொண்டு இந்த படத்தைப் பார்க்கலாம்.
படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பாலகிருஷ்ணாவின் ஜோடியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்துள்ளார், அவரது கதாபாத்திரம் அவ்வளவு வலுவாக இல்லை.
ஒரு இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வருகிறார் அவரது கதாபாத்திரம் சிறிய அளவில் கவனத்தைப் பெற்றது.
ஊர்வசி ரௌடெலாவின் ‘தபிடி திபிடி’ என்ற பாடல் கதைக்கு பொருத்தமானதாக இல்லை. இந்த பாடலில் இயக்குநர் பாபியும் இடையில் தோன்றி நடனமாடி இருப்பார்.
அதனால் பார்வையாளர்கள் படம் மீது கொண்டுள்ள கவனத்தை இழக்கின்றனர்.
வில்லன் கதாப்பாத்திரம் வலுவாக இல்லாததும் இந்த படத்திற்கு குறையாக இருக்கிறது. படத்தின் இடைவெளிக் காட்சியில் பாபி தியோலின் கதாப்பாத்திரம் சற்று வித்தியாசமாக தெரிகிறது. மற்றபடி அவரும் வழக்கமான வில்லன்தான்.
சத்யா, வி.டி.வி கணேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தில் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி இல்லை.
இன்னும் பல நடிகர்கள் படத்தில் பணியாற்றியுள்ளனர், ஆனால் அவர்கள் வேண்டுமென்றே படத்தில் வைக்கப்பட்டுள்ளது போல தெரிந்தது, அவர்களுக்கென தனிசிறப்பான பங்கு என படத்தில் எதுவும் இல்லை.
பல இடங்களில் ஹீரோவின் ‘பஞ்ச்’ வசனங்கள் சிறப்பாக இருக்கிறது. பாலகிருஷ்ணா இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார், இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
ஆனால் ஒரு சாதாரண சினிமா ரசிகருக்கு இந்த படம் அவ்வளவு பிடிக்காது.
1. படத்தின் முதல் பாதி
2. பாலகிருஷ்ணாவின் தோற்றமும் நடிப்பும்
3. ஒளிப்பதிவு
4. பின்னணி இசை
1. இரண்டாம் பாதி
2. டெம்ப்ளேட் கதை
3. வழக்கமான க்ளைமாக்ஸ்
(குறிப்பு: இந்த கட்டுரையில் உள்ள கருத்துகள் எழுதியவரின் தனிப்பட்ட கருத்துக்களே)