பட மூலாதாரம், Getty Images
ரத்தன் டாடா மறைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை குழுமமான டாடா நிறுவனம் தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
உப்பு முதல் எஃகு வரை பல துறைகளில் செயல்படும் இந்த குழுமத்தை, ரத்தன் டாடா உலகளாவிய, நவீன, தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்ட நிறுவனமாக மாற்றினார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர், டெட்லி டீ போன்ற பிரிட்டிஷ் பிராண்டுகளையும் சொந்தமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐஃபோன்களையும் தயாரிக்கிறது.
ஆனால் தற்போது, டாடா குழுமத்தின் நிர்வாகத்தில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
பல மாதங்களாக, அறங்காவலர்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டி குழுமத்திற்குள் பிரச்னையை உருவாக்கியுள்ளது.
இதனால், 2016-ல் டாடா குழுமத்தில் ஏற்பட்ட சட்டச் சிக்கல் போன்ற நிலை மீண்டும் உருவாகாமல் தடுக்க, மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள அமைச்சர்கள் சில வாரங்களுக்கு முன் சமரசம் செய்து பிரச்னையை தற்காலிகமாக அடக்கியதாகத் தோன்றினாலும், சமீபத்திய தகவல்களின்படி, ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரியவரும் டாடா அறக்கட்டளை நிர்வாக குழுவின் அறங்காவலருமான மெஹ்லி மிஸ்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது. இத்தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
மெஹ்லி மிஸ்திரி நீக்கப்பட்டது குறித்து கருத்தை பெற டாடா டிரஸ்டை பிபிசி தொடர்புகொண்டது.
டாடா குழுமம் குறித்த வரலாற்றை எழுதிய மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிர்சியா ராயனு, “இது தீர்க்கப்படாத பழைய வணிகப் பிரச்னையின் மறுவருகை” என்கிறார்.
அதாவது, டாடா குழுமத்தை யார் உண்மையில் இயக்குகிறார்கள்? மேலும், பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ் (டாடா சன்ஸின் 66% பங்குகள் கொண்ட தொண்டு பிரிவு) வணிக முடிவுகளில் எவ்வளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தனித்துவமான அமைப்பு
டாடா குழுமத்தின் அமைப்பு தனித்துவமானது. டாடா சன்ஸ் எனப்படும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத மைய நிறுவனத்தின் கட்டுப்பாடு டாடா டிரஸ்ட்ஸ் எனப்படும் தொண்டு நிறுவனத்தின் கையில் உள்ளது.
இதனால், அக்குழுமம் வரி மற்றும் சட்ட ரீதியான பல நன்மைகளை பெற்றுள்ளது. மேலும் பல தொண்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஆனால் இதே அமைப்பில் வணிகமும் தொண்டும் இணைந்திருப்பதால் நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, டாடா குழுமம் புதிய துறைகளான செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் போன்றவற்றில் விரிவடைய முயற்சி செய்து வருகிறது. அதேசமயம், 2021-ல் அரசாங்கத்திடமிருந்து வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த வருடத்தில் நடந்த துயரமான விபத்துக்குப் பிறகு, அதுவும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில் டாடா குழுமத்தில் என்ன தவறு நடந்தது என்ற கேள்வி எழுகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
என்ன பிரச்னை?
தற்போது எழுந்துள்ள முரண்பாடு குறித்து டாடா குழுமம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் தகவல்களின்படி, நிர்வாக குழு நியமனங்கள், நிதி ஒப்புதல்கள், மற்றும் டாடா சன்ஸை பங்குச் சந்தையில் சேர்ப்பது ஆகியவற்றைச் சுற்றி அறங்காவலர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த பிரச்னையின் காரணம் என கூறப்படுகிறது.
டாடா சன்ஸ், தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 26 டாடா நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாக உள்ளது, மேலும் அவை சேர்ந்து சுமார் 328 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.
டாடா குழுமத்திற்கு நெருக்கமான ஒருவர் பிபிசியிடம் (பெயர் வெளியிட விரும்பாத நிலையில்) இதுகுறித்துப் பேசினார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், நிர்வாக குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சில அறங்காவலர் அதிக செல்வாக்கு செலுத்த விரும்புகிறார்கள். அதுவே இப்போதைய மோதலின் மையக் காரணமாக உள்ளது என்றார்.
தற்போது, டாடா டிரஸ்ட்ஸுக்கு டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் மூன்று பிரதிநிதிகள் உள்ளனர் என்றும் அந்த நபர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “டாடா டிரஸ்ட்ஸ் பிரதிநிதிகளுக்கு நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் வீட்டோ உரிமை இருப்பினும், அவர்கள் வழக்கமாக மேற்பார்வை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் இப்போது சிலர் வணிக முடிவுகளிலும் நேரடியாக அதிகாரம் பெற விரும்புகிறார்கள்” என குறிப்பிட்டார்.
டாடா சன்ஸில் 18% பங்கு வைத்திருக்கும் எஸ்பி குழுமம், நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும் என்று வலியுறுத்துவது மற்றொரு பெரிய சர்ச்சையாக உள்ளது. அவர்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்து வந்தாலும் பெரும்பாலான அறங்காவலர்கள் இதற்கு எதிராக உள்ளனர்.
”டாடா சன்ஸை பங்குச்சந்தையில் பட்டியலிட்டால், அது டிரஸ்டின் அதிகாரத்தையும், நீண்டகால நோக்கத்தையும் குறைத்து, நிறுவனத்தை சந்தை அழுத்தங்களுக்கு உட்படுத்தும் என்ற அச்சம் உள்ளது,”என்றும் அந்த நபர் குறிப்பிட்டார்.
அதே சமயம், எஸ்பி குழுமம் இதை “தார்மீகமும் சமூகப் பொறுப்பும் கொண்ட ஒரு கட்டாய நடவடிக்கை” என்று விளக்குகிறது. அவர்களது கூற்றுப்படி, இதனால் பங்குதாரர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், மேலும் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் தரம் மேம்படும்.
இந்த மோதல், டாடா குழுமம் இன்று எதிர்கொள்ளும் உண்மையான சிக்கலை வெளிப்படுத்துகிறது.
” அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல பெரிய குழுமங்கள் தற்போது நிலைத்தன்மையும் நீடித்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதற்காக அறக்கட்டளை உரிமை அமைப்பை தேர்வு செய்து வருகின்றன. அந்த நிலையில், டாடா சன்ஸை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது அந்தப் போக்குக்கு எதிரானதாக இருக்கும். அந்த நிறுவனங்கள் டாடாவையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இப்படியான அமைப்பை உருவாக்கி வருகின்றன”என்று அவர் கூறுகிறார்.
“ஆனால் அதே நேரத்தில், தனியார் அல்லது குறுகிய வட்டத்தில் உள்ள நிறுவனங்கள் வெளிப்புற கண்காணிப்பிற்கு குறைவாகவே உட்படுவதால், அது மோதல்களையும் நற்பெயருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உண்டு” என்றும் அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
இந்த மோதல், டாடா குழுமத்தின் நிர்வாக நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியதுடன், இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மதிக்கப்படும் வணிகக் குடும்பங்களில் ஒன்றான டாடா நிறுவனத்தின் பிம்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விளம்பர நிபுணர் திலீப் செரியன் கூறுகிறார். அவர், முன்னாள் டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியுடன் நெருக்கமாக பணியாற்றியவர்.
“இது, சமீபத்தில் டாடா பெயருக்கு ஏற்பட்ட தொடர் அடிகளின் வரிசையில் வந்துள்ள மற்றொரு அடி” என்று செரியன் பிபிசியிடம் கூறினார்.
ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விபத்து, மற்றும் இந்த செப்டம்பரில் ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR) முக்கிய பிரிவொன்றில் நடந்த சைபர் தாக்குதல் காரணமாக, பிரிட்டனின் கார் உற்பத்தி 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததும் டாடா குழுமத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என செரியன் விளக்கினார்.
மேலும், டாடா குழுமத்தின் வருவாயில் கிட்டத்தட்ட பாதியளவு பங்களிக்கும் முக்கிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்ஸும் (TCS) தற்போது சிக்கல்களைச் சந்திக்கிறது. மொத்தமாக பெரும் அளவில் பணி நீக்கங்கள் நடந்துள்ளன.
மேலும் மார்க்ஸ் & ஸ்பென்சர் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை நிறுத்தியிருப்பதும் குழுமத்திற்கு இன்னொரு அதிர்ச்சியாக உள்ளது.
“இந்த நிர்வாக குழு மோதல்கள் மேலும் குழப்பத்தை உருவாக்குகின்றன. பங்குகளின் செயல்திறன் குறித்த கவலை மட்டுமல்ல, முதலீட்டாளர்களிடையே ‘டாடா குழுமத்தில் நாம் யாருடன் வேலை செய்கிறோம்?’ என்ற குழப்பமும் உருவாகிறது” என்று செரியன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இந்த குழப்பங்களுக்கு மத்தியில், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இது நிர்வாக குழுவில் ஏற்பட்ட பிளவு அல்ல. அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட மோதல் என்பதால், தலைவர் தனது பணியைத் தொடரலாம். ஆனால் இது அவருக்கு தேவையற்ற கவனச்சிதறலாக இருக்கும்,”என்று டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமம், இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்திப்பது புதிது அல்ல.
90களில் ரத்தன் டாடா குழுமத்தைப் பொறுப்பேற்று, அதன் நிர்வாக அமைப்பை நவீனமயமாக்க முயன்றபோதும் இதேபோல் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன் சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டபோது ஏற்பட்ட மோதலும் இன்னும் பலருடைய நினைவில் உள்ளது.

ஆனால், இந்த முறை ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது என்கிறார் பேராசிரியர் மிர்சியா ராயனு.
”அந்தக் காலத்தில் குறைந்த செயல்திறன் கொண்ட நிறுவனங்களை டிசிஎஸ் (TCS) தாங்கி நிறுத்தியது. அது குழுமத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்தது. டிசிஎஸுக்கு முன்பு, இந்த வேலையை டாடா ஸ்டீல் ஏற்றுக்கொண்டிருந்தது,” என அவர் விளக்குகிறார்.
இப்போது, டிசிஎஸ்ஸின் வணிக மாதிரி மாற்றங்களை எதிர்கொள்கிறது. அதன் வருவாய் பங்களிப்பு அழுத்தத்துக்குள்ளாகி வருகிறது. டாடா குழுமத்தில் டிசிஎஸ் போல நிலைத்திருக்கும் நிறுவனம் உருவாகவில்லை. இந்தச் சூழல்தான், குழுமம் சந்தித்து வரும் உட்பிளவுகளைக் கையாள கடினமாக்குகிறது.
“இது குறுகிய காலத்தில் குழப்பத்தையும் நிலையின்மையையும் ஏற்படுத்தலாம். ஆனால், காலப்போக்கில் மிகவும் வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள புதிய நிர்வாக அமைப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் பேராசிரியர் மிர்சியா ராயனு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு