பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 28 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
“சென்னை அண்ணா நகர் அருகே முகமூடி அணிந்த ஆறு நபர்கள் ராபர்ட் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் கொலை செய்து அது தொடர்பான செய்தியை இன்ஸ்டாகிராமில் அந்தக் கொலை கும்பல் பதிவு செய்ததாக” டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், “புதன்கிழமை மாலை ராபர்ட் கொலை செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான தகவலை அந்தக் கொலை கும்பல் இன்ஸ்டகிராமில் ரீல்ஸாக பதிவு செய்து அதில், ‘ராபர்ட் மட்டை 100%’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது ராபர்ட் இறந்தது 100% உறுதியாகிவிட்டது என்று அவர்கள் இன்ஸ்டகிராமில் பதிவுட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லோகு என்ற சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிக்கும் ராபர்ட்டுக்கும் இடையே கஞ்சா விற்பனையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சம்பவம் நடந்த தினத்தன்று தன்னுடைய தந்தைக்காக ராபர்ட் வாசலில் காத்துக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 6 நபர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராபர்ட்டின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்டகிராம் ரீல்ஸை தொடர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை பரிசோதிப்பதில் போக்குவரத்துக் காவலர்களுக்கு புதிய கட்டுப்பாடு
வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினர் கும்பலாக நின்று சோதனையில் ஈடுபடக்கூடாது என போக்குவரத்துக் காவல்துறைக்குப் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை நிறுத்துவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது,” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, வாகன சோதனை நடத்தும்போது துணை ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும், துணை ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயா்: அரசு நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயா்களில் உள்ள சாதிப் பெயா்களை நீக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிா்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயா்களில் உள்ள சாதிப் பெயா்கள் நீக்கப்படுமா என்றும், சாதிப் பெயா்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா், இது தொடா்பான அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், “அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பள்ளிக் கூடங்களில் சாதிப் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைத்த தமிழக அரசு, கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் விவகாரத்தில் நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் கோருவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினாா்.
பின்னா் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அதற்கு மேல் அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி, விசாரணையை ஒத்தி வைத்ததாகவும் தினமணி செய்தி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா திருத்தங்களுக்கு ஒப்புதல்
முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள், 2 முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் ஒபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை வக்பு கவுன்சிலில் இடம் பெறச் செய்வது, வக்பு தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்டங்களை நன்கு அறிந்த உறுப்பினரை இடம்பெறச் செய்வது உள்ளிட்ட 14 வக்பு மசோதா திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுகுழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
நாட்டில் உள்ள முஸ்லிம் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில வக்பு வாரியங்கள் முடிவெடுக்கின்றன. இதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தவும், துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்களைக் கொண்டு வந்து அதற்கான மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில், சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டுக் குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பிக்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் 66 மாற்றங்கள் முன்மொழியப்பட்டன. எதிர்க்கட்சியினர் கூறிய 66 மாற்றங்கள் நிராகரிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்குப் பிறகு, 15-11 என்ற பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கூட்டுக்குழு பரிந்துரை செய்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை அறிக்கையை காணவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் அதன் அறிக்கையே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் பேசிய நளிந்த, “2016ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 லட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்தக் குழுவின் அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை,” என்று தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை. அதுவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக் குழுவுக்கு 1,063 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 5,301 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக் குழுக்கள் முறையாக அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் 2022 மே 09 காலி முகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதமாக விசாரணை செய்து, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நட்ட ஈடும் செலுத்தப்பட்டுள்ளது,” என்று கூறியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு