பட மூலாதாரம், Getty Images
இன்றைய (07/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தந்தங்களுக்காக யானை ஒன்று கொல்லப்பட்டு அதன் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள நெருப்பூர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யானையின் இறப்பு தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யானை ஆணா, பெண்ணா என்பது தொடர்பான தகவலும், யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா என்பது தொடர்பான தகவலும் இடம் பெறவில்லை என்று கூறி வனநல ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய வனத்துறையினர், “தந்தங்களை எடுப்பதற்காகவே யானையின் தும்பிக்கை வெட்டப்பட்டது. யானையின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதை உறுதி செய்வதற்கான ‘மெட்டல் டிடெக்டர்’ சோதனைகளை மேற்கொள்ள இயலாத வகையில் யானையின் உடல் எரிக்கப்பட்டுவிட்டது,” என்று கூறியதாக தி இந்து நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிமுகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைப்படி, மும்மொழிப் பாடத்திட்ட கொள்கையை ஏறக்குறைய அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன,” என்று கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்த ஜி.எஸ்.மணி, “தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுடன் 30 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்தத் திட்டத்தின்படி இந்த மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை நிறுவி, மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன.
ஆனால் இந்த மூன்று மாநிலங்கள் மட்டும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்காமல் கையொப்பமிட மறுக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.3000 கோடி நிதி உதவி கிடைக்கும். இத்திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக மூன்று மாநில அரசுகளும் ஹிந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தைக் காட்டி ஏற்க மறுக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
அதோடு, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த மூன்று மாநில அரசுகளுக்கும் மும்மொழிப் பாடத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குகளைப் பதிவு செய்யத் தடை
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்குகள் பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், “சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதையடுத்து அவருக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 6 அன்று நடைபெற்றது,” எனக் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், X/ Udhaystalin
அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ”இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை என்றால் கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கேனும் மாற்ற வேண்டும். உதயநிதி பேசிய கருத்துகளைவிட பாஜக நிர்வாகி நூபுர்சர்மா, அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் அதிகளவில் சர்சசைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன.
ஆனால் உதயநிதியை இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே அலைக்கழிக்கும் நோக்கில் தற்போது பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக வழக்குகள் பதியப்படுகின்றன. எனவே உதயநிதிக்கு எதிராகப் புதிதாக வழக்குகள் பதியத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
அதையடுத்து, ”நாங்கள் இந்த விஷயத்தில் தற்போது எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. இந்த வழக்கில் அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அதேநேரம் சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாது” என்று புதிதாக வழக்குகள் பதியத் தடை விதித்து விசாரணையை ஏப்ரல் 21க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
முறையற்ற ராணுவ செயற்பாடுகளுக்கு நடுவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி – மனித உரிமைள் செயற்பாட்டாளர் கண்டனம்
இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத உயர்வைக் காண்பிக்கின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Virakesari
“இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத உயர்வைக் காண்பிக்கிறது. அரச கட்டமைப்புக்களில் குறிப்பாக நிதிசார் விடயங்கள் உரியவாறான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படாததும், அநாவசிய விரயங்கள் உயர்வான மட்டத்தில் காணப்படுவதும், ஊழல் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதுமான கட்டமைப்பே ராணுவமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “கடந்த 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தினுடைய அறிக்கையின் பிரகாரம், ராணுவத்தினால் அவர்கள் வசமிருந்த சுமார் 4439 ஏக்கர் காணி தொடர்பான விபரங்கள் அவர்களது நிதியறிக்கையில் வெளியிடப்படவில்லை. அவற்றில் வட, கிழக்கில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் உள்ளடங்கியிருக்கக்கூடும். அதேபோன்று அரச வளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் ஊடாக ஈட்டப்பட்ட 170.16 மில்லியன் ரூபா வருமானம் பற்றிய விபரங்களும் நிதியறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அதேபோன்று நிதியறிக்கையில் செலவினங்களைக் குறைத்துக் காண்பிப்பது பொதுவானது என்றாலும், மேற்குறிப்பிட்ட ராணுவத்தின் நிதியறிக்கையில் சொத்துகளின் பெறுமதி உயர்வாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி 11 சந்தர்ப்பங்களில் செய்யப்பட்டிருக்கும் 8.15 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் வாகன உதிரிபாகங்கள் கொள்வனவு தொடர்பில் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. அதோடு 8.82 மில்லியன் ரூபா பெறுமதியான 123 வைப்புகள் அரசாங்க வருமானத்துடன் சேர்க்கப்படவில்லை,” என்றும் சற்குணநாதன் கூறியுள்ளதாக வீரகேசரி செய்தி தெரிவிக்கிறது.
அதோடு, “இவை ராணுவ செலவினங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன. ஆனால் இந்த வெளிப்படுத்தல்களுக்கு மத்தியிலும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் ராணுவத்தால் புறந்தள்ளப்பட்டுள்ளமை, ராணுவ செயற்பாடுகளில் தொடரும் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கைக் காண்பிப்பதாகவும் அவர் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்,” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள்
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத் துறை அமைச்சு பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளைச் செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அதுகுறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்தத் தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனவும் அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு