இன்றைய (08/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் தொழிற்சங்கம் அமைப்பதற்காக போராட்டம் நடத்திய 23 பேரை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“காஞ்சிபுரம் மாவட்டம் கங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனிடையே பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 23 சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக இடை நீக்கம் செய்தது.
இதனால் விரக்தியடைந்த மற்ற ஊழியர்கள் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
சாம்சங் ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலை முன்பு வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாம்சங் நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிர்வாகம் அடையாள அட்டை தடை நீக்க கோரிக்கை என அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை வழங்கியது. இதனைப் பெற்று ஊழியர்கள் பூர்த்தி செய்தனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என்றும் சாம்சங் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
இன்று முதல் குழுக்களாக அவரவர் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கி அதன் பிறகு பணியில் சேர்க்கப்படுவர் என்றும் சாம்சங் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது,” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ராமநாதபுரம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
“சமீபத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்து, மீனவ சங்கத்தினா் போராட்டங்களை நடத்தினர். தற்போது 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டது ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கைதான பாம்பன் மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமி நரபலி
கோவாவில் குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியை நரபலி கொடுத்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கோவா மாநிலம் பொண்டா அருகே வசித்து வருபவர் பாபாசாகேப் அலார் (வயது 52). இவரது மனைவி பூஜா (45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 5-ஆம் தேதி திடீரென மாயமானார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதில் அந்த சிறுமி கடைசியாக அலார் தம்பதி வீட்டுக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து திரும்பாததும் தெரியவந்தது. எனவே அந்த தம்பதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை கொலை செய்ததை அலார் மற்றும் பூஜா தம்பதி ஒப்புக்கொண்டனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள் இருந்ததாகவும், அதை தீர்க்க நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி ஒருவர் கூறியதாகவும் அதன்படி அந்த சிறுமியை கொலை செய்து தங்கள் வீட்டு வளாகத்தில் புதைத்ததாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு – சித்தராமையா
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் வெள்ளிக்கிழமை அன்று செய்த அவர், “மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்துள்ளன. உரிய அமைப்புகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான கர்நாடக நீர்ப்பாசன திருத்தச் சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்திருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மலையக மக்களுக்கான காணி உரிமை வழங்குவதற்கு ஒத்துழைப்போம் – ஜீவன் தொண்டமான்
வீட்டை வைத்து மலையகத்தில் அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார் என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் மார்ச் 7 அன்று இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கீழ்கண்டவாறு தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“வீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அமைச்சு ரீதியில் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக 387 வீடுகளுக்கான திட்டமே உள்ளன. மலையகத்தில் 2 இலட்சத்து 51ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தால் ஏற்கனவே நான்காயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 10 ஆயிரம் வீடுகள் வரவுள்ளன. எவ்வளவு வாய்சொல் வீரர்களாக இருந்தாலும் வீட்டுப் பிரச்சினை தீரப்போவதில்லை.
மலையக மக்களுக்காக இரண்டு இலட்சத்து நான்காயிரம் ஹெக்டரில் 10 பேர்ச்சர்ஸ் என்ற அடிப்படையில் குடும்பமொன்றுக்கு காணியை வழங்கினால் 4777 ஹெக்டர் மட்டுமே போகும். காணி உரிமையே மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகும். சலுகை அரசியல் மலையக மக்களை மாற்றப் போவதில்லை. மாற்றம் தேவையென்றால் கட்டாயம் காணி உரிமையை வழங்கியே ஆக வேண்டும்.
காணியை அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்களால் சொந்த வீட்டை கட்ட முடியும். நாடளாவிய ரீதியில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது. வீட்டை வைத்து அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். நாங்கள் மூன்று முறை அதுதொடர்பில் அமைச்சரவையில் அனுமதி பெற்றுள்ளோம் அதனை செயற்படுத்தவே வேண்டியுள்ளது என்றார்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு