படக்குறிப்பு, அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது.கட்டுரை தகவல்
இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது.
பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவு (பிக் கிரஞ்ச்) என்று அழைக்கப்படும் நிகழ்வுடன் முடிவுக்கு வரலாம் என்று தென்கொரிய குழுவின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஒரு தலைமுறையின் மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.
பிற வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் இந்த விமர்சகர்களால் தென்கொரிய குழுவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.
பட மூலாதாரம், NASA/ESA
இருண்ட ஆற்றல் என்றால் என்ன?
சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்புடன் (பிக் பேங்) தொடங்கிய பிரபஞ்சத்தின் விரிவாக்கம், ஈர்ப்பு விசையினால் படிப்படியாக வேகம் குறையும் என்று வானியலாளர்கள் முன்பு நினைத்தார்கள்.
பின்னர் 1998-ஆம் ஆண்டில், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தும் ஒரு விசையாக இருண்ட ஆற்றலுக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘சூப்பர்நோவாக்கள்’ எனப்படும் மிகவும் பிரகாசமான வெடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுகள், தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் வேகம் குறைவதற்குப் பதிலாக, உண்மையில் ஒன்றைவிட்டு ஒன்று அதிவேகமாக விலகிச் செல்வதைக் காட்டின.
பிரபஞ்சம் தொடர்ந்து வேகமாக விரிவடைவதால், நட்சத்திரங்கள் மிகவும் தூரமாகப் பிரிந்து போகும் அப்போது ஒருநாள் இரவு வானில் கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத நிலை கூட வரலாம் என்றும், இன்னும் அதிர்ச்சியூட்டும் விதமாக, இறுதியில் அணுக்களையே சிதைத்துவிடும் பெருங் கிழிசல் (பிக் ரிப்) ஏற்படலாம் என்றும் சில கோட்பாடுகள் தெரிவித்தன
இந்த விவாதம் மார்ச் மாதம் அரிசோனா பாலைவனத்தில் ஒரு தொலைநோக்கியில் இருக்கும் ‘டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட்’ (DESI- டெசி) என்ற உபகரணத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளுடன் தொடங்கியது.
இருண்ட ஆற்றல் பற்றி மேலும் அறிய டெசி உருவாக்கப்பட்டது. இது மில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்கள் எவ்வாறு வேகமடைகின்றன என்பதை மிக நுணுக்கமாகக் கண்காணித்தது, ஆனால் அது வழங்கிய முடிவுகள் வானியலாளர்கள் எதிர்பார்க்காததாக இருந்தது.
‘விசித்திரமானது’
நட்சத்திர மண்டலம் வேகமடைதல் காலப்போக்கில் மாறியுள்ளதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. இது வழக்கமான புரிதலுக்கு உட்பட்டது அல்ல என்று டெசி திட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஓஃபர் லஹவ் கூறுகிறார்.
“இப்போது இந்த மாறும் இருண்ட ஆற்றல் ஏறி இறங்குவதால், நமக்கு ஒரு புதிய வழிமுறை தேவைப்படுகிறது. இது முழு இயற்பியலையுமே உலுக்கக்கூடும்,” என்று அவர் கூறுகிறார்.
பின்னர் நவம்பர் மாதம், ‘ராயல் அஸ்ட்ரோனோமிகல் சொசைட்டி’ (ஆர்ஏஎஸ்), தென்கொரிய குழுவின் ஆராய்ச்சியை வெளியிட்டது. இது இருண்ட ஆற்றலின் விசித்திரத்தன்மை நாம் நினைத்ததைவிட விசித்திரமானது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.
யோன்செய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யங் வூக் லீ மற்றும் அவரது குழுவினர், 27 ஆண்டுகளுக்கு முன்பு இருண்ட ஆற்றலை முதலில் வெளிப்படுத்திய அதே வகை சூப்பர்நோவா தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த நட்சத்திர வெடிப்புகளை ஒரு நிலையான பிரகாசம் கொண்டவையாக கருதுவதற்குப் பதிலாக, அவை உருவான நட்சத்திர மண்டலத்தின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த சூப்பர்நோவாக்கள் உண்மையில் எவ்வளவு பிரகாசமாக இருந்தன என்பதை அவர்கள் கணக்கிட்டனர்.
இந்தச் சரிசெய்தல், இருண்ட ஆற்றல் காலப்போக்கில் மாறியது மட்டுமல்லாமல், அதிர்ச்சியூட்டும் விதமாக அதன் வேகம் குறைந்து வருவதையும் காட்டியது.
“பிரபஞ்சத்தின் விதி மாறும்,” என்று பேராசிரியர் லீ பிபிசி நியூஸிடம் வெளிப்படையாகக் கூறுகிறார்.
“இருண்ட ஆற்றல் நிலையானது அல்ல மற்றும் அது பலவீனமடைந்து வருகிறது என்றால், இது நவீன அண்டவியலின் முழு கருத்தோட்டத்தையும் மாற்றிவிடும்.”
பேராசிரியர் லீயின் முடிவுகள் தெரிவிப்பது போல, நட்சத்திர மண்டலங்களை ஒன்றைவிட்டு ஒன்று தள்ளும் விசையான இருண்ட ஆற்றல் பலவீனமடைந்தால், ஈர்ப்பு விசை நட்சத்திர மண்டலங்களை மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும் சாத்தியம் உள்ளது.
“ஒரு ‘பெருங் கிழிசல்’ உடன் முடிவடைவதற்குப் பதிலாக, ஒரு ‘பெருஞ் சிதைவு’ இப்போது சாத்தியமாகிறது. எந்த முடிவு வெற்றி பெறும் என்பது இருண்ட ஆற்றலின் உண்மையான தன்மையைப் பொறுத்தது, அதற்கான பதில் நமக்கு இன்னும் தெரியவில்லை,” என்கிறார் பேராசிரியர் லீ.
பேராசிரியர் லீயின் பணி சக நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு ஆர்ஏஎஸ்-இன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வாதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் எஃப்ஸ்டதியு போன்ற மூத்த வானியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
“இது சூப்பர்நோவாக்களின் குழப்பமான விவரங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். வயதுடனான தொடர்பு அவ்வளவு நெருக்கமானது அல்ல, எனவே ‘சரிசெய்தல்’ முறையைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இது எனக்குப் பலவீனமாகத் தோன்றுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
டார்க் எனர்ஜி பெரிதாக மாறாமல் இருப்பதுடன், பிரபஞ்சம் இன்னும் வேகமாக விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக உள்ளது.
ஆனால் பேராசிரியர் லீ இத்தகைய விமர்சனங்களை வலுவாக எதிர்க்கிறார்.
“எங்கள் தரவு 300 நட்சத்திர மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருப்பதற்கு டிரில்லியனில் ஒரு பங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களது ஆராய்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்.”
பட மூலாதாரம், Marilyn Sargent/Berkeley Lab
படக்குறிப்பு, இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 நட்சத்திர மண்டலங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.
தென்கொரிய முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு குழுக்கள் சில சூப்பர்நோவாக்களின் பிரகாசத்தை மீண்டும் மதிப்பீடு செய்தன.
மொத்த பரபரப்பையும் தொடங்கிய டெசி முடிவுகளுக்கு அடிப்படையாக இருந்த முந்தைய ஆய்வு ஒன்றினை அவர்கள் மீண்டும் பரிசீலித்தனர். இருண்ட ஆற்றல் மாறிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்ததால், மார்ச் மாத முடிவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்.
இரண்டு குழுக்களும் அசல் குறிப்புகளிலிருந்து சற்றே பின்வாங்கினாலும், விரிவான ஆய்வுக்குப் பிறகும் அந்தக் குறிப்புகள் முழுமையாக மறைந்துவிடவில்லை.
இது தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் சிறந்த விளக்கம் எது என்பதில் வானியலாளர்கள் வேறுபடுகின்றனர். இது ஒரு மோசமான விஷயம் அல்ல என்கிறார் ஆர்ஏஎஸ்-ன் துணை இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் மாஸ்ஸி.
“பிரபஞ்சம் எப்படி முடியப் போகிறது மற்றும் அது எப்படித் தொடங்கியது என்பதைப் புரிந்து கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? மனிதர்கள் எப்போதுமே மத ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ இதில் ஆர்வம் காட்டியுள்ளனர்,” என்று அவர் கூறுகிறார்.
“இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில் விஷயங்கள் இப்படித்தான் முடிவடையும் என்று சிந்திக்க முடிவது அசாதாரணமானது அல்லவா?”