படக்குறிப்பு, 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 8.2% ஆக இருந்தது. கட்டுரை தகவல்
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம், 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2% ஆக இருந்தது என்று இந்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இவ்வாறு இருக்க, மறுபுறம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 ரூபாய் என்ற நிலையை அடையவுள்ளது.
திங்கள் கிழமை, டிசம்பர் 1, 2025 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு லேசான சரிவுடன் ரூ. 89.63 என்ற நிலையில் இருந்தது.
கடந்த நிதியாண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.84.22 ஆக இருந்தது. அதே நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2021இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72ஐ ஒட்டியிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திருப்திகரமானதாகவும், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது ‘சிறப்பாகவும்’ இருந்தபோதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
சமீபத்தில் இந்தியா தனது மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறியபோது, சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகளின் தரவுகளுடைய தரத்திற்கு ‘சி’ தரவரிசையை வழங்கி, இந்திய தரவுகளின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது.
சர்வதேச நாணய நிதியம் தரவுகளை நான்கு வகைகளாகப் பிரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ‘சி’ தரவரிசை என்பது, தரவுகளில் சில குறைபாடுகள் உள்ளன, அவை கண்காணிப்புச் செயல்முறையை ஓரளவு பாதிக்கின்றன என்பதைக் குறிக்கும்.
இதுகுறித்து ஐ.எம்.எஃப், நவம்பர் 26 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு ‘சி’ தரவரிசை வழங்கியது. 8.2% வளர்ச்சிக் கணக்கு வந்த பிறகும், எதிர்பார்க்கப்பட்ட உற்சாகம் பங்குச் சந்தையில் காணப்படவில்லை என்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அதேநேரம், ரூபாயின் பலவீனமும் தொடர்ந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
ரூபாய் சரிவு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2025-26 நிதியாண்டில் 6.19% குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த வீழ்ச்சி 1.35% ஆக இருந்தது.
சமீபத்திய நாட்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிக வேகமாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக ரூபாய் ஆசியாவின் மிகவும் பலவீனமான நாணயமாக மாறியுள்ளது.
ரூபாயின் பலவீனம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுவதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார பேராசியராக இருக்கும் அருண் குமார் கருதுகிறார்.
வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது (தரவுகளின்படி, 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கு வெளியேற்றம்), அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் தாமதம் ஆகியவை அதற்கான காரணங்களாக உள்ளன.
“ரூபாயின் வீழ்ச்சி இந்தியாவின் சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலைமையின் ஓர் அறிகுறி. இது ஏற்றுமதி-இறக்குமதி, மூலதன வரவு மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் அதிகபட்ச வரிகள் நமது ஏற்றுமதியைப் பாதித்துள்ளன. இதனால் நடப்புக் கணக்கு மோசமடைந்து, அந்நிய நேரடி முதலீடு வெளியேறுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து ரூபாயை பலவீனமடையச் செய்கின்றன,” என்று பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸின் பொருளாதார நிபுணர் யாமினி அகர்வால், “இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, ரூபாயின் பலவீனம் ஆகிய இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்ப்பது சரியான மதிப்பீடு இல்லை” என்று நம்புகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உணவுப் பொருள்களின் விலையேற்றம் ஜிடிபி வளர்ச்சிக்கான காரணமாகக் கருதப்படுகிறது.
“டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சர்வதேச தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் அமைகிறது. டிசம்பர் மாதம் சர்வதேச அளவில் கணக்குகளை முடிக்கும் நேரம் என்பதால், கணக்குகள் ஆய்வு செய்யப்படும். எனவே, பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொண்டு, தங்கள் நாடுகளில் தங்கள் இருப்புநிலைகளை வலுவாகக் காட்டுகிறார்கள். இந்த மாதத்தில் அதிக கொள்முதல் மற்றும் விற்பனை நடைபெறுகிறது, இதன் விளைவு சர்வதேச சந்தையில் தெரியும் ரூபாயின் மதிப்பிலும் காணப்படுகிறது,” என யாமினி கூறுகிறார்.
ரூபாயின் பலவீனம் இந்தியாவில் உள்நாட்டுச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார். “இது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் ரூபாய் வீழ்ச்சியடைந்தால் நமது ஏற்றுமதி அதிகரிக்கும், ஆனால் இறக்குமதி விலை உயரும், இதனால் பணவீக்கம் உயரலாம்.”
“இந்தியாவின் மூலதனம், அந்நிய நேரடி முதலீடு அல்லது அந்நிய நிறுவன முதலீடு போன்றவற்றில் இருந்தால், அதன் தாக்கம் நமது பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதால், இது பெரும்பாலும் அவரது கொள்கைகளையே சார்ந்துள்ளது. அது இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் வெளிநாடுகளில் இந்தியா செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையை பாதித்தால், ரூபாயின் மதிப்பு இன்னும் குறையக்கூடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்பின் அதிக வரிகள் இந்தியாவின் ஏற்றுமதியைப் பாதித்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். (சித்தரிப்புப் படம்)
ஜிடிபி வளர்ச்சி விகிதம் சிறந்த அறிகுறியா?
இந்தியாவின் பொருளாதாரம், 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), 8.2% உண்மையான ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது எதிர்பார்ப்புகளைவிட மிக அதிகமாக இருந்தது.
குறிப்பாக, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6% ஆக இருந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் மிக வேகமான வளர்ச்சி விகிதமாகும்.
இருப்பினும், இந்த நேரத்தில் பெயரளவு ஜிடிபி (Nominal GDP) விகிதம் 8.7% ஆக இருந்தது. உண்மையான ஜிடிபி விகிதத்திற்கும் பெயரளவு ஜிடிபி விகிதத்திற்கும் இடையிலான வேறுபாடு 2020க்குப் பிறகு மிகக் குறைவு.
“இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டாவது காலாண்டில் 8.2% ஆக இருந்தது. இது எதிர்பார்ப்பைவிட மிகச் சிறப்பாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தனிநபர் நுகர்வு அதிகரித்ததுதான். உணவுப் பணவீக்கம் குறைந்துள்ளது, இதனால் தனிநபர் விருப்பப்படி செய்யும் செலவுகளும் அதிகரித்து வருகின்றன,” என க்ரிசில் (CRISIL – Credit Rating Information Services of India Limited) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டி.கே. ஜோஷி கூறுகிறார்.
க்ரிசில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்திற்கான தனது கணிப்பை 6.5% லிருந்து 7% ஆக உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக் கணக்குகள் கவனத்தை ஈர்க்கக் கூடியவை என்றாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஜிடிபி கணக்கீட்டின் நம்பகத்தன்மை குறித்து ஐ.எம்.எஃப். கேள்வி எழுப்பியுள்ளதைக் குறிப்பிடும் பேராசிரியர் அருண் குமார், “இந்தியாவின் அமைப்புசாரா தொழில்கள் துறையின் (Unorganized Sector) தரவு கிடைப்பதில்லை. இதன் அடிப்படை ஆண்டு 2011-12. அது பழையது. நுகர்வோர் விலைக் குறியீடும் (Consumer Price Index) புதுப்பிக்கப்படவில்லை.
உற்பத்தி மற்றும் செலவு முறைகளில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் உள்ளன. மேலும், மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டுமொத்த தரவு 2019க்குப் பிறகு கிடைக்கவில்லை. இந்தக் காரணங்களால் நமது ஜிடிபி புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை பலவீனமாக உள்ளது. எனவே, 8.2% வளர்ச்சியை பலர் ஏற்கவில்லை” என்றார்.
ஆனால், யாமினி அகர்வால் 8.2% வளர்ச்சிக் கணக்கை இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அறிகுறியாகவே கருதுகிறார்.
பேராசிரியர் அகர்வால் கூறுகையில், “ஜிடிபி வளர்ச்சி அனைத்து பொருளாதார குறியீடுகளையும் பிரதிபலிக்கிறது, அதாவது இந்திய பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது. ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது இந்த காலாண்டில் நேரடிச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், குறைந்த பணவீக்கம் கவலையளிக்கிறது. ஜிஎஸ்டி மற்றும் விலைக் குறைவு பணவாட்டத்தை (deflation) உருவாக்குகிறது, இதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
“உண்மையான ஜிடிபி அதிகரிப்பு ஊக்கமளிப்பதாக உள்ளது, ஆனால் பணவீக்கம் குறைந்ததால் பெயரளவு ஜிடிபி-இல் ஏற்பட்ட லேசான அதிகரிப்பு சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்,” என டி.கே. ஜோஷி கூறுகிறார்.