• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும்: ஹெச்.ராஜா | We will soon know who Tamil Nadu Manish Sisodia is: H Raja

Byadmin

Mar 16, 2025


டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை, முதன்முறையாக தமிழக அரசின் டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை கூறினாலும், 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதற்கு வாய்ப்பு உள்ளது.

டெல்லி முதல்வராக இருந்த கேஜ்ரிவாலுக்கு அங்கு நடந்த மதுபான ஊழலில் தொடர்பிருப்பது போன்று, இங்கு நடந்த டாஸ்மாக் ஊழலில் முதல்வருக்கு தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால்தான் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது. தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் மார்ச் 17-ம் தேதி (நாளை) சென்னையில் பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கைபோல உள்ளது. டாஸ்மாக் வருமானம் ரூ.52 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், இந்த முறையும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தமிழகத்தின் மோசமான நிதி நிலைமையை எடுத்துக்காட்டி உள்ளது.

திருச்சியில் உக்கிர காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக பேனர் வைத்தது தொடர்பாக பாஜக மாநகர பொதுச் செயலாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது காவல் துறையின் அராஜகமாகும். திருச்சி மன்னார்புரத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நடைபெற இருந்த பாஜக பொதுக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.



By admin