• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

“டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார்?” – சீமான் கேள்வி   | Why Annamalai fighting against the TASMAC corruption? – Seeman question

Byadmin

Mar 20, 2025


மதுரை: “ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக போராட்டம் நடத்தக் கூடாது. நாங்கள்தான் போராட வேண்டும்” என மதுரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் சீமான் இன்று (மார்ச் 20) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாராய போதையை தாண்டி, மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகள் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக் கூடங்கள் அருகே அதிகளவில் விற்கப்படுகிறது. சாலையில் ஒருவரை வெட்டி சாய்க்க முடிகிறது. காவலரை எரித்து கொலை செய்ய முடிகிறது. இதுவரை கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. திமுக கொடி கட்டிய காரிலிருந்து இறங்கி வந்து பெண்கள் பயணித்த காரை வழிமறித்து குற்றம் செய்கிறார்கள்.

ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக போராட்டம் நடத்தக் கூடாது. நாங்கள்தான் போராட வேண்டும். ரூ.450 கோடி கழிவறை ஊழல் குறித்து யாரும் பேசவில்லை. திமுகவுக்கு திடீரென மொழி மீது பற்று வரும். சாதிவாரி கணக்கெடுக்க தயங்குகின்றனர். மத்திய அரசுக்கு தான் அந்த அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்கள்.

பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. மாநில உரிமை பற்றி பேசும் தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுக்க முடியவில்லை.

முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் டாஸ்மாக் ஊழல் நடந்ததாக கூறினர். ஒரு வாரத்தில் அது ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. விசாரணை முடிவதற்குள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும். தமிழகத்தில் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் ஒரே ஆளாக இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.



By admin