சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் குடோன், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டு மிரட்டும் செயலில் ஈடுபட்டதை, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. மேலும், வழக்கு தொடர்பான விசாரணை எல்லையைத் தாண்டி, உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்துக்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத் துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? – தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டப்படுவதாகவும், அதை கணக்கில் காட்டாமல், தனியார் மது உற்பத்தி நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், சென்னை, கரூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். ஒருசில இடங்களில் சோதனை முடிந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை, விழுப்புரத்தில் நீடித்தது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், தியாகராய நகரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லரீஸ் மதுபான நிறுவனம், அக்கார்டு ஓட்டல், ஆயிரம்விளக்கில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவனம், தியாகராய நகரில் உள்ள கால்ஸ் மதுபான நிறுவனம், சிவா டிஸ்டில்லரிஸ் நிறுவனம், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடந்தது.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் தனியார் மதுபான ஆலை, விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஎம் நிறுவன மதுபான ஆலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் நிறுவன மதுபான ஆலையில் வெள்ளிக்கிழமையும் சோதனை நீடித்தது. சென்னை, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மதுபான விற்பனை, வரவு – செலவு விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.