மதுரை: டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத் துறையின் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியானதில் இருந்து திமுக அரசு பதற்றத்தில் உள்ளது. ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குடும்பத்துக்கும், டாஸ்மாக் முறைகேட்டில் தொடர்புள்ளது.
இதுகுறித்த தகவல்கள் திமுக அரசுக்கு 4 மாதங்களுக்கு முன்பே தெரியவந்ததால், முறைகேட்டை மடைமாற்றும் வகையில் திமுக அரசு மும்மொழிக் கொள்கை குறித்து பேசத் தொடங்கியது. டாஸ்மாக் முறைகேட்டில் விஐபி-க்களுக்கு உள்ள தொடர்பு, அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் போர் நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி நாட்டுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது திமுகவினர் கனவு. யார், யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன வந்தது? கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறிய திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு சூடு, சுரணை இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லதுதான். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.