சென்னை; டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். இனி, தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம் என்றும், முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம் என்றும் கைது செய்யப்பட்ட அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜக சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அண்ணாமலையை, சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
இதனிடையே அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். திமுக மாபெரும் தவறு செய்துள்ளது. அதனால் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஜனநாயக முறையில் போராடினால் தடுக்கிறார்கள். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22 ஆம் தேதி நடக்கலாம் அல்லது வேறு எந்த தேதியிலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதல்வரின் வீடாக கூட இருக்கலாம், டாஸ்மாக்காக இருக்கலாம். முதல்வரும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அவரும் தப்பிக்க முடியாது.
அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தமரா? இந்தியாவிலேயே மிக மோசமான (fraud) அரசியல் தலைவர் என்று பார்த்தால் அது அவர்தான். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இவர்களெல்லாம் தற்போது நல்லவர்கள் வேஷம் போடுகிறார்கள்.
தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு வர பாஜக போராடி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டாஸ்மாக் பணத்தை வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து திமுக சந்திக்க உள்ளது. ஊழல் செய்யவில்லை என்றால், அவர்கள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும்” எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “ திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, தமிழிசை மற்றும் , மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில், “டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேலாகவே முறைகேடு நடந்திருக்கும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக முதல்வர் தான் இருக்க வேண்டும், செந்தில் பாலாஜியே 2 ஆவது குற்றவாளிதான், 3 முதல் தகவல் அறிக்கைகளை வைத்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் டாஸ்மாக்கில் 40% சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது எனத் தெரிவித்த தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் இன்று பாஜக சார்பில் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.