அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே அந்த செயலியை பெரும்பாலான பயனர்களால் பயன்படுத்த இயலவில்லை.
அமெரிக்காவில் உள்ள பயனர்கள் தங்களின் போனில் அந்த செயலியை பயன்படுத்த முயற்சிக்கும் போது, “அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது உங்களால் தற்போது டிக்டாக் செயலியை பயன்படுத்த இயலாது,” என்ற குறுஞ்செய்தி தகவல் திரையில் தோன்றுகிறது.
“அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்கும் போது, அமெரிக்காவில் மீண்டும் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான தீர்வை அவர் வழங்குவார்,” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை டிரம்பின் முடிவுக்கு விடுவதாக பைடன் கூறியுள்ளார்
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 90 நாட்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முன்னதாக தெரிவித்தார். அவர் ஜனவரி 20 அன்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.
இது தொடர்பாக என்.பி.சி செய்திகளிடம் ஜனவரி 18-ஆம் தேதி அன்று பேசிய டொனால்ட் டிரம்ப், “90 நாட்கள் நீட்டிப்பு என்பது வழங்கப்படும். அது தான் சரியானதும் கூட. அதை நான் செய்ய நினைத்தால் திங்கட்கிழமை அது தொடர்பாக அறிவிப்பேன்,” என்று தெரிவித்தார்.
வர இருக்கும் புதிய நிர்வாகத்தைப் பொறுத்தே தடை நீக்கம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
சட்டத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
கூகுள் மற்றும் ஆப்பிள் ‘ஆப் ஸ்டோர்களில்’ இருந்தும் டிக்டாக் நீக்கப்பட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டிக்டாக்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தில் வீடியோக்கள் தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிக்டாக் தடையை அமல்படுத்த அறிமுகம் செய்த சட்டத்தை, ஜனவரி 17-ஆம் தேதி அன்று உறுதி செய்தது.
சீன அரசுடன் டிக்டாக் செயலிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கவலையை கருத்தில் கொண்டு இந்த செயலிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது ஆனால் டிக்டாக் தொடர்ச்சியாக, தங்கள் பயனர்கள் குறித்த தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று கூறியிருந்தது.
தடை செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தடையை அமல்படுத்தாமல் இருப்பதற்கான நிபந்தனையை டிக்டாக் செயலியின் நிறுவனமான பைட்டான்ஸிடம் தெரிவித்தது அமெரிக்கா.
தடையை அமல்படுத்தாமல் இருக்க டிக்டாக் செயலியின் அமெரிக்க பதிப்பை (US version) நடுநிலையான நிறுவனத்திற்கு ஜனவரி 19-ஆம் தேதிக்குள் விற்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் பைட்டான்ஸ் அந்த செயலியை யாருக்கும் விற்கவில்லை.
பயனர்கள் வருத்தம்
நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு டிக்டாக்கின் தலைமை செயல் அதிகாரி சவ் ஸி செவ் டிரம்பிடம் முறையிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காண டிரம்பிடம் கோரிக்கை வைத்தார்.
திங்கட்கிழமை அன்று டிரம்ப் பதவி ஏற்கும் விழாவில் செவ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தை டிக்டாக் எதிர்த்தது. மேலும் தன்னுடைய 170 மில்லியன் பயனர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை உள்ளது என்று வாதிட்டது.
இந்த அமல் செயலுக்கு வருவதற்கு முன்பு, டிக்டாக் பயனர்கள் தங்களின் குட்-பை வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றினார்கள்.
நிக்கோல் ப்ளூம்கார்டன் என்ற கண்டெண்ட் கிரேயட்டர் பிபிசியிடம் பேசிய போது, டிக்டாக் செயலி தடையால் பலருக்கும் குறிப்பிடத்தக்க அளவு வரை வருமானம் குறையும் என்று கூறினார்.
மற்றொரு பயனரான எரிக்கா தாம்சன், அந்த தளத்தில் வெளியான, ‘கற்றுக்கொள்ளும் வகையிலான’ வீடியோக்கள் இல்லாமல் இருப்பது சமூகத்திற்கு ‘பெரிய இழப்பு’ என்று தெரிவித்தார்.
சனிக்கிழமை அன்று டிக்டாக், “இந்த சட்டம் நம்முடைய சேவைகளை தற்காலிகமாக பயன்படுத்துவதை முடக்குகிறது. அமெரிக்காவில் எங்களின் சேவையை மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.