கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், ‘நான் ஈ ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான நடிகர் கிச்சா சுதீப்- மாஸ் எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘மார்க் ‘ எனும் திரைப்படம் – எதிர்வரும் டிசம்பரில் நத்தார் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
கிச்சா சுதீப்பின் நடிப்பில் வெளியான ‘மேக்ஸ் ‘எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ‘ எனும் திரைப்படத்தில் கிச்சா சுதீப் , விக்ராந்த், நவின் சந்திரா, தீப்ஷிகா, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அஜ்னிஸ பி லோக்நாத் இசையமைக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் -அர்ஜுன் தியாகராஜன் & கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
நடிகர் கிச்சா சுதீப்பின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் ‘மார்க் ‘ திரைப்படத்தின் பிரத்யேக காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே ‘மேக்ஸ்’ திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்து ‘மார்க் ‘திரைப்படத்தை உருவாக்கியுள்ளதால்… இதற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post டிசம்பரில் வெளியாகும் நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ appeared first on Vanakkam London.