சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. வழக்கமாக ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய ஆண்டு முதல் கூட்டம், இந்தாண்டு புயல், மழை மற்றும் நிவாரணப் பணிகளால் தாமதமாகியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தனர். பின்னர் பிப்.22-ம் தேதி வரை இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். மேலும், சில சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் 67- வது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சமீபத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர், வரும் நவ.17-ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தேதியை அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.