• Tue. Nov 26th, 2024

24×7 Live News

Apdin News

டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து செயலர் உறுதி | Wage Deal talks by 2nd Week of December: Transport Secretary Assures Unions

Byadmin

Nov 26, 2024


சென்னை: டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலர் உறுதியளித்தார்.

போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுக நயினார், தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டியை சந்தித்தனர். அப்போது, முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழக்கில் மேல்முறையீடு செய்தது சரியல்ல. ஓட்டுநர் – நடத்துநர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

வாரிசு வேலையில் பெண்களுக்கான தகுதியில் உயரத்தை குறைப்பது தொடர்பாக இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, பேச்சுவார்த்தை தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: “ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் இரண்டாவது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஓய்வு கால பணப் பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாரிசு வேலை உடல் தகுதி தொடர்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப் படும். வரவு செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று துறைச்செயலர் கூறியதாக தொழிற்சங்கத்தினர் கூறினர்.



By admin