• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

டிஜிட்டல்மயமாக்கல் மூலம் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக நாமும் முன்னேற முடியும் | ஜனாதிபதி

Byadmin

Sep 20, 2025


நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைத்து துறைகளிலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இலங்கையை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரு திட்டமாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய சைபர் பாதுகாப்பு  மூலோபாயத்தை  (2025 – 2029) அறிமுகம் செய்தல் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தை (NCSOC) திறந்து வைக்கும்  நிகழ்வில் வெள்ளிக்கிழமை (19) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த தேசிய சைபர் பாதுகாப்பு  மூலோபாயம் (2025-2029) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவினால் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

டிஜிட்டல் பொருளாதார மாற்றத் திட்டத்தில் ஒரு தனித்துவமான சந்தர்ப்பமாக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் அனைத்துப் பிரஜைகளையும் உள்ளடக்கிய வகையில் டிஜிட்டல் சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (CERT), டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து உலக வங்கியின் தொழில்நுட்ப ஆதரவுடன், இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்பு  மூலோபாயத்தை  (2025-2029) அறிமுகப்படுத்தியுள்ளது.

சைபர் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், சைபர் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு தொழிற் படையை உருவாக்குதல், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே சைபர் பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பாங்கை வளர்த்தல், அரச நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துதல், இலங்கை செர்ட்  நிறுவனத்தின் திறனை மேம்படுத்துதல், முக்கியமான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை பேணும் நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான சைபர்வெளியை உருவாக்குவதற்காக பல்வேறு தரப்பினருடனான ஒத்துழைப்பை மேம்படுத்தல், இந்த மூலோபாயம் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை பேணும் 37 நிறுவனங்களை 24 மணிநேரமும் கண்காணித்து, அவற்றுக்கு விடுப்படும் சைபர் அச்சுறுத்தல்களை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சைபர் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் மற்றும் ஊடுருவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொருத்தமான தரப்பினர்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம் அரசாங்க சைபர் கட்டமைப்புகள் மற்றும் பொது டிஜிட்டல் சேவைகளைப் பாதுகாப்பது இதன் பொறுப்பாகும்.

இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் தாங்கும் திறனை மேம்படுத்தல், சைபர் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தல் மற்றும் விரைவாக பதிலளித்தல், பாதுகாப்பான டிஜிட்டல் செயல்பாடுகளைப் பேண அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு ஆதரவு வழங்கல் மற்றும் தெளிவூட்டல் இந்த மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்படும். செயல்பாட்டுத் தொடர்ச்சி, விரைவான பதிலளிப்புகள், குறைந்த செலவுகள், இணக்கத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவை இதன் பிரதிபலன்கள் ஆகும்.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தால் கிடைக்கும் வெற்றிகளை விரைவாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நாடுகள், மிக விரைவாக முன்னேற்றத்தை நோக்கி நகரும் . இந்த தேசிய சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பு நமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும், பிரஜைகளின் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இன்று நாம் ஒரு சிறப்பான பணியைத் தொடங்குகிறோம். நாம் வெறுமனே ஒரு கட்டிடத்தையோ அல்லது அலுவலகத்தையோ திறக்கவில்லை. டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நாம் ஒரு வலுவான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால், பாதுகாப்பு, வலிமை மற்றும் நம்பகத்தன்மை அவசியம். இன்று, அதற்குத் தேவையான சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை நாம் ஆரம்பித்து வைத்துள்ளோம். நமது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான தருணம் ஆகும்.

அரசியலைப் பார்த்தாலும் சரி, உலகப் பொருளாதாரத்தின் தன்மையைப் பார்த்தாலும் சரி, முக்கிய காரணி என்னவென்றால், அந்த நேரத்தில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் வெற்றிகளை விரைவாக உள்வாங்கக்கூடிய நாடுகள் மிக விரைவாக வளர்ச்சியின் விளிம்பை நோக்கி நகர்கின்றன.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களை விரைவாக உள்வாங்கத் தவறும் நாடுகள் அதேபோன்று பின்தள்ளி விடப்படுகின்றன. இலங்கை என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் நெருக்கடி அதில்தான் அடங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் பல கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இந்த கருத்தியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட பல விடயங்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் யதார்த்தமாகின. அரசியல் வெறும் அரசாட்சியால்  நிர்வகிக்கப்பட்ட உலகில்  மக்களின் பங்கேற்புடன் ஜனநாயக ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது  அதேபோன்று  மனித உறவுகளில் புதிய வடிவங்கள் இவை அனைத்தும் 20 ஆம் நூற்றாண்டிலே  நடைமுறை நிலைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, இந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகம் ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கியது.

எமக்கு தெரிவு  செய்ய இரண்டு பாதைகள் உள்ளன. முதலாவது, இந்த டிஜிட்டல் மயமாக்கலை மிக விரைவாக ஒருங்கிணைத்து அதை ஒரு நடைமுறை யதார்த்தமாக மாற்றுவதாகும். பின்னர் நாம் முன்னேறிய தேசங்களுடன் இணையாக பயணிக்க முடியும். அந்த தொழில்நுட்ப சாதனைகளை முறையாகப் பெறத் தவறுவதன் மூலம், நாம் உலகத்திலிருந்து நம்மை மேலும் தூரமாக்கிக் கொள்கிறோம்.

இந்த நவீன தொழில்நுட்பத்தால் பெறப்பட்ட அறிவு, புதிய கருவிகள், புதிய கட்டமைப்புகள் விரைவான வேகத்தில் நமது தேசத்திற்கு கொண்டு வரப்படm வேண்டும். அதனால்தான் டிஜிட்டல்  மயமாக்கல் நமது அரசாங்கத்தின் முக்கிய திட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். நமது அரச சேவை, குறிப்பிடத்தக்க அளவினால் சிதைவடைந்த ஒரு வரலாற்றைப் பெற்றுள்ளது. 70களில் பெருமைமிக்க அரச  சேவையை நாங்கள் பெற்றிருந்ததாக பெருமை பேசும் நாம், எங்கள் பெருமையில் சிக்கி, சீரழிந்த அரசைப் பெற்றுள்ளோம்.

எனவே, இந்த டிஜிட்டல் மயமாக்கலின் மூலம்,  சிதைவடைந்த அரச இயந்திரத்தை மிகவும் திறமையான அரச இயந்திரமாக மாற்ற வேண்டும். குறிப்பாக, அரச இயந்திரத்தால் பிரஜைகளுக்கு வழங்கப்படும் சேவையை திறமையானதாக மாற்ற வேண்டும். திருப்திகரமான மற்றும் செயற்திறனான அரச சேவையை வழங்க, புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும், மேலும் அதன் செயல்திறனின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்.

அதேபோன்று வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியமானது. நமது அரச இயந்திரம் வெளிப்படைத்தன்மை என்ற விடயத்தில் ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொள்முதல், மானியங்கள், ஆட்சேர்ப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது.

மேலும், மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், புதிய சந்தைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது.  வர்த்தகர்கள் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் புதிய சந்தைகளை எட்ட முடிகிறது. சமீபத்திய காலங்களில் முன்னேற்றம் அடைந்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களைப் பார்த்தாலும், இந்த புத்தாக்கங்கள் மூலம் புதிய சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, வர்த்தக உலகிற்கும் இது மிகவும் முக்கியமானது.

ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி நகர்த்துவதற்கு, சமூக வாழ்க்கையை திறமையானதாக மாற்ற வேண்டும். இது டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் நிகழ்கிறது. இனியும் சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு பதிலாக, சுதந்திரமான சூழலில் ஒருவரின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கருவிகள் இந்த டிஜிட்டல்மயமாக்கல் மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே, அரச சேவையாக இருந்தாலும் சரி, வர்த்தக உலகமாக இருந்தாலும் சரி, சாதாரண பிரஜைகளுக்காக இருந்தாலும் சரி, இதுவே நமது பொருளாதாரத்தின் முக்கிய  மூலோபாயமாக மாற வேண்டும்.

மக்கள் இயந்திரங்களாக மாறி மனித உணர்வுகளை இழப்பார்கள் என்று சிலர் கருத்தாடல்களை உருவாக்குகிறார்கள். அவ்வாறு நடக்காது. மக்கள் இயல்பாகவே உணர்ச்சிவசப்பட்டு சமூக உறவுகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த திசையே அதற்கான பாதை. சாத்தியமான விபத்துகளைத் தடுப்பதற்கான அணுகுமுறை ஒரு வலுவான வலையமைப்பை உருவாக்குவதாகும்.

அந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதை உருவாக்க முடியும். இதை மேலும் மேம்படுத்த வேண்டும். இப்போது பெறப்பட்ட அறிவு புதிய அறிவையே உருவாக்குகிறது. அந்த மாற்றம் வேகமாக  நடைபெறுகிறது.  முன்பு, அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு சுவரைக் கட்ட முடியும். இருப்பினும், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு ஒரு சுவர் அல்ல. இது தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும், மேலும் அதைத் தொடர்ந்து தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே, இந்த தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்பானது தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மற்றும் நமது நாட்டின் குடிமக்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதில் மிகவும் முக்கியமானது. இதற்கு பங்களித்த அனைத்து அறிஞர்கள் மற்றும்   மற்றும் நிபுணர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நடவடிக்கைகளை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான சிரேஸ்ட ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, உலக வங்கியின் சிரேஸ்ட டிஜிட்டல் அபிவிருத்தி  நிபுணர் Ida S Mboob , பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை சர்ட் நிறுவன தலைவர் திலக் பதிரகே மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புள்ள அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

By admin