ஒரு காலத்தில் வானொலி ஒவ்வொரு வீடுகளிலும் தவிர்க்க இயலாத வெகுசன ஊடகமாக இருந்தது. பின்னர் தொலைக்காட்சியின் ஆதிக்கம், டிஜிட்டல் ஊடகத்தின் வருகை என்பன வானொலித்துறையை எந்தளவுக்கு பாதித்தது?அல்லது மேம்படுத்தியது என்பது வெகுசன ஊடகத்துறையில் – தொடர்பியல் கல்வித்துறையில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறைப் பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் அவர்களிடம் இவ் வினாவைத் தொடுத்தது வணக்கம் இலண்டன்.
இலங்கை – இந்திய வானொலித்துறை பற்றிய ஆராய்ச்சிகளில் தேடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் வானொலியில் அறிவிப்பாளராகவும் பணியாற்றியதுடன் இதழியல் மற்றும் தொடர்பியல் மாணவர்களுக்கும் இத்துறை சார்ந்து கற்பித்து வருகிறார்.

இன்றைய காலத்திலும் வானொலித் துறை மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள வெகுசன ஊடகமாக இருக்கிறதா?
நிச்சயமாக உள்ளது. வானொலியின் வடிவம் தான் மாறியுள்ளதேத் தவிர, வானொலி இன்றும் நேயர்களால் கேட்கப்படுகிறது. வானொலி என்றதும், நீங்கள் அதனை வானொலிப் பெட்டியில் தான் கேட்க வேண்டும் என்றில்லை. உங்கள் கைப்பேசியிலும் கேட்கலாம்.
இன்னும் ஒரு படி மேலே சொன்னால், நீங்கள் உங்கள் கைப்பேசியில் கேட்கும் Spotify கூட ஒரு வகையில் வானொலி தான். என்ன ஒன்று, அதன் வடிவம் தான் வேறு. எனவே எவற்றையெல்லாம், ஒலி வடிவில் கேட்கிறீர்களோ, அவையெல்லாம் வானொலி தான். இன்று பெரும்பாலான வானொலிகள் செயலிகள் ஊடாகவும், இணையம் ஊடாகவும், Spotify ஊடாகவும் ஒலிபரப்பத் தொடங்கிவிட்டன. எனவே, இனி வானொலி என்பதை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க வேண்டும் என்றில்லை.
எந்த ஒரு ஊடகத்தின் ஊடாகக் “கேட்டாலும்” அது வானொலியே. வானொலிக்கு என்றும் அழிவில்லை. வானொலி காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு சிறப்பான ஊடகம் எனலாம். சிற்றலையில் தொடங்கி, மத்தியலை, பண்பலை, எண்ணியல் அலை (DRM) வரை வந்து, இன்று செயலியில் சங்கமித்துள்ளது எனலாம்.
The post டிஜிட்டல் ஊடகத்தின் வருகை வானொலித்துறையில் செலுத்தும் தாக்கம் என்ன? பேராசிரியர் ஜெய்சக்திவேலுடன் ஒரு நிமிட நேர்காணல் appeared first on Vanakkam London.