பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபியை நியமனம் செய்யாமல் மக்களின் பாதுகாப்புடன் முதலமைச்சர் விளையாடிக் கொண்டிருப்பதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால், மத்திய அரசின் தலையீடு காரணமாகவே டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். டிஜிபியை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம் என்ன?
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால், கடந்த ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். ‘அடுத்த டி.ஜி.பி யார்?’ என்ற கேள்வி எழுந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சேர்ந்த ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த செப்டெம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
‘டிஜிபி பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதிய நியமனம் தொடர்பாக தகுதியுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்துக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தமிழ்நாடு அரசு செய்யவில்லை’ என, மனுவில் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
‘ஆனால், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்வது என்பது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழக்கான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புக்கு எதிரானதாக உள்ளது’ எனவும் மனுவில் அவர் கூறியிருந்தார்.

பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பு என்ன?
2006 ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் எதிர் இந்திய அரசு வழக்கில் ஏழு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அந்த உத்தரவில், ‘ஒரு மாநிலத்தில் டிஜிபி பொறுப்பில் உள்ள நபருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு பணிக்காலம் இருக்க வேண்டும்’ எனக் கூறியது.
“இதனை சில மாநிலங்கள் கடைபிடிக்காமல் இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன” என, பிபிசி தமிழிடம் வழக்கு தொடர்ந்த ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.
சில மாநிலங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவைக் கடைபிடிக்காமல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு குறித்த காலத்துக்குள் டிஜிபி பதவிக்கான பெயர்ப் பட்டியலை அனுப்பாமல் இருந்துள்ளன.
இதுகுறித்து 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணிகளை மாநில அரசு செய்தாக வேண்டும்’ என உத்தரவிட்டது.
எந்தவொரு மாநிலமும் பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்துவிடலாம் எனக் கனவு காணக் கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹென்றி திபேன் தெரிவித்தார்.
அந்தவகையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மனுவில் ஹென்றி திபேன் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அதிகாரி ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால் டிஜிபியை நியமனம் செய்ய முடியாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டார்” எனக் கூறினார்.
அப்போது தலைமை நீதிபதி அமர்வு, தொடர்புடைய காவல்துறை அதிகாரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறியது. தொடர்ந்து, டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிந்துரையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு யுபிஎஸ்சி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து, டிஜிபி நியமனம் தொடர்பாக மூன்று பேரின் பெயர்களை தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அனுப்பி வைத்துள்ளது.
வியாழக்கிழமையன்று இதனை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி, ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால் தான் புதிய டிஜிபி நியமனத்துக்கான பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.
‘வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் எந்தவிதக் காலதாமதமும் இல்லாமல் யுபிஎஸ்சிக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அவமதிப்பு வழக்கு ஏன்?
இந்தநிலையில், டிஜிபி நியமனத்தில் காலதாமதம் ஏற்படுவதால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ‘டிஜிபி நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதுதொடர்பாக மூன்று பேரின் பெயர்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.
‘தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும்’ எனவும் மனுவில் ஹென்றி திபேன் தெரிவித்திருந்தார்.
“மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அனுப்பப்பட்ட பெயர்களில் ஒருவரை மாநில அரசு நியமிக்காமல் உள்ளது என்றால் அதில் ஏதோ தயக்கம் இருப்பதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது” எனக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த ஹென்றி திபேன்.
“பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் யார் பெயர் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், டிஜிபி பணியிடத்துக்கு மூத்த அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அதிலேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளின் நிலை குறித்துக் கூற வேண்டியதில்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் வாரத்தில் நடக்க உள்ள நிலையில், அரசியல்ரீதியாகவும் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

‘தேர்தல் ஆதாயத்துக்காக தாமதம்’ – எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபியை நியமனம் செய்யாமல் மக்களின் பாதுகாப்புடன் முதலமைச்சர் விளையாடிக் கொண்டிருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் முழுநேர டிஜிபியை நியமிக்காமல் மாநில அரசு இழுத்தடித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘புதிய டிஜிபிக்கான மூன்று பெயர்களில் இறுதி உத்தேச பட்டியலை யுபிஎஸ்சி அனுப்பிவிட்டதாக செய்திகள் வரும் நிலையில், மூன்று பேரில் ஒருவரை புதிய டிஜிபியாக நியமிப்பதில் முதலமைச்சருக்கும் தி.மு.க அரசுக்கும் என்ன சிக்கல் இருக்கிறது?’ எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரகுபதி அளித்த விளக்கம் என்ன?
இதற்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நோக்கத்தில் டிஜிபி நியமனத்தைக் காலதாமதம் செய்வதாக அடிப்படையில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
‘டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக யுபிஎஸ்சி நடத்திய கூட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை காக்கும் ஓர் அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது’ எனவும் அறிக்கையில் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல் தாங்கள் விரும்பியவர்களையே முன்மொழிந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ‘இதனை தமிழ்நாடு அரசு ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில் அதற்கான காரணங்களை விளக்கி தலைமைச் செயலாளர் மூலமாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
இதற்கான பதில் பெறப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
‘சட்டம் ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துகளை புறக்கணித்து தனக்கு வேண்டிய நபர்களை தமிழ்நாட்டில் டிஜிபியாக அமர்த்துவதற்கு மத்திய அரசு முயல்வது தான் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்னையாக உள்ளது’ என ரகுபதி கூறியுள்ளார்.
‘குறைகூறுவது ஏற்புடையதல்ல’ – பா.ஜ.க

ஆனால், இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் ஹென்றி திபேன், “டிஜிபியை எவ்வாறு நியமனம் செய்ய வேண்டும், யார் நியமனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிகளில் உள்ளது. டிஜிபிக்கான பெயர்ப் பட்டியலை யுபிஎஸ்சி அனுப்பிவிட்டது. தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது” என்கிறார்.
“இன்னமும் டிஜிபியை நியமிக்காத காரணத்தை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க அரசை எப்படி குறைகூற முடியும் எனத் தெரியவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “எந்த அடிப்படையில் மத்திய அரசு தவறு செய்தது என்பதை அமைச்சர் ரகுபதி விளக்க வேண்டும். டிஜிபி நியமனத்தில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது” எனக் கூறுகிறார்.
“பட்டியலை குறித்த நேரத்தில் தமிழக அரசு அனுப்பவில்லை. அவர்களுக்கு வேண்டிய நபரைக் கொண்டு வருவதற்காக தாமதப்படுத்துகின்றனர். தங்கள் பக்கம் தவறை வைத்துக் கொண்டு மத்திய அரசை குறைகூறுவது ஏற்புடையதல்ல” எனவும் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

‘எட்டு பேரில் யார்?’
இதுதொடர்பாக, பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “தமிழ்நாட்டில் டிஜிபி பட்டியலில் உள்ள எட்டு பேரின் பெயர்களை யுபிஎஸ்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது” என்கிறார்.
“இந்தப் பட்டியலில் சீமா அகர்வால், ராஜிவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் மற்றும் தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்பட சிலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் சிலர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக யுபிஎஸ்சி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இதனை ஏற்காமல் மூன்று பெயர்களை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்யுமாறு யுபிஎஸ்சி கூறியது. ஆனால், தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாகவே காலதாமதம் ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
“உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ள இரண்டாவது அவமதிப்பு வழக்கு, வரும் வாரத்தில் வரவுள்ளது. அப்போது தமிழ்நாடு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்து டிஜிபியை நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு