- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், மலைப்பாம்பு ஒன்றுடன் இருந்த வீடியோவை வெளியிட்டதையடுத்து, சென்னையில் வனத் துறை சோதனை ஒன்றை நடத்தியிருக்கிறது. அவர் கூறுவது போல, இந்தியாவில் வீட்டில் மலைப்பாம்புகளை வளர்க்க முடியுமா? தமிழ்நாடு வனத்துறை கூறுவது என்ன? இதுபோன்ற யூடியூப் வீடியோக்களால் என்ன அபாயம்?
டிடிஎஃப் வாசன் வீடியோவால் சர்ச்சை
பிரபல யூ டியூபரான டிடிஎஃப் வாசன், சமீபத்தில் தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி யூடியூபில் வீடியோ வெளியிட்டார். 2 வயதாகும் அந்த பாம்பிற்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாக சட்டபூர்வமாகவே அதனை வாங்கியிருந்ததாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும், அந்தப் பாம்பிற்காக கூண்டு ஒன்றை வாங்குவதற்காக திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்கும் கடைக்கும் சென்றார்.
இந்த பாம்பு வீடியோ வெளியானதும் சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் திங்கட்கிழமையன்று திருவொற்றியூரில் டிடிஎஃப் வாசன் குறிப்பிட்ட கடையில் வனத்துறையினர் சோதனை ஒன்றையும் நடத்தினர். இந்த சோதனை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் பாம்பை வீட்டில் வளர்க்க அனுமதி உண்டா?
டிடிஎஃப் வாசன் கையில் வைத்திருந்த பாம்பு, Ball Python வகையைச் சேர்ந்தது என அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். தனி நபர்கள் இதுபோல பாம்புகளை வளர்க்க முடியுமா?