இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘டிட்வா’ புயல், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது.
எதிர்ரும் 30ஆம் திகதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:
* சென்னையிலும் அதிகமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
* டிட்வா புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் எடுத்துள்ளோம்.
* கடந்த கனமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
* அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.
* தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்காக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவுப்பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
* டெல்டா மாவட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிக்காமல் இருந்தால் சரி. அவர் எப்போதும் அப்படி தான் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.
The post ‘டிட்வா’ புயலை எதிர்கொள்ள முதலமைச்சர் தலைமையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! appeared first on Vanakkam London.