0
டிட்வா (Ditwah)புயல் தாக்கம் இலங்கையை விட்டு தற்போது இந்தியா- தமிழ்நாடு நோக்கி நகர்ந்துள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பயண விவரங்களை அறிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையில் இருந்து கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
மேலும், புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை முதல் இயக்கப்பட வேண்டிய 5 விமான சேவைகளும், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டிய 2 விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் கரையோர நகரங்களிலும், ராமநாதபுரம் ஆகிய கடற்கரையோரப் பகுதிகளிலும் கனத்த மழை பெய்கிறது.
டிட்வாபுயல் அபாயத்தைச் சமாளிக்க முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுதும் சுமார் 6,000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கு உள்ளாகும் என அச்சப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் வடபகுதி, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கரைகளில் சிவப்பு எச்சரிக்கை விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.