படக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.கட்டுரை தகவல்
அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.
ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.
மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் எடி ரமா, டியல்லாவை அமைச்சரவையின் புதிய உறுப்பினராக அறிமுகம் செய்தார்.
எனினும், இந்த நகர்வு அடையாள ரீதியானது தானே தவிர, அதிகாரப்பூர்வமானது அல்ல. ஏனெனில் அல்பேனியாவின் அரசியலமைப்பின்படி அரசாங்க அமைச்சர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
எனினும் ஏஐ அமைச்சரால் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகமே.
டியல்லா என்கிற பெயருக்கு அல்பேனிய மொழியில் சூரியன் என்று அர்த்தம். அவர் அரசாங்கத்தின் எந்த தகவலையும் கசியவிட மாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே அதிகாரப் பசி என்பது அவர் நுகர்கிற மின்சாரம் மட்டுமே. வேறு எந்த விதமான ஊழலும் அவரால் ஏற்படாது.
பொது கொள்முதலுக்கான அமைச்சராக தனது குழுவில் டியல்லாவைச் சேர்த்தபோது பிரதமர் ரமாவின் மனதில் ஊழல் தான் முதன்மையாக இருந்தது.
அவரின் பங்கு என்பது அல்பேனியா “பொது ஒப்பந்தங்களின் 100% ஊழல் இல்லாத ஒரு நாடாக” மாறுவதை உறுதி செய்வதுதான்.
“நாங்கள் ஒரு புத்திசாலித்தனமான குழுவுடன் வேலை செய்கிறோம், இதில் அல்பேனியர்கள் மட்டுமல்ல பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பொது கொள்முதலில் முழுவதுமான ஏஐ மாடலை கொண்டு வர இந்தக் குழு வேலை செய்துள்ளது” என எடி ரமா பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “இதன் மூலம் பொது ஏலத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கான சாத்தியத்தை அகற்றுவதோடு எங்களால் இந்த நடைமுறையை துரிதமாகவும், மிகவும் திறம்படவும், பொறுப்புமிக்கதாகவும் ஆக்க முடியும்.” என்றார்.
அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே டியல்லா அல்பேனியாவில் வேலை செய்து வருகிறார். ஏஐ சார்ந்த விர்ஷுவல் அசிஸ்டண்டாக (உதவியாளர்) அவரின் முதல் பணி விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் பெற வழிகாட்டுவதுதான்.
இ-அல்பேனியா தளத்தில் டியல்லா 1 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு உதவியிருப்பதாக பெருமிதப்படுகிறார் ரமா. ஆனால் அரசாங்கத்தின் ஏஐ-யின் பங்கு பற்றிய அவரின் பார்வை மிகப்பெரியது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, அல்பேனிய பிரதமர் எடி ரமா
டியல்லாவின் புதிய பணிக்கான எதிர்வினைகள் எதிர்பார்த்ததைப் போல பலவாறாக இருந்துள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இதனை “அபத்தமானது” மற்றும் “அரசியலமைப்புக்கு விரோதமானது” என விமர்சித்துள்ளது.
ஆனால் சிலர் இம்முயற்சியை நம்பிக்கையுடனே பார்க்கின்றனர்.
பால்கன்ஸ் கேபிடல் என்கிற நிதி சேவை நிறுவனத்தின் உரிமையாளரான அனெய்டா பஜ்ரக்டாரி பிக்ஜா, “பிரதமர் எடி ரமா அவ்வப்போது சீர்த்திருத்தங்களை நாடகத்தனமான நடவடிக்கைகளாக செயல்படுத்துவார், எனவே இது அடையாள ரீதியானது என மக்கள் யோசிப்பது இயல்பே” என்கிறார்.
ஆனால் இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கொள்முதலில் நம்பிக்கையை மேம்படுத்தும் உண்மையான அமைப்பை உருவாக்குமானால் “ஏஐ அமைச்சர்” உபயோகமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
லஞ்சத்தைக் குறைப்பதற்கு ஏஐ-யை பயன்படுத்த உள்ள சாத்தியங்களையும் ஊழல் எதிர்ப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
“ஏஐ தற்போதும் ஒரு புதிய கருவிதான் – ஆனால் சரியாக ப்ரோக்ராமிங் செய்யப்படும் பட்சத்தில், ஒரு ஒப்பந்தத்தில் இணையத்தில் பதிவேற்றினால் ஒரு நிறுவனம் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை தெளிவாகவும் மிக நெருக்கமாகவும் பார்க்க முடியும்,” என்கிறார் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கிழக்கு பால்கன்ஸ், ஊழல் மற்றும் சட்டத்தின் ஆட்சி பாடங்களின் வல்லுநரான முனைவர் ஆண்டி ஹோஜஜ்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் வேகமாக ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் மற்றும் 2027-க்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து வரும் ஊக்குவிப்பு போன்றவற்றை அல்பேனியாவுக்கு ஊழலை எதிர்க்கும் வலுவான காரணங்களாக உருவாகியுள்ளது என்று ஆண்டி நம்புகிறார்.
நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார் ஆண்டி.
“ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள முக்கியமான முன் நிபந்தனை ஊழலைச் சரிசெய்ய வேண்டும் என்பதுதான். அந்த நிபந்தனையை அடைய டியல்லா ஒரு கருவியாக அல்லது வழிமுறையாக இருக்குமென்றால், அதனை நிச்சயம் ஆராயலாம்.” எனத் தெரிவித்தார்.
சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின்னால் விளம்பர அம்சங்கள் இருப்பதை ரமா மறுக்கவில்லை. ஆனால், இதற்குப் பின்னால் தீவிரமான நோக்கம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.
“இது அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய முகமைகள், வித்தியாசமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அமைச்சரிடமிருந்து நான் எதிர்பார்க்கும் மிகப்பெரிய பலன் அதுதான்,” என்கிறார் ரமா.
வேறு விதமாக சொல்வது என்றால், அமைச்சர்களே கவனமாக இருங்கள் ஏஐ உங்களின் வேலைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.