படக்குறிப்பு, சாகோஸ் ஒப்பந்தத்தைத் தொடர பிரிட்டன் எடுத்த முடிவை அமெரிக்கா முன்பு ஆதரித்தது.கட்டுரை தகவல்
“டியாகோ கார்சியாவை விட்டுக்கொடுக்காதீர்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கவும், ஒரு முக்கியமான ராணுவ தளத்தை குத்தகைக்கு எடுக்கவும் பிரிட்டன் மேற்கொண்டுள்ள திட்டத்தை அவர் விமர்சித்தார்.
“இந்த நிலம் பிரிட்டனிடம் இருந்து எடுக்கப்படக் கூடாது”, அப்படிச் செய்தால் அது “நமது சிறந்த கூட்டணிக்கு ஒரு களங்கமாக” அமையும் என்று டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் தீவின் இறையாண்மையை மொரிஷியஸிடம் விட்டுக்கொடுப்பதற்கான பிரிட்டனின் திட்டத்திற்கு அமெரிக்கா செவ்வாயன்று தனது அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கிய போதிலும் டிரம்ப் இக்கூற்றைப் பதிவு செய்துள்ளார்.
டிரம்பிற்கு பதிலளித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் “பிரிட்டன் மற்றும் எமது முக்கிய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்கும், பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் மிக முக்கியமானது” என்று கூறியது.
“இந்த முக்கியமான ராணுவ தளத்தின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கான ஒரே வழி. நாங்கள் எட்டியுள்ள ஒப்பந்தம் மட்டும் தான் ” என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்த ஒப்பந்தம் அங்கு அமைந்துள்ள ராணுவத் தளத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை பாதுகாப்பதற்குத் தேவையானது என்று பிரதமர் சர் கியர் ஸ்டாமர் வலியுறுத்தியிருந்தார். மேலும், அந்தத் தீவுகளின் மீது பிரிட்டன் கொண்டிருந்த இறையாண்மையின் சட்டபூர்வத்தன்மையை மொரிஷியஸ் முன்பு எதிர்த்த நிலையில், அந்த ஒப்பந்தம் அவசியமான ஒன்று எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டியாகோ கார்சியா அந்தத் தீவுக்கூட்டத்திலேயே மிகப்பெரிய தீவாகும், இது பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆயுதப்படைகளால் கூட்டு ராணுவத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் டியாகோ கார்சியாவை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும்.
அடுத்த வாரம் அமெரிக்காவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “நாடுகளுக்கு இடையேயான விஷயங்களில் குத்தகை ஒப்பந்தங்கள் பலனளிக்காது என்றும், 100 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தில் ஈடுபடுவதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்கிறார் என்றும் நான் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரிடம் கூறி வருகிறேன்” என்று பதிவிட்டார்.
மேலும், டியாகோ கார்சியா “இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது” என்றும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
“இதற்கு முன்பு அறியப்படாத அமைப்புகளின் கோரிக்கைகளால், பிரதமர் ஸ்டாமர் இந்த முக்கியமான தீவின் மீதான கட்டுப்பாட்டை இழந்து வருகிறார்” என்று அவர் கூறினார்.
“பிரிட்டனுக்காகப் போராட நாங்கள் எப்போதும் தயாராகவும், விருப்பத்துடனும், தகுதியுடனும் இருப்போம், ஆனால் அவர்கள் ‘எழுச்சி’ (Wokeism) சிந்தனை மற்றும் அவர்களுக்கு முன்னால் உள்ள பிற பிரச்னைகளை எதிர்கொள்வதில் வலுவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் குறித்து நடந்து வரும் அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தைகளையும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அதில்,”இரான் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால், மிகவும் நிலையற்ற மற்றும் ஆபத்தான ஆட்சியின் தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா டியாகோ கார்சியாவைப் பயன்படுத்துவது அவசியமாக இருக்கலாம்” எனக் கூறப்பட்டிருந்தது.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பாக இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை எடுப்போம் என்று அதிபர் டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார்.
இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் திசையில் நகர்வதாக அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இக்கருத்தை இரான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
பட மூலாதாரம், Somodevilla/Getty Images
படக்குறிப்பு, வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட்
டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள் குறித்து பிபிசி எழுப்பிய கேள்விக்கு , வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “இந்தப் பதிவை டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும், இது நேரடியாக அவரிடமிருந்தே வந்துள்ளது. ட்ரூத் சோஷியலில் நீங்கள் இதைப் பார்க்கும்போது அது நேரடியாக அதிபர் டிரம்பிடமிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள், இந்த அதிபரின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தின் கொள்கைகளைத் தெரிவிப்பதில் உள்ள சிறப்பு இதுதான்” என்றார்.
ஆனால் செவ்வாயன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை சாகோஸ் தீவுகளை ஒப்படைக்கும் திட்டத்திற்கு தனது அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியது.
ஒரு அறிக்கையில், “சாகோஸ் தீவுக்கூட்டம் தொடர்பாக மொரிஷியஸுடனான தனது ஒப்பந்தத்தை தொடர பிரிட்டன் எடுத்துள்ள முடிவை அது ஆதரிக்கிறது” என்று கூறியுள்ளது.
டிரம்பின் சமீபத்திய கருத்துகள் பற்றி பிரிட்டனின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிழல் வெளியுறவு செயலாளர் டேம் பிரிதி படேல் அரசை விமர்சித்தார்.
“இறுதியாக ஸ்டாமர் விவேகத்துடன் செயல்பட்டு, தனது முடிவை மாற்றி, இந்த மோசமான ஒப்பந்தத்தை முற்றிலுமாக கைவிட வேண்டிய நேரம் இது” என்று அவர் கூறினார்.
லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவி , “சாகோஸ் தீவுகள் குறித்து மாறிக்கொண்டே இருக்கும் டிரம்பின் நிலைப்பாடு , ஸ்டாமரின் அணுகுமுறை ஏன் தோல்வியடையும் என்பதைக் காட்டுகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரீஃபார்ம் யுகே தலைவர் நைஜல் ஃபரேஜ், “சாகோஸ் தீவுகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் கியர் ஸ்டாமர் நமது மிக முக்கியமான கூட்டாளியை அந்நியப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறார், இது பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக மோசமான ஒப்பந்தம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்த வார தொடக்கத்தில், ஒப்படைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து வரும் நான்கு சாகோஸ் தீவுவாசிகள், அந்த ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சாகோஸ் தீவுகளின் தொலைதூர பவளத்தீவில் இறங்கினர்.
பிரிட்டிஷ் கடல்சார் ரோந்துப் படையினரின் வெளியேற்ற எச்சரிக்கையின் பின்னரும், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.
பட மூலாதாரம், History/Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, டியாகோ கார்சியாவில் உள்ள ராணுவ தளம்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகள், அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி என்று அழைக்கப்படுகின்றது.
பிரிட்டனுக்கு தென்கிழக்கே சுமார் 5,799 மைல் (9,332 கி.மீ) தொலைவிலும், மொரிஷியஸிற்கு வடகிழக்கே சுமார் 1,250 மைல் தொலைவிலும் அத்தீவுகள் அமைந்துள்ளன.
இந்தத் தீவுகள் 1814 முதல் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ளன.
1965 ஆம் ஆண்டில் 3 மில்லியன் பவுண்டுகளுக்கு பிரிட்டன் அரசாங்கத்தால் இவை வாங்கப்பட்டன, இது இந்தத் தீவுகளை ஒரு வெளிநாட்டுப் பிரதேசமாக நிறுவுவதற்கு வழிவகுத்தது.
ஆனால், சுதந்திரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் தீவுகளை விட்டுக்கொடுக்கும்படி தாங்கள் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தப்பட்டதாக மொரிஷியஸ் நீண்டகாலமாக வாதிட்டு வருகிறது.
1960களின் பிற்பகுதியில், டியாகோ கார்சியாவில் ஒரு ராணுவ தளத்தை அமைக்க அமெரிக்காவிற்கு பிரிட்டன் அழைப்பு விடுத்தது,
இந்தச் செயல்பாட்டின் போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அந்த சாகோஸ் மக்களில் சிலர் மொரிஷியஸ் மற்றும் செஷெல்ஸில் குடியேறினர், மற்றவர்கள் பிரிட்டனில், குறிப்பாக மேற்கு சசெக்ஸில் உள்ள கிராலியில் குடியேறினர்.