காஸாவுக்கான தனது அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் அளித்த பதிலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பது போல் தோன்றியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் எனது சமூக ஊடகக் கணக்குகளிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் “போர் முடிந்துவிட்டதா?” மற்றும் “இது கனவா அல்லது நிஜமா?” என்பது போன்ற கேள்விகளால் நிரப்பினர்.
இரவோடு இரவாக நடந்த இந்த முன்னேற்றங்களின் வேகம், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பலரைத் தவிக்க வைத்துள்ளது.
மத்தியஸ்தர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸின் கவனமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கை, திட்டத்தை முற்றிலுமாக நிராகரிப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக நிபந்தனைகளுடன் கூடிய “சரி” என்று பதிலளித்தது.
இஸ்ரேலியப் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான டிரம்பின் நிபந்தனைகளையும், காஸா நிர்வாகத்தை பாலத்தீன தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒப்படைக்கும் யோசனையையும் ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவரது 20 அம்சத் திட்டத்தின் பல கூறுகள் குறித்து அது தெளிவான பதிலை அளிக்கவில்லை.
இது, பந்தை மீண்டும் இஸ்ரேலின் பக்கம் தள்ளும் விதமாக, கணித்து வழங்கப்பட்ட பதில் என்று பல பாலத்தீனர்கள் கூறுகின்றனர்.
அந்த அறிக்கை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், ஹமாஸ் அமைதிக்காகத் தயாராக இருப்பதாகத் தான் நம்புவதாக பதிவிட்டு, காஸாவில் குண்டு வீசுவதை நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தச் செய்தி காஸா பாலத்தீனர்கள் மத்தியில் நம்பிக்கை முதல் ஆழ்ந்த சந்தேகம் வரை பலவகையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
ஹமாஸ் ஒரு வலையில் சிக்கிவிட்டதாகவும், பணயக் கைதிகளை மீட்டுக் கொண்ட பிறகு இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கும் என்றும் சிலர் அஞ்சுகிறார்கள். இரண்டு வருடப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வரலாற்று வாய்ப்பு உருவாகியுள்ளது என்று மற்றவர்கள் நம்புகிறார்கள்.
“பொறுமையாக இருக்கும்படி நான் அறிவுறுத்துகிறேன்,” என்று இப்ராஹிம் ஃபாரெஸ் பிபிசியிடம் கூறினார்.
“அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம். விவரங்களைப் பற்றிப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இருக்கும். அதில் தான் எப்போதும் பிசாசு ஒளிந்திருக்கும்,” என்று அவர் கூறினார். “லெபனானைப் பாருங்கள், அங்கு இப்போதும் கூட வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றன.”
ஹமாஸின் பதில் அதன் நேரடியான தன்மைக்கு முற்றிலும் மாறானது என்று மஹ்மூத் தாஹெர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
“இந்த முறை வழக்கம் போல் உடனடியாக ‘ஆனால்’ என்ற வார்த்தை இல்லாமல், ‘ஆம்’ என்று இருந்தது,” என்று அவர் எழுதினார்.
“டிரம்பின் ஃபார்முலா படி கைதிகள் விடுவிப்புக்கு ‘சரி’, போர் நிறுத்தம் மற்றும் வெளியேற்றத்துக்கு ‘சரி’, பாலத்தீன அதிகார சபையிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ‘சரி’. ஆனால், என்ற வார்த்தை அதன் பின்னரே வந்தது. ஹமாஸ் டிரம்பை புகழ்ந்து அவரது தற்பெருமைக்கும் கூட தீனிபோட்டது.”
காஸாவைச் சேர்ந்த ஆர்வலரும், நீண்டகாலமாக ஹமாஸ் விமர்சகருமான கலீல் அபு ஷம்மாலா (Khalil Abu Shammala), இந்த முடிவு இயக்கத்தின் இருப்பைப் பற்றியது என்று கூறினார்.
“அவர்கள் இதை விவேகம் – அல்லது மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இது ஹமாஸ் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவே ஆகும். இந்த அறிக்கையை ஹமாஸ் தான் எழுதியதா என்று எனக்குச் சந்தேகம் தான் – இது மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது.”
அந்த வார்த்தைகள் உண்மையிலேயே போரை முடிவுக்குக் கொண்டுவர போதுமானதா என்பதைக் காணக் காத்திருக்கும் நிலையில், பாலத்தீனர்கள் இப்போதும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளனர்.