பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை உள்ளடக்கிய ஓர் முக்கியமான அரசியல் பயணத்துக்காக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார்.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் உள்ளது.
டிரம்ப் முதலில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்) உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குச் செல்கிறார். தென் கொரியாவில் அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தில் டிரம்பும் மற்ற உலகத் தலைவர்களும் எதை வெல்ல விரும்புகிறார்கள் என்பது குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் பிபிசி செய்தியாளர்கள் விளக்குகிறார்கள்.
டிரம்புக்கு சீனா தான் முக்கியம்
அமெரிக்க நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும், டிரம்புடைய பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஸுர்ச்சர் எழுதுகிறார்.
உலக வர்த்தகத்தில் பல நாடுகளின் பங்கு இருந்தாலும், டிரம்பின் வெற்றி அல்லது தோல்விக்கு சீனாவே முக்கிய காரணமாக உள்ளது.
2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஏபெக் (Asia-Pacific Economic Cooperation) மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு ஒரு புதிய பாதையை அமைக்கக்கூடும்.
டிரம்ப் ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல, சீனாவுக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் நீட்டிக்க முடியாதவை. இதனை அவர் நேரடியாக சொல்லவில்லை என்றாலும், சீனாவுடன் அதிகரிக்கும் பொருளாதாரப் போர், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், உலகம் முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அமெரிக்கா-சீனா உறவுகள் பதற்றமடைந்தால், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உடனே சரிவடைவது இந்த உண்மையை தெளிவாக காட்டுகிறது.
அடுத்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பும் போது, தென் கொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவும், அமெரிக்க உற்பத்தியில் ஜப்பானிய முதலீட்டை உறுதி செய்யவும் டிரம்ப் முயற்சிப்பார்.
ஆனால், சீனாவை மீண்டும் அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க வைப்பது, சீனாவில் இருந்து கிடைக்கும் அரிய கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து அணுகுவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகளை தளர்த்துவது, அமெரிக்க நிறுவனங்களுக்கு சீன சந்தையில் அதிக வாய்ப்புகளை வழங்குவது மற்றும் முழுமையான வர்த்தகப் போரைத் தவிர்ப்பது ஆகியவை அவரது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
டிரம்புக்கு அது தான் முக்கியமான விஷயம்.
ஜின்பிங்கின் உத்தி
அக்டோபர் 30-ஆம் தேதி, தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்கிறார். அந்த சந்திப்பில், ஷி ஜின்பிங் கடுமையான பேச்சுவார்த்தையாளராக இருக்க விரும்புகிறார் என்ற பார்வையில் பிபிசி சீன செய்தியாளர் லாரா பிக்கர் எழுதும் கருத்து இது.
ஜின்பிங் சீனாவிடம் உள்ள அரிய கனிமங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். இந்த கனிமங்கள் இல்லாமல், செமி கண்டக்டர்கள், ஆயுதங்கள், கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றைத் தயாரிக்க முடியாது. இது அமெரிக்காவின் பலவீனம். அதைப் பயன்படுத்தி, சீனா அமெரிக்க விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் வாங்காமல், டிரம்பின் கிராமப்புற வாக்காளர்களான விவசாயிகளை காயப்படுத்துகிறது.
ஜின்பிங், டிரம்பின் முதல் பதவிக்காலத்திலிருந்து பாடம் கற்றுள்ளார். இப்போது, சீனா வரி சுமைகளை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஏனெனில், ஒரு காலத்தில் சீன ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை பெற்ற அமெரிக்கா, இப்போது அவ்வளவு முக்கியமான சந்தையாக இல்லை.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடனான பொருளாதாரப் போருக்கும், உள்நாட்டு சவால்களுடனான அவரது போராட்டத்துக்கும் இடையில், ஜின்பிங் ஒரு சமநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு ஜின்பிங்கின் பிரச்னைகள் பற்றியும் தெரியும். சீனாவில் உள்ள வேலையின்மை, ரியல் எஸ்டேட் நெருக்கடி, அதிகரித்து வரும் உள்ளூர் அரசாங்கக் கடன் மற்றும் மக்கள் செலவிட தயங்குவது போன்றவற்றைக் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கிறது.
டிரம்ப் மேம்பட்ட ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டாலோ அல்லது தைவானுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ராணுவ ஆதரவை திரும்பப் பெற்றாலோ, சீனா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இது எளிதாக நடக்காது.
முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், டிரம்ப் திடீரென துணிச்சலாக முடிவெடுக்கிறார். ஆனால், ஷி ஜின்பிங், நீண்ட காலத்துக்கான திட்டத்துடன் செயல்படுகிறார்.
ஆனால், டிரம்பால் அந்த நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியுமா என்பது தான் முக்கியக் கேள்வியாக உள்ளது.
முக்கிய பங்கு வகிக்கும் ஒப்பந்தம்
உலக உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசியாவின் தொழிற்சாலைகள், டிரம்ப் விதித்த வரிகளிலிருந்து விலக்கை எதிர்பார்க்கின்றன என்கிறார் பிபிசி ஆசிய வணிக செய்தியாளர் சுரஞ்சனா திவாரி.
சில நாடுகள் ஒப்பந்தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன, சில ஏற்கெனவே குறிப்பிட்ட அம்சங்களில் உடன்பட்டுள்ளன. ஆனால், இன்னும் எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
எனவே, ஒரு உறுதியான ஒப்பந்தம் அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கையூட்டும் பேச்சுவார்த்தைகள் கூட வரவேற்கப்படுகின்றன.
பட மூலாதாரம், AFP via Getty Images
சீனாவை எடுத்துக்கொண்டால், டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
ஆனால் வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், மற்றும் அனைத்துக்கும் மூல காரணமாக உள்ள, அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டி போன்ற பல விஷயங்களையும் இரு நாட்டுத் தலைவர்களும் தீர்க்க வேண்டும்.
ஏனென்றால் அந்த இரு நாடுகளும் ஏஐ மற்றும் உயர் தொழில்நுட்பத்தில் முன்னிலை பெற போராடுகின்றன.
இந்த பதற்றங்கள் குறைந்தால், நடுவில் சிக்கியுள்ள மற்ற ஆசிய நாடுகளுக்கு நிம்மதி கிடைக்கும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா அமெரிக்க மின்னணு விநியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் சீனாவின் தேவையை பெரிதும் சார்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் 10% முதல் 40% வரையிலான வரிகள், வியட்நாம், இந்தோனீசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.
இது அமெரிக்க சிப் நிறுவனங்களையும் பாதிக்கலாம். உதாரணமாக, மலேசியாவில் தொழிற்சாலைகள் கொண்ட மைக்ரான் டெக்னாலஜி.
கடந்த ஆண்டு, மலேசியா சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்காவின் மொத்த சிப் இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு.
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பணக்கார நாடுகள் வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகள் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளிகளாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலை மிகவும் குழப்பமானது. அதனால், அந்த நாடுகளும் வரி விதிகள் மற்றும் முதலீடுகளை உறுதிப்படுத்த விரும்புகின்றன.
அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள், அமெரிக்க சந்தையை முக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால், தற்போதைய குழப்பத்தில் வழி கண்டுபிடிக்க அவர்களும் போராடி வருகின்றனர்.
ஜப்பானின் புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்
ஜப்பானின் புதிய பிரதமர் சனே டாக்காய்ச்சியை “வலிமையும் ஞானமும் கொண்ட பெண்மணி” என டிரம்ப் புகழ்ந்துள்ளார், என்பதைக் குறிப்பிட்டு, ஜப்பானின் பார்வையில் இந்த சந்திப்பு குறித்து விளக்குகிறார் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல்,
இந்த வாரம், டிரம்புடன் நல்ல உறவை உருவாக்கும் டாக்காய்ச்சியின் திறன், அவருடைய தலைமைத்துவத்துக்கும், மாறிவரும் உலக அரசியல் அமைப்பில் ஜப்பானின் இடத்துக்கும் ஒரு ஆரம்பகட்ட சோதனையாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில், ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கப் போவதாக டாக்காய்ச்சி அறிவித்தார். இது, அமெரிக்காவுடன் பாதுகாப்புப் பொறுப்பை பகிர்ந்துகொள்ளும் அவரது நோக்கத்தை காட்டுகிறது.
டிரம்ப் இதைப் பற்றி முன்பே பேசியுள்ளார். அவர், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்கான செலவில் டோக்கியோ அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தலாம். தற்போது ஜப்பான், வெளிநாடுகளில் அதிகமான அமெரிக்க வீரர்களை (சுமார் 53,000 வீரர்கள்) கொண்டுள்ள நாடாக திகழ்கிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
இரு நாடுகளும், அவர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வரி ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகின்றன.
இந்த ஒப்பந்தம், ஜப்பானின் முக்கிய கார் நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா, நிசான் ஆகியவற்றுக்கு நன்மை பயக்கும் . அமெரிக்கா, ஜப்பானிய கார்கள் மீது விதிக்கும் இறக்குமதி வரியை 27.5% இலிருந்து 15% ஆக குறைக்கிறது. இதனால், சீன கார்களுக்கு எதிராக ஜப்பானிய கார்கள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறும்.
டாக்காய்ச்சி, ரியோசி அகசாவாவை தலைமை வரி பேச்சுவார்த்தையாளராக தக்க வைத்துள்ளார்.
இதற்குப் பதிலாக, ஜப்பான், அமெரிக்காவில் மருந்துகள் மற்றும் சிப் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த 550 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் விளைந்த பொருட்களை (அரிசி உட்பட) ஜப்பான் அதிகமாக கொள்முதல் செய்யும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு ஒருபுறம் அமெரிக்காவில் வரவேற்பு கிடைத்தாலும், ஜப்பானிய விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டிரம்புடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயுடனான டாக்காய்ச்சியின் உறவுகளும் அவருக்கு சாதகமாக அமையக்கூடும்.
அபே, டிரம்பின் நம்பிக்கையைப் பெற மார்-எ-லாகோவில் கோல்ஃப் விளையாடியதற்காக பிரபலமாக அறியப்பட்டவர். அந்த மாதிரியான தனிப்பட்ட ராஜ்ஜீய உத்தியை டாக்காய்ச்சியும் பின்பற்ற விரும்பலாம்.
கிம் ஜாங் உன் வருகையும் வரி தொடர்பான பேச்சுவார்த்தையும்
கொரியாவின் பார்வையில் டிரம்பின் பயணம் குறித்து எழுதுகிறார் பிபிசியின் சியோல் செய்தியாளர் ஜேக் குவோன்.
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு முக்கிய கவலையாக டிரம்ப் விதித்த வரிகள் உள்ளன.
ஆனால், டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனைப் பார்க்க செல்லலாம் என்ற ஊகங்கள் பரவியதால் அந்தப் பிரச்னை சற்று பின்னால் தள்ளப்பட்டுள்ளது .
ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா அதிபரின் அலுவலகத்தில் “சமாதானத் தூதர்” என்று டிரம்பை லீ புகழ்ந்து பேசினார். இந்நிலையில் 2019 சந்திப்பிக்குப் பின் கிம்மைப் பார்க்காததால், அவருடனான சந்திப்பு பற்றி டிரம்ப் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளார். கடந்த மாதம், கிம் டிரம்பை இன்னும் “அன்புடன்” நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார்.
டிரம்புடனான மற்றொரு உச்சிமாநாட்டின் மூலம் தனது அணு ஆயுதத் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறலாம் என கிம் நம்புவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் அத்தகைய சந்திப்பு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
எப்படியிருந்தாலும், லீயின் முக்கிய வேலை வர்த்தக ஒப்பந்தம் பேசுவது தான்.

தென் கொரிய ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரிகளை 25% இலிருந்து 15% ஆகக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த போதிலும் தடைபட்டுள்ளன.
தென் கொரியா அமெரிக்காவில் முன்கூட்டியே 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துவது அதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஏனென்றால் இது தென் கொரிய பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பங்கு. எனவே, இவ்வளவு பெரிய தொகை நிதி நெருக்கடியை உருவாக்கலாம் என்று தென் கொரியா அஞ்சுகிறது.
ஆனால், சமீபத்திய நாட்களில் பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், டிரம்ப் மற்றும் லீ இடையே புதன்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு