பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images
காஸா போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘சாதகமான அணுகுமுறைக்கு’ இஸ்ரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
டிரம்பின் காஸா அமைதித் திட்டம் தொடர்பாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு இடையில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 6 அன்று எகிப்தில் தொடங்கியது.
செப்டம்பர் கடைசி வாரத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது, டிரம்ப் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்சத் திட்டத்தை முன்வைத்தார்.
இதில், காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, உயிரோடு இருக்கும் 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். மேலும், இறந்ததாகக் கருதப்படும் சுமார் 20 பணயக்கைதிகளின் உடல்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட டொனால்ட் டிரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு இஸ்ரேலிய ஊடகங்கள் பாராட்டு தெரிவிக்கின்றன.
ஒய்நெட் செய்தி இணையதளத்தின்படி, பணயக்கைதிகளின் விடுதலையை உறுதி செய்யும் கட்டத்தில் இஸ்ரேல் உள்ளது.
ஹாயெரிட்ஸ் நாளிதழின்படி, டிரம்ப் இந்த அமைதித் திட்டத்தை அமல்படுத்த முழுமையாக உறுதிபூண்டுள்ளார்.
நெதன்யாகுவின் நிலைப்பாடு மாறியது குறித்தும் செய்திகளில் விவாதிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை’
ஹாயெரிட்ஸ் நாளிதழின்படி, ”டிரம்பின் அமைதித் திட்டத்தை ஆதரிப்பதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை. அதனால்தான் அவர் இதற்கு ஆதரவு அளிக்கிறார்.”
அமைதித் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் இந்தத் திட்டம் குறித்து விரைவாக விவாதிக்குமாறு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
“ஹமாஸ் காஸாவின் தனது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கைவிட மறுத்தால், அது முற்றிலுமாக அழிக்கப்படும்,” என்று சிஎன்என் (CNN) செய்திச் சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியிருந்தார்.
“பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் இந்த வாரமே தொடங்கும்,” என்று டிரம்ப் கூறியதற்கு இஸ்ரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
பல செய்தித்தாள்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையேயான இந்தப் பேச்சுவார்த்தையை காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ‘மிகவும் சாதகமான நடவடிக்கை’ என்று விவரித்தன.
மையவாத நாளிதழான மாறிவ், ‘கெய்ரோவிலிருந்து நம்பிக்கை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
அதிக அளவில் விநியோகிக்கப்படும் யெடியோட் அக்ரோனோட் நாளிதழ், முதல் பக்கத்தில், ‘அமெரிக்க அமைதித் திட்டத்தின் 90 சதவீத அம்சங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன’ என்று எழுதியது.
தாராளவாத நாளிதழாகக் கருதப்படும் ஹாயெரிட்ஸ், “இன்னும் பல சிரமங்கள் உள்ளன, ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு, போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது” என்று எழுதியது.
பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images
ஆனால், நெதன்யாகுவின் ஆதரவான வலதுசாரி சேனல் 14-இன் கூற்றுப்படி, “இந்த அமைதித் திட்டத்தை ஏற்க ஹமாஸுக்கு டிரம்ப் தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை.”
சேனல் 14 இந்த அமைதித் திட்டத்தை ‘தெளிவற்றது’ என்று விவரித்தது.
“இஸ்ரேல் இதுபோன்ற ஒரு அமைதி ஒப்பந்தத்தை பல மாதங்களுக்கு முன்பே அடைந்திருக்கலாம்,” என்பது இஸ்ரேலிய முக்கிய ஊடகங்களின் பெரும் பகுதியின் கூற்று.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சேனல் 14-இல் ஒரு நிகழ்ச்சியில், “முந்தைய அமைதித் திட்டங்கள் அனைத்திலும் சில இஸ்ரேலியப் பணயக்கைதிகளை மட்டுமே விடுவிப்பது பற்றிப் பேசப்பட்டது, அனைவரையும் அல்ல. உதாரணமாக, முந்தைய திட்டத்திலும் 10 பணயக்கைதிகளை மட்டுமே விடுவிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறப்பட்டது.
எனினும், முந்தைய திட்டத்தில் முதல் கட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, படிப்படியாக அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற அம்சம் இடம்பெற்றிருந்ததை சேனல் 14 குறிப்பிடவில்லை.
‘அனைத்தும் டிரம்ப் கைகளில்தான்’
பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images
பிரதமர் நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துள்ளதாகவும், இந்தப் புதிய நிகழ்வுகளை அவர் தனது முயற்சிகளின் விளைவாக காட்டுகிறார் என்று ஹாயெரிட்ஸ் நாளிதழ் எழுதியது.
இதற்கு முன்பு, போர் முழுவதும், பணயக்கைதிகளை ஹமாஸின் பிடியில் இருந்து ராணுவ அழுத்தத்தின் மூலம் மட்டுமே விடுவிக்க முடியும் என்று நெதன்யாகு வலியுறுத்தி வந்தார்.
“இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் முழு முயற்சி எடுப்பதாகத் தெரிகிறது,” என்று ஹாயெரிட்ஸின் பாதுகாப்பு ஆய்வாளர் ஆமோஸ் ஹாரெல் எழுதினார்.
“தடைகள் இன்னும் உள்ளன. ஆனால் சண்டை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அது முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இப்போது முழுமையாக உருவாகியுள்ளன,” என்று ஹாரெல் எழுதினார்.
‘சாதகமான மாற்றங்கள் இந்த வாரம் சுகோட் பண்டிகைக்குள் தொடங்கலாம்’ என்று டிரம்ப் மற்றும் நெதன்யாகு இருவரும் சமிக்ஞை செய்வதாகவும் அவர் எழுதியுள்ளார்.
சுகோட் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வரும் ஒரு யூதப் பண்டிகையாகும்.
நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமளிப்பதாக ஹாரெல் எழுதியுள்ளார்.
“முதலில், நெதன்யாகு பேச்சுவார்த்தைக்கான ஒவ்வொரு சாத்தியக்கூறுகளிலும் தடைகளை ஏற்படுத்தினார். இப்போது அவர் இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்டு அதற்கான நற்பெயரை பெற முயற்சிக்கிறார்,”
“டிரம்பின் இந்த நகர்வைத் தன்னால் தடுக்க முடியாது என்பதை நெதன்யாகு புரிந்து கொண்டிருக்கலாம். அதனால்தான் அவர் அதை ஆதரிக்கிறார்,” என்று ஹாரெல் எழுதியுள்ளார்
சேனல் 13-இன் செய்தியாளர் ஜோயல் பிரிம், “டொனால்ட் டிரம்ப் காஸா போர் முடிவடைவதாக அறிவிக்கும்போது, நெதன்யாகு மற்றும் இட்மார் பென்-க்விர் போன்ற தீவிர வலதுசாரித் தலைவர்கள் அதை ஏற்றே ஆக வேண்டும். இப்போது அனைத்தும் டிரம்ப் கைகளில்தான் உள்ளது,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images
டிரம்ப் முன்மொழிந்த திட்டத்தின் விவரங்கள் என்ன?
சமீபத்திய முன்மொழிவின்படி, இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உயிருள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் இறந்த பணயக்கைதிகளின் உடல்களைப் படிப்படியாகத் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும். மேலும், அதன் சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு மையங்கள் அழிக்கப்படும்.
ஒவ்வொரு இஸ்ரேலியப் பணயக்கைதி விடுவிக்கப்படும்போது, இஸ்ரேல் 15 காஸா மக்களின் உடல்களைத் திரும்ப ஒப்படைக்கும் என்று அந்தத் திட்டம் கூறுகிறது.
இரு தரப்பினரும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டவுடன், “முழு உதவியும் உடனடியாகக் காஸாப் பகுதிக்கு அனுப்பப்படும்” என்றும் அந்தத் திட்டம் கூறுகிறது.
இந்த அமைதித் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, அமெரிக்க அதிபருடன் நின்றிருந்த பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
இருப்பினும், அவரது கூட்டணி அரசின் தீவிர வலதுசாரி தலைவர்கள் சிலர் ஏற்கனவே இந்த அம்சங்களில் சிலவற்றை நிராகரித்துள்ளனர்.
இந்த அமைதித் திட்டத்தை இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை வரவேற்றுள்ளன.
இருப்பினும், பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேனின் கூற்றுப்படி, ”இந்தத் திட்டத்தில் போதுமான தெளிவு இல்லை. எனவே, இரு தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்வது போல் காட்டிக் கொள்ளலாம், மேலும் இதுகுறித்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின் போது அமைதி திட்டம் தடுக்கப்படலாம். அதன் தோல்விக்கு ஒருவர் மற்றவர் மீது பழி போடலாம்.”
கடந்த பல பேச்சுவார்த்தைகளில் இத்தகைய போக்கு காணப்பட்டது. அப்படி நடந்தால், டிரம்ப் நிர்வாகம் யாருக்கு ஆதரவாக நிற்கும் என்பதும் தெளிவாகிறது. அது இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும்.
ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ‘முழு ஆதரவையும்’ வழங்கும் என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் தெளிவாகக் கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு