பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எப்படி பேசுகிறாரோ, அப்படியே செய்வார் என்று எந்த அவசியமும் இல்லை.
பிரதமர் மோதியை நண்பர் என அழைத்த டிரம்ப், அதிபரான பிறகு இந்தியாவுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி இந்தியா மீது 50% வரிகளை விதித்தது அமெரிக்கா. அதன் தாக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.
அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி செப்டம்பர் மாதம் 20% சரிந்தது. அதற்கு முந்தைய 4 மாதங்களில் 40% சரிந்திருந்தது.
டெல்லியை மையமாகக் கொண்ட குளோபல் டிரேட் ரீசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின் இயக்குநர் அஜய் ஸ்ரீவஸ்தவா, டிரம்பின் வரிகளால் இந்தியா தான் கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இனிவரும் மாதங்களில் இந்தச் சரிவு மேலும் அதிகரிக்கும் என்றார்.
“மோதி ஒரு சிறந்த நபர். அவருக்கு டிரம்பை பிடிக்கும். நீங்கள் ‘பிடிக்கும்’ என்கிற வார்த்தையை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரின் அரசியல் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என எனக்கு விருப்பமில்லை.” என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதில்லை என மோதி தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிவித்தார் டிரம்ப்.
“இதை உடனடியாக செய்ய முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். அதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அந்த நடைமுறை விரைவாக முடிக்கப்படும்,” என்றும் கூறினார் டிரம்ப்.
பட மூலாதாரம், Getty Images
கடினமான சூழலில் இந்தியா
டிரம்பின் பேச்சுக்குப் பிறகு மோதி அரசு அத்தகைய உத்தரவாதம் வழங்கியதா என இந்திய ஊடகங்களில் கேள்வி எழத் தொடங்கியது.
டிரம்பின் கருத்தால் இந்தியாவில் மோதி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தியாவின் கொள்கை மாற்றங்களை டிரம்ப் அறிவிக்கிறாரா என்கிற ரீதியிலும் பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சம்பவங்களையொட்டி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மோதியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “டிரம்பைக் கண்டு பிரதமர் மோதி அஞ்சுகிறார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில்லை என டிரம்ப் முடிவெடுத்து அறிவிக்க நாம் அனுமதிக்கிறோம். புறக்கணிக்கப்பட்ட பிறகு பிரதமர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகிறார். நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பிரதமர் மோதி எகிப்துக்குச் செல்லவில்லை, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய டிரம்பின் கருத்துகளை மறுக்கவும் இல்லை.” எனத் தெரிவித்திருந்தார்.
இது ராகுல் காந்தி பற்றியது மட்டுமல்ல. டிரம்பின் கருத்துக்களை புறக்கணிப்பதோ அல்லது அமைதியாக இருப்பதோ எளிதல்ல.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டிரம்ப் பற்றிய கேள்விகளுக்கு மிகவும் கவனமுடனே பதிலளித்தார்.
“எனக்குத் தெரிந்தவரை மோதி மற்றும் டிரம்ப் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா தனது எரிபொருள் இறக்குமதி கொள்கையை அதன் நுகர்வோரின் நலன்களை மனதில் வைத்து தான் வடிவமைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
டிரம்ப் பொய் சொல்வதாக இந்தியா வெளிப்படையாக கூறவில்லை. அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக டிரம்புக்கு வாக்குறுதி தரவில்லை என்றும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
“இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் டிரம்ப் இத்தகைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அமெரிக்கா மிகவும் சக்தி வாய்ந்த நாடு, அந்நாட்டின் அதிபர் தெரிவிக்கும் எந்த கருத்துக்கும் இந்தியா கவனமுடனே பதிலளிக்க வேண்டும். இந்தியா இன்னும் கொஞ்சம் தெளிவுடன் பேச வேண்டும்,” என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
பட மூலாதாரம், Getty Images
இரானைப் போல அல்ல ரஷ்யா
டிரம்பின் பேச்சை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல், “அது தான் அவரைக் கையாள்வதில் உள்ள பிரச்னை. டிரம்ப் மாற்றிப் பேசுவார். உரையாடலை அவருக்குச் சாதகமாக புரிந்துகொள்வார்.” எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தார். இரானை ரஷ்யாவுடன் ஒப்பிட முடியாது. ரஷ்யா, பனிப்போர் காலத்திலிருந்து இந்தியாவின் வரலாற்று கூட்டாளியாக இருந்து வருகிறது.
தெற்கு ஆசிய புவிசார் அரசியலை கூர்ந்து கவனித்து வருபவரான மைக்கேல் கூகல்மேன், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக மோதி உத்தரவாதம் அளித்ததாக டிரம்ப் கூறுகிறார். ஆனால் இது நம்புவதற்கு கடினமாக உள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பிறகு இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. ஆனால் ரஷ்யாவைப் போல இரான் நெருங்கிய நண்பர் கிடையாது. மேலும் அப்போது மாற்று விநியோகஸ்தகர்கள் இருந்தார்கள், தற்போது அப்படியான சூழல் இல்லை.” என எழுதியுள்ளார்.
டிரம்ப் பொதுவெளியில் பேசி வருவது பேச்சுவார்த்தைகளை கடினமாக்குவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிருபமா சுப்ரமணியன் தி இந்து நாளிதழுக்காக பாகிஸ்தானில் பணியாற்றியுள்ளார், மேலும் சர்வதேச அரசியலை நெருக்கமாக கண்காணித்தும் வருகிறார்.
டிரம்ப் பேசுகிற விதத்தை பார்க்கிறபோது, இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்கிற முடிவு இருந்திருந்தாலும் அதனை மாற்றியிருப்பார்கள் என்கிறார் நிருபமா.
இந்தியா உத்தி சார்ந்த சுயாட்சியை முன்னிறுத்துகிறது. இதன் அர்த்தம் பொதுவெளியில் இந்தியாவிடம் ஒரு குறிப்பிட்ட நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்காதீர்கள் எனக் கூறுவது என்பது இறையாண்மையுள்ள எந்த ஒரு நாட்டுக்கும் அசௌகரியமாகவே இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
தடுமாற்றமான நிலையில் இந்தியா
இந்தியாவிற்கு பிரச்னைகள் ஏற்படுத்துவது டிரம்ப் மட்டுமே கிடையாது என்கிறா நிருபமா சுப்ரமணியன், “அவர் சர்வதேச அளவில் நிலையற்ற சூழலை உருவாக்கிவிட்டார். அவரின் முதலாவது ஆட்சிக் காலத்திலும் அவர் இந்த எல்லைக்குச் செல்வார் என கணிப்பது கடினமானதாக இருந்தது. ராஜ்ஜிய நடைமுறையில் இல்லாதவற்றை டிரம்ப் செய்து வருகிறார். குறிப்பிட்ட இடைவெளியில் இந்தியாவைப் பற்றி ஏதாவது கூறி வருகிறார், அதற்குப் பதிலளிப்பது இந்தியாவிற்கு கடினமான ஒன்றாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 70 ஆண்டுகளாக வலுவான மற்றும் நிலையான உறவுகளைப் பராமரித்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இருநாட்டின் உறவுகளும் கடந்த 50 வருட உலக அரசியலில் நிலையாக இருந்துவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பனிப்போர் காலத்தில் இந்தியா தன்னை அணி-சேராத நாடாக கருதியது. ஆனால் 1971 போரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவளித்தபோது, சோவியத் ரஷ்யா உடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது.
கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் ரஷ்யா உடனான இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவும் இந்த காலகட்டத்தில் மேம்பட்டுள்ளது, பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யா மீதான இந்தியாவின் சார்பை இது குறைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தகம் 68.7 பில்லியன் டாலரை எட்டியது. இந்தியா அதிகமாக இறக்குமதி செய்துள்ளது. 68.7 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டுள்ள முதலிடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து, வங்கி. ரயில்வே மற்றும் இரும்பு போன்ற துறைகள் அடங்கும். அதே போல் இந்தியாவும் ரஷ்யாவில் எண்ணெய், எரியாவு மற்றும் மருந்து துறைகளில் முதலீடு செய்துள்ளது. சர்வதேச சந்தையைவிட ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெயைப் பெறுகிறது இந்தியா, ஆனால் அந்த விலை வித்தியாசம் சீராக குறைந்து வருகிறது.
ப்ளூம்பர்கில் வந்துள்ள செய்தியின்படி, அக்டோபர் 15-ஆம் தேதியின்படி இந்தியா கச்சா எண்ணெயை சர்வதேச விலையை விட ரஷ்யாவிடமிருந்து ஒரு பேரலுக்கு 2 – 2.5 டாலர்கள் குறைவாகப் பெற்று வருகிறது. 2023-இல் இந்த விலை வித்தியாசம் ஒரு பேரலுக்கு 23 டாலராக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எது பலனளிக்கும்?
கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏவின் படி, ரஷ்யா எண்ணெயின் தள்ளுபடி விலை குறைந்ததால் இந்தியா 3.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே சேமிக்க முடிந்தது. மறுபுறம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. கடந்த ஆண்டு 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை அமெரிக்காவிற்கு இந்தியா விற்றுள்ளது.
இந்தியா கடினமான சூழலில் இருப்பதாகக் கூறும் நிருபமா, “ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் நம்முடைய மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்கா உடனான உறவுகள் பாதிக்கப்படும். ஒருவேளை எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டால், ரஷ்யாவுடனான நமது நீண்டகால நட்பு நம்பிக்கை இழந்து போகும்.” எனத் தெரிவித்தார்.
டிரம்பின் வரிகளால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52% குறைந்து இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஜிடிபி 0.8% சரியக்கூடும் என ப்ளும்பெர்க் எகனாமிக்ஸ் தெரிவிக்கிறது.
ஸ்டாண்டர்ட் சார்டர்ட் கணிப்புகளின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவின் இறக்குமதி செலவுகள் 4 பில்லியன் டாலரிலிருந்து 6.5 பில்லியன் டாலர்கள் ஆக அதிகரிக்கும்.
“இந்த நிதியாண்டில் ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, ரஷ்யாவிலிருந்து 19.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22.3 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 11.2 சதவிகிதம் குறைந்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆக்ஸ்ட் வரை 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது, ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது, 78.6% அதிகரித்துள்ளது.” என்றார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
இதன் பொருள் இந்தியா, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியை குறைத்துள்ளது. இருந்தபோதிலும் டிரம்ப் மகிழ்ச்சியாக இல்லை, இந்தியா தடுமாற்றமான நிலையில் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு