பட மூலாதாரம், Getty Images
மும்பையில் வசிக்கும் 21 வயதான ஜீல் பாண்டியா அமெரிக்காவில் இருக்கும் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டம் பெற விரும்புகிறார்.
அமெரிக்காவில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது பற்றியும், அவரது பட்ட படிப்பு குறித்தும் அவர் உற்சாகமாக இருக்கிறார்.
தற்போது அமெரிக்கா செல்வதற்கான விசாவிற்காக அவர் காத்திருக்கிறார், அவர் பிபிசி இந்தியிடம் காணொளி காட்சி மூலம் பேசினார்.
“நான் என் குடும்பத்துடன் அமர்ந்திருந்தேன். நாங்கள் தேநீர் பருகிக் கொண்டு தொலைக்காட்சியில் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பின்தான் நான் உண்மையிலேயே அமெரிக்கா செல்ல விரும்புகிறேனா என என் தந்தை கேட்டார். எல்லா நாளும் கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து செய்திகள் வருகின்றன. அவர் அதை பற்றி கவலையடைந்துள்ளார். அதன் பின்னர் ‘படிப்பை முடித்த பின்னர் நான் அங்கு பணியாற்றமுடியுமா?’ போன்ற பல கேள்விகளை கேட்டார். அவருக்கு நம்பிக்கையளிக்க என்னால் இயன்றவரை நான் பதில் கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் இன்னும் கவலையில்தான் இருக்கிறார்.”
உண்மையில் அமெரிக்காவில் படிப்பது குறித்து ஜீலின் வீட்டில் காணப்படும் கவலை, தற்போது இந்தியாவில் பல வீடுகளில் காணப்படுகிறது.
அண்மையில், இந்தியாவில் உள்ள ஜீல் போன்ற மாணவர்கள் மற்றும் நிபுணர்களிடம் பிபிசி இந்தி பேசியது . அவர்கள் மனதில் இருந்த கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மையை நாங்கள் உணர்ந்தோம்.
பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் கவலை ஏன்?
இந்திய அரசு தரவுகளின்படி, உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
2024 ஆம் ஆண்டில், 750,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றனர். இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவிற்கு சென்றனர். வெளிநாடு சென்ற மாணவர்களில் இது சுமார் 27 விழுக்காடு.
ஆனால் 2023 ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை-அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டைவிட அதிகமாக இருந்தது.
ஆனால், அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போது காரணங்களை குறித்து பேசலாம்.
கடந்த வருடம் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில், காஸா போருக்கு எதிராக மாணவர்கள் அமெரிக்காவில் பல கல்லூரிகளில் போராட்டம் நடத்தினர். அந்த மாணவர்களில் பலரை காவல்துறையினர் கைதும் செய்தனர்.
அதன் பின்னர் அமெரிக்காவில் மாணவர்களுக்கான கல்வி சூழல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த வருடம் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, கொள்கை மறுஆய்வு, பல்கலைக்கழகங்களுக்கான நிதி அளிக்கும் முறையில் மாற்றம், சில மாணவர்களின் கைதுகள் போன்ற செய்திகள் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
“நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கிறது”
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற பயின்று வரும் தேஜஸ் ஹராத், இந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு சென்றார். கடந்த சில வாரங்களில் வளாகத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப்பதாக அவர் சொல்கிறார்.
“ஒவ்வொரு நாளும் புதிய உத்தரவு குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைக்கிறது. நாளை என்ன நடக்கப் போகிறது? அடுத்த வருடம் என்ன நடக்கும்? என்பதை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தங்கள் செலவுகளை எப்படி திட்டமிடுவது என மக்கள் சிந்தனையில் இருக்கின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் தினமும் விவாதிக்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் வருகின்றன. இருப்பினும் இப்போதைக்கு எங்களுக்கான நிதி மீது எந்த தாக்கமும் இருக்காது என எங்கள் பல்கலைக் கழகம் உறுதியளித்திருக்கிறது. ” என அவர் சொல்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு காரணங்களை கூறி, நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பிரச்னைகளை அதிகரித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு பயோமெடிக்கல் ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் நிதி நிறுத்தப்படும் என நிர்வாகம் பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இந்த முடிவு 4 பில்லியன் டாலர்களை (ரூ.34,400 கோடி) சேமிக்கும் என கூறப்பட்டது.
முன்னதாக, யூத மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி கொலம்பிய பல்கலைக் கழகத்திற்கு 400 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு நிறுத்தியது.
இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் அமெரிக்க அரசு 175 மில்லியன் டாலர்(சுமார் ரூ.1500 கோடி) அரசு நிதியை நிறுத்தியது.
இதுபோன்ற முடிவுகள், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், ஸ்டான்ஃபோர்டு மற்றும் நார்த்வெஸ்டர்ன் போன்ற பல நிறுவனங்கள் புதிய ஆள் சேர்ப்பு மற்றும் பிற அத்தியாவசியம் அல்லாத செலவுகளை நிறுத்தி வைக்க காரணமாக அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் மீது நடவடிக்கை
கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில மாணவர்களை நிர்வாகம் கைது செய்துள்ளது. அவர்களின் விசாக்களையும் ரத்து செய்ய அது முடிவு செய்துள்ளது.
இந்த மாதம் கொலம்பியா பல்கலைக் கழத்தில் முதுகலை மாணவரான ரஞ்சனி ஶ்ரீனிவாசனின் விசா ரத்து செய்யப்பட்டது. இதன் பின் அவர் தானாகவே நாட்டை விட்டு வெளியேறினார். வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஆதரித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார்.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், இந்திய குடிமகனுமான பாதர் கான் சூரி, ஹமாஸை ஆதரித்ததாகவும், அதன் தீவிரவாத குழுவின் தலைவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். சூரியின் வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்த அமைப்புகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரி விகிதமும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
“அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்”
இந்த காரணங்களை விளக்கி, இந்த ஆண்டு, அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டுகளை விட குறைவாக இருக்கும் என கிட்டத்தட்ட அனைத்து நிபுணர்களும் பிபிசி இந்தியிடம் தெரிவித்தனர்.
“அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கான விண்ணப்பங்கள் குறைந்திருப்பதாக தெரிகிறது. அவற்றின் பிரதிநிதிகள் இந்த எண்ணிக்கை குறித்து கவலை கொண்டுள்ளனர்,” என்கிறார் அட்வைஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் உரிமையாளர் சுஷீல் சுக்வானி.
“நிச்சயமற்ற தன்மையை டிரம்ப் விரும்புகிறார் என நினைக்கிறேன், ஆனால் இது தீங்கானதும்கூட. அவர் தனது முடிவுகளை தெளிவாக எடுத்தால் உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் மாணவர்கள் அமெரிக்கா மீது நம்பிக்கையிழந்து வேறு எங்கேனும் பார்க்க தொடங்கிவிடுவார்கள்.” என்றார் அவர்.
71 அமெரிக்க ஆய்வு பல்கலைக்கழங்களை கொண்ட அமெரிக்க பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பான அசோசியேசன் ஆஃப் அமெரிக்கன் யுனிவர்சிடிஸ்-ஐ தொடர்பு கொள்ள பிபிசி இந்தி முயற்சி செய்தது. ஆனால் பதிலேதும் கிடைக்கவில்லை.
மாணவர்கள் மீதான தாக்கம்
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் பேசிய பல மாணவர்கள், இந்த சம்பவங்கள் அவர்கள் மனதிலும், அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் அமெரிக்காவில் கல்வி பயில்வது குறித்த கேள்விகளை எழுப்புவதாக கூறினர்.
அமெரிக்காவில் கல்வி பயில ஜீல் பாண்டியா தந்தையிடம் வலியுறுத்தினார் என்றால், அனீஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அமெரிக்காவில் பயிலும் கனவை கைவிட்டுவிடக் கூடாது என்று அவரது உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
அனீஷ் பேசுகையில்,”எனது படிப்பை முடித்த பிறகு அங்கு ஒரு வேலை கிடைக்குமா? வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் சந்தை இருக்குமா? நான் நம்பிக்கை இழந்து ஐரோப்பிய நாடுகளில் வாய்ப்புகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் எனது உறவினர்கள் நான் அமெரிக்காவில்தான் படிக்கவேண்டும் என்றார்கள். இப்போது நான் அமெரிக்கா செல்வதற்கு மீண்டும் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.” என்றார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையளர் மேக்நாத் போஸ் நியூயார்க்கில் இருக்கிறார். அவர் தனது முதுநிலை பட்டத்தை கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து கடந்த ஆண்டு பெற்றார்.
அவர் பிபிசி இந்தியிடம்,” இங்கு இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் கவலையும், அச்சமும் உள்ளது. மாணவர்கள் அவர்கள் சமூக ஊடகங்களில் எழுதுபவை குறித்து அச்சமுடன் இருக்கின்றனர். உதவித்தொகை அடிப்படையில் இங்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கு மேலும் உதவித்தொகை கிடைக்குமா இல்லையா என்பது தெரியாமல் இருக்கின்றனர். கல்வி கற்று முடித்த பின்னர் வேலை பெறுவதற்கான விதிகளில் ஏதேனும் மாற்றம் இருக்குமா ? அமெரிக்காவில் விஷயங்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. டிரம்பின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. இத்தனை மாற்றங்களையும் ஒரே நேரத்தில் மாணவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பது குறித்து அது சிந்திக்கவில்லை. “
“அமெரிக்க பல்கலைக் கழகங்களில் அடுத்த ஆண்டு பிஹெச்டி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் சரிவு இருக்கும் என நான் கணிக்கிறேன்,” வளாகத்தில் நிகழும் உரையாடல்களை விளக்கி தேஜஸ் சொல்கிறார்.
பொதுவாக பிஹெச்டி மாணவர்களுக்கு கல்வி பயிலும் காலம் முழுமையும் உதவித்தொகையும் மற்றும் பிற செலவுகளுக்கு ஒரு மாதாந்திர தொகையும் வழங்கப்படுகிறது. பதிலாக அவர்களது படிப்பு மட்டுமல்லாது, அவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு அவர்களது பணியில் உதவுகின்றனர்.
சுயாஷ் தேசாய் ஒரு ஆய்வு மாணவர். அவர் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை நுணுக்கமாக கவனிக்கிறார்.
கடந்த வருடம் பிஹெச்டி படிக்கும் எண்ணத்துடன் அவர் அமெரிக்காவில் இருக்கும் 12 பல்கலைக்கழகங்களின் கதவுகளை தட்டினார். அவரால் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
“நான் இந்த இடத்தை பல ஆண்டு முயற்சிக்கு பிறகு அடைந்திருக்கிறேன். பொதுவாக பிஹெச்டி கிடைக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம், அனால் இந்த வருடம் சராசரியான வருடம் அல்ல. நான் புரிந்துகொண்டவரையிலும் அமெரிக்காவில் தற்போது பல ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் தங்களை தாங்களே காப்பாற்ற முயற்சிக்கின்றன. அவர்கள் தங்களது தற்போதைய மாணவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் புதிய பிஹெச்டி மாணவர்களை மிகவும் குறைவான அளவில் வைக்க விரும்புகின்றனர்,” என சொல்கிறார்.
அமெரிக்க தூதரக செய்தித்தொடர்பாளர் சொன்னது என்ன?
சில கல்வி உதவித்தொகை திட்டங்களில் மாணவர்கள் பிரச்னைகளை சந்திக்கிறார்களா என இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி கேட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “வெளியுறவு அமைச்சகம் செய்துவரும் பணிகள் ‘முதலில் திட்டத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது. இதில் கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற திட்டங்களும் அடங்கும்,” என்றார்.
கல்வி உதவித்தொகை பெறுவதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அரசு ஏதேனும் உதவி வழங்குமா ?
சில திட்டங்கள் பாதிக்கப்படும் என தூதரகம் தெரிவித்தது. ஆனால் அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை தரவில்லை.
அரசின் திட்ட ஆய்வு எப்போது நிறைவடையும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை.
கல்வி ஆலோசகன் கரண் குப்தா,”சில பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு அளித்த வாய்ப்பைக் கூட திரும்பப் பெற்றுள்ளன. இது குறிப்பாக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஃபெல்லோஷிப் பெறுபவர்களை பாதிக்கும். இந்த பாடங்களில் வெளியிலிருந்து கிடைக்கும் நிதி பெரும் பங்காற்றுகிறது.” என தெரிவித்தார்.
அமெரிக்கா மீதான கவர்ச்சி குறைகிறதா?
இந்த கேள்வி குறித்து நிபுணர்களின் முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன.
இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ஃபாரின் ஸ்டடீஸ்-ன் நிறுவனர் மற்றும் இயக்குநர் கேபி சிங்.
அவரைப் பொருத்தவரை,”நவீன ஆய்வில் பணியாற்ற விரும்புவோருக்கு அமெரிக்க பல்கலைக் கழகங்கள் இன்னமும் ஒரு பெரிய ஈர்ப்புதான். நமது மாணவர்கள் மேம்பட்ட கல்வி தரத்திற்காக அங்கு செல்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும்படி அவர்களிடம் நாங்கள் சொல்கிறோம்.”
“இன்று உலகெங்கும் வெளிநாடு சென்று பயிலக் கூடிய மாணவர்கள் அதிகம் இருப்பது இந்தியா மற்றும் சீனாவில்தான். சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை பார்க்கிறோம். எனவே இந்த சந்தை இந்தியாவை மட்டுமே சார்ந்து இருக்கிறது. எனவே நல்ல கல்வி கொடுக்கும் நாடுகள் அனைத்துக்கும் இந்திய மாணவர்கள் தேவை. இதில் அமெரிக்காவும் இருக்கிறது.”
அமெரிக்காவில் அரசு பின்வாங்கும் இடங்களில் தனியார் நிறுவனங்கள் முன்வரும் என்பதால் அமெரிக்காவில் ஆய்வு வாய்ப்புகள் குறையாது என கேபி சிங் கருதுகிறார்.
ஆனால் அட்வைஸ் இண்டர்நேஷனலின் சுஷீல் சுக்வானியின் கூற்றின்படி, படிக்கும் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர பிற வாய்ப்புகளையும் பார்த்து வருகின்றனர்.
“மாணவர்கள் புதிய நாடுகளை தேடத் தொடங்கியுள்ளனர். ஜெர்மனி கவனம் பெறுகிறது. பிரான்சும் பார்க்கப்படுகிறது. துபை பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் அதுவும் கவனம் ஈர்க்கிறது. மாணவர்கள் அங்கு பணியாற்ற முடியும், அங்கு படிக்கலாம், அங்கு பணியாற்றலாம். அயர்லாந்து முன்பைவிட சிறப்பாக செயல்படுகிறது.”
“அமெரிக்க அதிபர் டிரம்ப், பெரிய நிறுவனங்களுக்கு நிதியை நிறுத்தும்போது, நீண்டகால வேலை குறித்து எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் நிச்சயம் பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாணவர்கள். அவர்கள் இப்போது பிற நாடுகளை பார்க்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் அவர்.
டிரம்ப் நிர்வாகத்தின் நிதியை நிறுத்தும் உத்தரவை எதிர்த்து அசோசியேசன் ஆஃப் அமெரிக்கன் யுனிவர்சிடிஸ் மற்றும் பல கல்லூரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிதி நிறுத்தம் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மருத்துவ ஆய்வை அழித்துவிடும் என அது எச்சரித்துள்ளது.
மாணவர்கள் நம்பிக்கை
ஷ்ரேயா மல்வன்கர் தனது பட்டப்படிப்பை மும்பையில் படித்து வருகிறார்.
இதன் பின்னர் அமெரிக்காவில் இருக்கும் பர்டியூ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற அவர் விரும்புகிறார். அவர் ஒரு டாட்டா அனலிஸ் எனப்படும் தரவு பகுப்பாய்வாளர் ஆக விரும்புகிறார்.
அமெரிக்காவில் நடப்பதை எப்படி பார்க்கிறார் என அவரிடம் கேட்டோம்.
“ஆம் எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அங்கிருக்கும் தரம் மற்ற நாடுகளைவிட சிறப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால்தான் நான் அங்கு செல்ல விரும்புகிறேன். பர்டியூவிலிருந்து எனக்கு பகுதி கல்வி உதவித்தொகை கிடைத்திருக்கிறது. இது எனது வாழ்வை சற்றே சுலபமானதாக்கியுள்ளது. நான் ஒரு கடனையும் வாங்கவிருக்கிறேன். என் பெற்றோர் மீது சுமையை ஏற்ற விரும்பவில்லை. ஆனால் அங்கு நிலைமை விரைவில் முன்னேறும் என எதிர்பார்க்கிறேன். இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் அச்சமடைவார்கள். அமெரிக்காவில் படிப்பதற்கு முன்பு அவர்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திப்பார்கள்.” என்றார் அவர்.
தி கோர்னெல் டெய்லி சன் என்பது 1880-ல் உருவாக்கப்பட்ட அந்த கல்லூரியின் தன்னிச்சையாக நடத்தப்படும் செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியர் டோரத்தி மில்லர் என்பவர் ஆவார். இவர் கார்னெல் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவராக இருக்கிறார்.
இந்த குழப்பத்தில் ஒரு நேர்மறையான விளைவு மாணவர் குழுக்கள் தங்கள் சமூகத்திற்குள்ளே ஆதரவை பெறுகின்றன என்பதுதான் என்கிறார் அவர்.
“மாணவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஆதரவை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் உறுதியை எதிர்பார்க்கின்றனர். அதை அவர்களின் சமூகங்களில் அவர்கள் பெறுகின்றனர்.,” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.